வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சம்பாதியின் வருகை
பதிவு எண் 392
நேற்றைய தொடர்ச்சி
சங்க கால இலக்கியங்களில் அதாவது கம்ப இராமாயணத்திற்கு முன்னரே இராமாயணம் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில் திருஞான சம்பந்தர் மயிலாடு துறையை அடுத்துள்ள புள்ளிருக்கு வேளூர் அதாவது இன்றைய வைத்தீஸ்வரன் கோவிலில் சிவபெருமானை ஜடாயு, சம்பாதி இருவரும் வழிபட்டுள்ளதாக நிறைய பதிகங்கள் தேவாரம்) பாடி உள்ளார். அந்தப் பதிகங்களை விரிவாகப் பார்ப்போம்
============
கள்ளார்ந்த பூங்கொன்றை மத மத்தம் கதிர் மதியம்
உள்ளார்ந்த சடைமுடி எம் பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி சடாய் என்பார் தாம் இருவர்
புள்ளானார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே
===============
தேன் நிறைந்த கொன்றை மலர்களையும் சிந்தனையை கலக்கும் ஊமத்தை மலர்களையும், ஒளிவீசும் பிறைச் சந்திரனையும், நிறைவாகத் தனது சடையினில் ஏற்றுக்கொண்டுள்ள பெருமான் உறையும் இடமாவது, இழிந்த பிறவி என்று கருதாமல் உயர்ந்தவை என்று மதிக்கப்பட வேண்டிய சடாயு மற்றும் சம்பாதி கழுகு இனத்தினைச் சார்ந்த பறவைகள் தங்களது அரசனாகக் கருதி இறைவனைத் தொழுது வணங்கும் தலம் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப் படும் தலமாகும்.
====================
தையலாள் ஒருபாகம் சடைமேலாள் அவளோடும்
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையுமிடம்
மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.
===================
ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனிடம் நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.
===================
வாசநலஞ் செய்திமையோர் நாடோறும் மலர்துாவ
ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே
==================
தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறுமலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும் யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.. சில உரையாசிரியர்கள் ஜடாயுவும், சம்பாதியும் தினமும் பலயோசனை தூரம் பயணம் செய்து பூக்களைக் கொண்டுவந்து சிவபெருமானை வழிபட்டதகச் சொல்லப்படுகிறது.
தொடரும்
No comments:
Post a Comment