வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சம்பாதியின் வருகை
பதிவு எண் 385
நேற்றைய தொடர்ச்சி......................
ஜடாயுவின் சகோதரன் சம்பாதி தனது வரலாற்றைக் கூறுகிறது.
“வெகு காலத்திற்கு முன்பு இந்திரன் விருத்தாசூரனைக் கொன்ற பிறகு நானும் என் சகோதரனாகிய ஜடாயுவும் எங்கள் வல்லமையைச் சோதிக்க இந்திரனைப் போருக்கு அழைத்தோம், ஆகாயத்தில் உயர பறந்த நாங்கள் தேவலோகம் போகும் வழியில் இந்திரனை ஜெயித்தோம். இதனால் செருக்கு அடைந்த நாங்கள் இன்னும் உயரே பறக்க எண்ணினோம். ஆனால் சூர்ய மண்டலத்தை அடைந்தவுடன் வெப்பத்தால் ஜடாயு தன்நினைவை இழந்தான், அவனைக் காப்பாற்ற நான் என் இறகுகளால் அவனை மறைத்தேன். ஆனால் அதன் விளைவாக எனது இறகுகள் எரிந்து விட்டன, நான் விந்திய மலையில் வந்து விழுந்தேன்”.
உடனே அங்கதன் “உண்மையாக நீ ஜடாயுவின் மூத்த சகோதரனாக இருந்து எங்கள் நலனை நாடுவதாக இருந்தால் இராக்ஷஸர்களின் தலைவன் இராவணனின் இருப்பிடத்தைக் கூறவேண்டும்” என்று இடைமறித்துக் கேட்டான்.
======================================
निर्दग्ध पक्षो गृध्रो अहम् गत वीर्यः प्लवम् गमाः |
वाङ् मात्रेण तु रामस्य करिष्ये साह्यम् उत्तमम् || ४-५८-१२
========================================
சம்பாதி “நான் மிகவும் வயோதிகனாகவும் என் இறகுகள் எரிந்துவிட்டதாலும் என்னால் உடல் அளவில் இராமருக்குத் தொண்டு செய்ய இயலாமல் இருக்கிறேன். அதனால் நான் என் சொல் திறமையினால் உதவி புரிகிறேன். ஒரு யுவதியை இராவணன் கடத்திச் சென்றதாகக் கேள்விப்பட்டேன். அவள் இராமா!இராமா! என்று கூக்குரல் எழுப்பினாள் என்றும் தனது சில ஆபரணங்களை நிலத்தில் போட்டதாகவும் கேள்விப்பட்டேன். அந்தப் பெண் தான் சீதையாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன். இந்த இராவணன் அரக்கர்களுக்கு அரசன்.
======================================
पुत्रो विश्रवसः साक्षात् भ्राता वैश्रवणस्य च |
अध्यास्ते नगरीम् लंकाम् रावणो नाम राक्षसः || ४-५८-१९
========================================
அவன் விஸ்ரவசுவின் புதல்வன். குபேரனின் சகோதரன்.அவனுடைய ராஜ்ஜியம் இலங்கை ஒரு தீவு. தென் கடற்கரையிலிருந்து நூறு யோசனை தூரத்தில் உள்ளது.. இங்கு ஆரண்ய காண்டம் அறுபத்து எட்டாவது சர்கத்தில் மரணப் படுக்கையில் உலா ஜடாயு இராவணனை पुत्रो विश्रावासः साक्षात् भ्राता वैश्रवाणस्य च | इति उक्त्वा दुर्लभान प्राणान मुमोचा पतागेश्वरा ப்பற்றிச் சொல்லும்போது அவன் விஸ்ரவசுவின் புதல்வின் குபேரனின் சகோதரன் என்று மட்டும் மேலே சம்பாதி சொல்வது போல ஆரம்பித்து அவன் இலங்கையின் அரசன் என்று இரண்டாவது வரியைச் சொல்லும் முன் இறந்து விடுகிறான். ஜடாயு அந்த இரண்டாவது வரியைச் சொல்லி இருந்தால் கிஷ்கிந்தா கண்டம், சுந்தர காண்டம் ஆகியவை இருந்திருக்காது. இராமன் சுக்ரீவனைச் சந்தித்திருக்க மாட்டான். வாலி வதம் நடந்து இருக்காது. நேராக இராமன் இலங்கைக்குச் சென்று யுத்த காண்டத்தை நடத்திச் சீதையை மீட்டுச் சென்றிருப்பான்.
தொடரும்
No comments:
Post a Comment