காலை வணக்கம்
வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஹனுமனின் அறிவுரை
பதிவு எண் 381
ஹனுமன் அங்கதனிடம் ஒரு அரசகுமரனின் புத்திக் கூர்மைக்கு வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுவதைப் பார்த்தோம். அந்தப் பதிவின் தொடர்ச்சி........................
இவ்வாறு ஹனுமன் அங்கதனைப் புகழ்ந்து அதே நேரம் வானரங்கள் தங்களுக்குள் என்ன செய்ய வேண்டும் என்கின்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும்படி செய்தான். அங்கதனை நோக்கி அவன் மீண்டும் பேசினான்.
“தாரையின் செல்வனே! ஆண்மையில் தந்தைக்கு நிகரானவனே! நம் எல்லோருக்கும் தலைவனான அரசனது காரியத்தில் ஈடுபட ஆவல் கொண்ட நீ தாரன் சொன்ன ஆலோசனையை ஆழ்ந்து கவனிப்பாயாக. அரசன் கட்டளையைப் புறக்கணித்து அவனிடமிருந்து தப்பி யாரும் காணாது குகையில் வசிக்கலாமென்பது வானரர்களின் மேன்மையை விளக்கும் ஆலோசனைதான் என்று சிந்தனை செய்வாயாக.
==========================================
त्वाम् न एते हि अनुयुंजेयुः प्रत्यक्षम् प्रवदामि ते |
यथा अयम् जांबवान् नीलः सुहोत्रः च महाकपिः || ४५४१०
न हि अहम् ते इमे सर्वे साम दान आदिभिः गुणैः |
दण्डेन न त्वया शक्याः सुग्रीवात् अपकर्षितुम् || ४५४११
===========================================
எதற்குஞ் சலியாத மனவலிமை கொண்ட நீ வானர ராஜ்ஜியத்தை ஆளப் பெரும் ஆண்மை கொண்ட யுவராஜன். உன் ஆணவத்தையும் ஆற்றலையும் நன்குணர்ந்து அவைகளை நம்பி ஜாம்பவான், நளன், நீலன், ஸுகோத்திரன் முதலிய வானரத் தலைவர்களும் மற்ற வானரர்களும் நானும் உன்னைப் பின்பற்றி வந்தோம்.. கீர்த்தி பெற்ற பெரியார்கள் எடுத்த காரியத்தை விடுத்து, அரசர் ஆணையை அலட்சியம் செய்து அச்சமுற்றுத் தனியே இக்குகையினுள் உன்னுடன் இழிவாகக் காலங் கழிக்க இசைவார்களா?
கிஷ்கிந்தையில் தனது மனைவி மக்களையும் செல்வத்தையும் விட்டுவிட்டு இங்கு தனிமையில் வாழ்வார்களா? முடிவு என்னாகும் என்று கணித்தாயா? வானரர்களுள் பிளவு கண்டு இரு கட்சியாகி இக்குகையில் உன்னுடன் வசிப்பவர்கள் என்றும் , அரசனைச் சார்ந்து அவன் அரசில் பங்கு கொண்டவர்கள் என்றும் இரு தரமாகவா நம் சமூகம் பிரிந்து போகவேண்டும். அரசனை எதிர்த்துக் கொள்வதா நலனாகும்? ஒரு வேளை அவனை எதிர்க்காமல் தலைமறைவாய் இக்குகையில் தப்பி வாழ்வோமென்றால் எவ்வளவு நாள் அப்படிச் செய்ய முடியுமென்பது சிந்தனையிலிருக்கட்டும். இக்காரியம் அரசனுடைய காரியமாத்திரமன்று. சர்வ வல்லமை கொண்ட சர்வேச்வரனைப் போன்ற ஸ்ரீ இராமச்சந்திரனின் காரியமல்லவா இது? இதை மறந்தால் அவனிடமிருந்து தப்புவதேது. வல்லமையே உருவாயிருந்த வாலியின் கதி என்னாயிற்று?
இக்குகையை அவர்களால் கண்டுபிடிக்க முடியாதா? கண்டுபிடித்த பின்பு இலக்ஷ்மணனின் பாணங்களுக்கு இக்குகை இரையாகாது நிற்குமா? நொடிப்பொழுதில் இக்குகையும் இதன் பாதுகாப்பும் பொடிப்பொடியாய்ப் போகுமே. அதில் இருப்பவர்கள் மண்ணோடு மண்ணாக மடியவேண்டுமே தவிர வேறில்லையே? இதை நினைக்க எந்த வானரர்கள் இங்கு உன்னுடன் தங்கியிருப்பார்கள். நீதி முறையை நன்கு அறிந்தவர்கள், தவணை கடந்தபோதிலும், தங்கள் இலட்சியம் நிறைவேறாவிடினும் அரசனிடம் சென்று எங்களால் இயன்றவரை முயன்றோம் பயனில்லை என்று உண்மையுரைத்து, அவன் ஆணையை எதிர்பார்த்து இருப்பர். நீயும் இதை உணர்ந்ததில்லையா? சுக்ரீவர் உன்னை உதாசீனப் படுத்தி விடுவாரா? அவருக்குப் பின் அரசாள வேண்டிய உன்னை அவமதிப்பாரா? மனச்சாட்சிக்கு யாதொரு குறைவின்றி, சோர்வின்றி, தம் கடமையைச் செய்தோர் , மிக்க முயற்சி செய்தோம் என்பதை அரசனிடமும் இராம இலக்ஷ்மணர்களிடமும் தெரிவிக்காது அவர்களிடமிருந்து ஓடி ஒளிந்த இழிந்த வாழ்வு வாழ்வதா வானரர்களுடையவும், இளவரசனான உன்னுடைய பெருமையுமாகும்? அப்பனே! உனக்கு எதிராகவும் உன்னைத் துன்புறுத்துவதற்கும் நான் பேசவில்லை, உண்மையை உணர்ந்து நேர் முறையில் செல்லவேண்டும் என்பதே என் கருத்து. ஆகையால் சோர்வற்று ஆணவத்துடன் ஏழு. முன் நில்” என்றான்.
தொடரும்.......................
No comments:
Post a Comment