வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சம்பாதியின் வருகை
பதிவு எண் 390
நேற்றைய தொடர்ச்சி
ஜடாயு, சம்பாதி பற்றி நிறையை புராணக் கதைகள் கிடைக்கின்றன.அதில் ஒன்று சம்பாதி முருகப் பெருமானுக்குச் செய்த உதவி. பர்ணசாலையில் இருந்து ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது எதிர்ப்பட்ட கழுகரசன் ஜடாயு ராவணனை எதிர்த்து வீரப் போர் புரிந்தான். ஆனால், ராவணனின் வாளுக்குத் தப்ப முடியாமல் இறக்கை அறுபட்டு நிலத்தில் வீழ்ந்து குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தான். அந்நேரம் சீதையைத் தேடிக்கொண்டு இராமபிரானும் அங்கே வந்தார். ஜடாயுவின் நிலையை அறிந்து வருத்தம் கொண்டார். அவரிடம் தகவல் கேட்டு, அவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
சீதையைத் தேடிக் கொண்டு இலங்கை செல்லும் அனுமன் மூலம் இதனைக் கேட்டறிந்தார் ஜடாயுவின் சகோதரன் சம்பாதி. தன் சகோதரனின் ஈமச் சடங்குகளை தன்னால் செய்ய இயலாது போய் விட்டதே என்று வருத்தப்பட்டார். இதனால் தனக்கு எழும் பாவத்தை எப்படிக் கழுவுவது என்று யோசித்தார். அதற்கு விடை கிடைத்தது சம்பாதிக்கு. கஜமுக பர்வதத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தால், சரியான தீர்வு கிடைக்கும் என்றது அசரீரி. அதன்படி சம்பாதி கஜமுக பர்வதத்திலேயே பல காலம் தங்கியிருந்து பூஜை செய்து வந்தார்.
ஒருநாள்.. முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியே சென்றார். அந்நேரம் இந்தப் பகுதியில் வாழ்ந்த சாதுக்களையும் அப்பாவி மக்களையும் முனிவர்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசுரன் துன்புறுத்தி வந்ததைக் கண்ணுற்றார் முருகப் பெருமான். முதலில் தாரகாசுரனை வதம் செய்ய எண்ணினார். ஐப்பசி பஞ்சமி திதியில் தாரகாசுரனை வதம் செய்த முருகப் பெருமான், பின்னர் களைப்பு தீர கஜமுக பர்வதத்தில் சற்றே ஓய்வெடுத்தார். அந்நேரம் சம்பாதி முருகப் பெருமானுக்கு அனைத்து வித உபசாரங்களையும் செய்து, அவரை வணங்கினார். பின்னர் சூரபத்மன் இருக்கும் இடத்தையும் முருகப் பெருமானுக்குக் காட்டித் தந்தார். இதனால் மனம் மகிழ்ந்த முருகப் பெருமான், சம்பாதியின் சங்கடத்தைத் தீர்த்து, நல் முக்தி நல்கினார். சம்பாதியின் பாவம் கரைந்தது. கழுகு அரசனாகிய சம்பாதி தவக்கோலம் கொண்டு வாழ்ந்த கஜமுக பர்வதம் பின்னர் கழுகு மலை எனப் பெயர் பெற்றது.
தொடரும்
No comments:
Post a Comment