அதாகப்பட்டது
விதி
என்ன செய்துவிடும்?
இப்படிகேட்ட இருவர் விதியிடம் சரண்டர் ஆன கதை இங்கு சொல்லப்போவது. உங்களுக்கும் தெரிந்து இருக்கும். ஒரு
நினைவூட்டல்...
அது ஜனமேஜயன் அரசவை
ஜனமேஜயன் யார் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். அர்ஜுனனின்
புதல்வன் அபிமன்யு. அபிமன்யுவின் புதல்வன் பரிக்ஷித். அவனது புதலவன்தான் ஜனமேஜயன்.
ஹஸ்தினாபுரத்து அரசன்.
ஒரு நாள் ஜனமேஜயன் தனது
மந்திரிகள், பிரதானிகளுடன் அரசவையில் அளவளாவிக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென்று வேதவியாசர் அவையில் நுழைந்தார். வியாசர் முதலில்
ஜனமேஜயனுக்கு பாட்டன் முறை. அவரைக் கண்டதும் குல முதல்வர் என்ற முறையிலும் தவ
வலிமை கொண்டவர் என்ற காரணத்தினாலும் மகிழ்வுடன் வணங்கி, வரவேற்று, அவருக்கு பாத பூஜைகள் செய்து
ஆசனத்தில் அமர வைத்தான்.
பிறகு அவரிடம் பேச ஆரம்பித்தான்.
“முனிவரே, எனக்கு ஒரு சந்தேகம் தங்களுக்கு முக்காலமும் அறிந்து கொள்ளும் சக்தி
உள்ளது என்பது உண்மைதானே? என்று வினவினான்.
வியாசரும் சிரித்துக்கொண்டே ‘ஆமாம் அது உண்மைதான். எனது தவ வலிமையால்
எனக்கு அது கிடைத்தது” என்று பதிலுரைத்தார்.
ஜனமேஜயன் தொடர்ந்தான் ‘முனிவரே இவ்வளவு பெரிய யுத்தம் மூண்டு
லட்சக்கணக்கான பேர் மாண்டு போனார்களே? பீஷ்மர், துரோணர் போன்ற பல முக்கியாமனவர்கள்
அழிந்து போனார்களே? இரண்டு தரப்பிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லோரும் அழிந்து
போனார்களே? முக்காலமும் உணர்ந்த உங்களுக்கு தெரியும் இப்படி ஒரு யுத்தம்
வரப்போகிறதென்று. இத்தனை அழிவை நீங்கள்
நினைத்தால் ஏதாவது செய்து தடுத்து
இருக்கமுடியுமே. நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?” என்று ஒரு பெரிய கேள்வியைச்
சுலபமாக எழுப்பினான்.
வியாசரோ “எவ்வளவு பெரிய விஷயத்தை மிகச் சுலபமாக இவன் இப்படிச் சபையில்
சான்றோகள் முன் கேட்டுவிட்டானே. இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா இல்லை வேண்டாமா?”
என்று நினைத்துச் சிரித்துக்கொண்டே மௌனமாக இருந்துவிட்டார்.
ஜனமேஜயன் விடவில்லை. அவரிடம் மீண்டும் ‘சுவாமி நான் சபையில் கேள்வி
கேட்கிறேன் . நீங்கள் பேசாமல் உள்ளீர்கள். நான் கேட்ட கேள்விக்கு பதில்
சொல்லுங்கள். நீங்கள் ஏன் மகாபாரதப் போரை தடுத்து இருக்கக்கூடாது?” என்று மீண்டும்
கேட்டான்.
மீண்டும் வியாசர் சிரித்துவிட்டு மௌனமாக இருந்தார்.
ஜனமேஜயன் விடவில்லை ‘சுவாமி! நான் மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? என்றான்.
வியாசர் ‘ஜனமேஜயா... நீ கேட்பதெல்லாம் சரி. எனக்கு முக்காலம் அறியும்
சக்தி உண்டு. போர் வருவது எனக்கு நன்றாக தெரியும், ஆனால் நான் நினைத்து
இருந்தாலும் இந்தப் போரைத் தடுத்திருக்கமுடியாது “ என்றார்
ஜனமேஜயன் மீண்டும் அவரை விடவில்லை. ‘ஏன் உங்களால் அந்தப் போரைத்
தடுத்து இருக்கமுடியாது காரணம் சொல்லுங்கள்? என்று வினவினான்.
ஜனமேஜயன் இளைஞன். அவனால் வியாசர் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
வியாசர் ‘ஜனமேஜயா நான் நினைத்து இருந்தாலும் தடுத்திருக்க முடியாது?”
என்றார்
இளமை வேகம். ஜனமேஜயன் அவரை விடவில்லை ‘சுவாமி குல முன்னவர் என்ற
முறையில், நீங்கள் இன்ன இன்ன ஆபத்து
வரப்போகிறது என்று சொல்லி இருந்தால் எல்லோரும் கேட்டு இருப்பார்களே” என்று சொல்ல
வியாசரோ ‘கேட்டிருக்க மாட்டார்கள்” என்றார்.
‘சுவாமி நீங்கள் சொல்வதை துரியோதனனும் அவனது சகோதரர்களும் ஏற்றுக்கொள்ளாமல்
இருந்திருக்கலாம். ஆனால் என் பாட்டன் தர்மர்
நீங்கள் சொல்வதைக் கேட்டிருப்பார் அல்லவா”
‘கேட்டு இருக்கமாட்டார்”
‘ஐயனே சூதாட்டம் ஆரம்பிக்கும்
போதே நீங்கள் தருமரிடம் இதில் நீ தோற்றுப்போவாய். திரௌபதி துகிலுரியப்படுவாள்.
நீங்கள் நாட்டை இழப்பீர்கள். போர் மூழும். பலர் மாண்டு போவார்கள் என்று தெளிவாக எச்சரித்து
இருந்தால் தர்மர் விளையாடி இருக்க மாட்டாரே”
‘கண்டிப்பாக விளையாடி இருப்பார்”
ஜனமேஜயன் வியாசரிடம் தொடர்ந்து மகாபாரத யுத்தத்தை ஏன் தடுத்திருக்கமுடியாது
என்று வாதம் செய்து கொண்டே இருந்தான்.
வியாசர் அவனிடம் ‘நீ விடுவதாக இல்லையா” என்று கேட்டார்
‘இல்லை” அவன் பதில்
‘ஜனமேஜயா இப்போது உன்னுடைய
அபிப்ராயம் என்ன? பின்னல் நடக்கப்போவது தெரிந்தால் அதைத் தடுத்துவிடலாம்
என்பதுதானே”
“ஆமாம் முனிவரே”
‘அப்படியானால் உனக்கு நடக்கப்போவதை இப்போது சொல்கிறேன். முடிந்தால்
தடுத்துக்கொள்”
‘சொல்லுங்கள்”
‘இன்றிலிருந்து பத்தாம் நாள் உனக்கு பிரம்மஹத்தி தோஷம் (பிராமணனைக்
கொன்ற தோஷம்) வரப்போகிறது. முடிந்தால் நீ அதைத் தடுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு
வியாசர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
‘
திகைத்துப் போனான் ஜனமேஜயன். இப்படி வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டோமே
என்று ஒரு கணம் நினைத்தான்.
ஆனாலும் ஜனமேஜயன் க்ஷத்ரிய அரசன் அல்லவா? ராஜஸ குணம் பொருந்தியவன்.
உடனே வியாசரின் வாக்கை எப்படி எதிர்கொள்வது என்று யோசனை செய்தான். தேசத்தில் உள்ள
பண்டிதர்கள் எல்லோரையும் வரவழைத்து இந்த
பிரச்னையிலிருந்து எப்படி வெளிவருவது என்று ஆலோசனை சொல்லுமாறு பணித்தான்.
அந்த பண்டிதர்கள் எல்லோரும் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து மன்னனுக்கு
ஒரு யோசனை சொன்னார்கள்.
‘மன்னரே நீங்கள் ஒரு யாகம் செய்வதே இந்த பிரச்னை நேராமல் தடுக்க
முடியும்” என்றனர்.
மன்னன் உடனே யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய உத்திரவிட்டதுடன்
வேத விற்பனர்களை வரச்சொன்னார்.
வேள்வியைத் தலைமை ஏற்று யார் நடத்தப்போகிரார்கள்? பல அந்தண வேத விற்பன்னர்கள் வியாசர் சொன்னதை மனதில்
கொண்டு யாகத்தை நடத்த முன்வரவில்லை. இறுதியாக ஒரு வேதவித்து, ஏழை அந்தணர்
முன்வந்தார். இதைச்செய்தால் நிறைய பொருள் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு தலைமை ஏற்று
யாகம் நடத்த ஒப்புக்கொண்டார்.
வேள்வி நடக்கும் இடத்தைச் சுற்றி வீரர்கள் நிறுத்தப்பட்டனர். வேறு
யாரும் உள்ளே வரவிடக்கூடாது என்று அவர்களுக்கு உத்திரவு இடப்பட்டது.
வேள்வி ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிறைய
நெய்யும் சமித்துகளும் அக்னியில் இடப்பட்டதால்
நெருப்பின் ஜ்வாலைகள் மேலெழும்பின.அந்த இடமே ரம்மியமாக காட்சி அளித்தது.
ஜனமேஜயனுக்கு மிக்க மகிழ்ச்சி. வியாசர் சொன்னது தவறு என நிரூபித்து
விடலாம் என்ற நம்பிக்கை அவன் மனதில் துளிர்விட்டது.
வேள்வி துவங்கி ஒன்பது நாட்கள் கழிந்துவிட்டன.
பத்தாம் நாளிலும் பாதி கடந்துவிட்டது.
ஜனமேஜயன் இரண்டு வீரர்களை தனக்கு அருகில் நிற்க உத்திரவிட்டான். ஒரு
வேளை கோபத்தில், தான் அங்கிருந்த அந்தணர்களைத் தாக்க முற்பட்டால் தன்னை உடனே
தடுத்துவிடும்படி அவர்களுக்கு கட்டளையிட்டான்.
வேள்வி முடிய இன்னும் ஒரு மணி நேரம்...................
அரை மணி நேரம்...................
கால் மணி நேரம்..........................
இன்னும் ஐந்தே வினாடிகள்...........................
இன்னும் இரண்டே நொடிகள்....
ஜனமேஜயனுக்கு மிக்க மகிழ்ச்சி. கடைசி வினாடியில் தவறு
நடந்துவிடக்கூடாது என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு நிமிடம்
திகைத்துவிட்டான். ஒன்பது நாட்களாக விடாமல் யாகத்தை நடத்தி வைத்துக்கொண்டிருந்த
அந்த ஏழை அந்தணன் தூங்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் வாய் மந்திரங்களைத் தெளிவாகச்
சொல்லிகொண்டிருந்தது. கை நெய்யை யாககுண்டத்தில் வார்த்துக்கொண்டிருந்தது.
கடைசி நொடியில் முதியவர் ஏதும் தவறு செய்துவிடக்கூடதே என்று
நினைத்தான். அவரைத் தொட்டு எழுப்ப நினைத்தவன் சற்று யோசித்தான். வேள்வி
செய்வதற்காக அவர் காப்புக் கட்டியிருந்தார்.
என்ன செய்வது என்று யோசித்த மன்னன் அருகிலிருந்த தர்ப்பையை எடுத்து
அவர் முதுகில் மெதுவாகத் தட்டினான்.திடுக்கிட்டு விழித்தெழுந்த அந்த அந்தணர்
பதற்றத்தில் அப்படியே யாககுண்டத்தில் விழுந்து மாண்டார். திகைத்துபோனான் ஜனமேஜயன்.
வியாசரைப் பிரார்த்தித்தான். அங்கு எழுந்தருளிய வியாசரிடம் ‘முதற்கண்
என்னை மன்னியுங்கள். தாங்கள் சொன்னது சரி என்று ஆகிவிட்டது. ஆனால் எனக்கு ஒன்று
புரியவில்லை. நான் தர்ப்பையால் தொட்டதற்கு அந்தணர் ஏன் பதறித் தீயில் விழுந்தார்”
எனக்கேட்டான்.
வியாசரோ ‘ஒன்பது நாட்கள் தொடர்ந்து அந்த அந்தணர் வேள்வி நடத்திய
களைப்பில் உறங்கிவிட்டார். அப்போது அவருக்கு ஒரு கனவு வந்துள்ளது. கனவில் அவர்
காட்டுக்குள் செல்கிறார். அவரை ஒரு சிங்கம் துரத்தி வருகிறது. சிங்கம் அவர் முதுகில்
காலால் அடிக்கும் நேரத்தில் நீ தர்ப்பையால் அவர் முதுகைத் தொட, கனவு நிஜமாகிறதோ
என்ற பதட்டத்தில் அவர் தப்பிப்பதற்காக முயற்சி செய்து தீக்குள் விழுந்துவிட்டார்”
“அரசனே இதைத்தான் விதி என்பர். உனக்கு வரப்போகும் பாதகம் என்ன என்று
தெரியும். அதைத் தடுக்கும் சக்தியும் இருக்கும். ஆனால் தடுக்கமுடியாது. இதுதான்
மகாபாரதப் போருக்குக் காரணம்” என்று சொல்லி ‘இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற
நீ மகாபாரதக் கதையைக் கேட்கவும். வைசம்பாயனர் உனக்கு அதைச் சொல்லுவார்” என்று
சொல்லி வியாசர் மறைந்தார்.
No comments:
Post a Comment