வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 344
நேற்றைய
தொடர்ச்சி...............
அதற்கு அப்பால் வடகடலும்
அதன் நடுவில் சோமகிரிமலையும் உள்ளன, அவ்வழியாக இந்திர பிரம்ம லோகங்களுக்குச்
செல்லும் தேவர்கள் அம்மலையைக் கண்டு
செல்வர். அது கதிரவன் இல்லாத பகுதி. எனினும் மலையின் ஒளியால் வெளிச்சத்தோடு இருக்கும். அங்கு விஷ்ணு மூர்த்தியும், பதினோரு
உருத்திரர்களாக விளங்கும் சிவமூர்த்தியும் பிரம இருடிகளால் சூழப்பட்ட பிரமனும் வீற்றிருக்கின்றனர். சோமகிரிமலையைத்
தேவர்களாலும் அடைய முடியாது. ஆதலின் அவ்விடத்திற்குச் செல்ல முடியாது. இப்படித்
தேடவேண்டிய இடங்களைச் சொன்ன சுக்ரீவன் அவர்களை
ஒரு மாத காலத்திற்குள் சீதையைக் தேடிக் கண்டறிந்து வருமாறும் அப்படி
வருபவர்களுக்குப் பரிசு வழங்கி இன்ப வாழ்வுக்கு வழி வகுப்பதாகவும் கூறி விடுத்தான்.
இவ்வாறு ஒவ்வொரு
திக்கிற்கும் தகுந்த வானரப் படையை வகுத்து ஆங்காங்குள்ள பிரதேசங்களையும் வருணித்துக்கூறி
அங்கு வசிப்பவர்களைப் பற்றியும் இயற்கை அமைப்பைப் பற்றி விவரித்துக் கூறி
சுக்ரீவன் இராமன் கரரியத்தில் முழுமனதுடன் ஈடுபடுகிறான். இவன் ஊக்கத்தைக் கண்ட
வானரத் தலைவர்களும், சேனைகளும் இலட்சியத்தை முடித்துக் காட்ட உற்சாகங்கொண்டு
வெளியேற ஆரம்பித்தனர்.
[திக்குகளைப் பற்றிய சுக்ரீவனின்
வர்ணனை சிறந்த தத்துவத்தை எடுத்துரைக்கிறது போலும். ஒவ்வொரு திசையின் அமைப்பையும்
வசிப்பவர்களின் தன்மையையும் அவன் எடுத்துக் காட்டுகிறான். உத்தமர்களான ரிஷிகளும், அதமர்களான
அரக்கர்களும் அங்கங்கே காணப்படுகிறார்கள். ஓரிடத்தில் மகா புனிதமான தேவர்கள், தவசித்தியடைந்தவர்கள், நல்லொழுக்கங்கொண்டு நல்வினைகளிலேயே
திளைத்துள்ளனர். அங்கேயே இன்னொரு பக்கம் அதே திசையில் கொடியவர், இரக்கமில்லாத அரக்கர், கந்தர்வர்களாயினும் ராட்சதர்கள், (பாரியத்ரிப்ரதேசம், இதற்கு உதாரணம்)). இங்கு மாமுனி, தவசித்தி பெற்று, அங்கு ௮சுரன் அட்டகாசம்; இத்தகைய மாறுபாடுகள், விரோதமுற்ற வேற்றுமைகள், இயற்கை அமைப்பே போலும்.
எல்லா உயிர்களுக்கும் தனது வாழ்க்கையை வகுக்கும் சுதந்திரமுண்டு.
தன்னறிவிற்கேற்ப அந்த சக்தி அமையப்
பெறுகிறது. ஒரு இலட்சியத்தைக் குறி வைத்து போகிறவன். கால்கள் இராசவீதியில்
அழைத்துச் செல்கின்றன. எதேச்சையாய்த் திரிபவன் கால்கள் சேற்றில் விழுந்து
செல்கின்றன. விளைவு ஒருபுறம் தீயோர்,
மறுபுறம் நல்லோர், இப்படிப்பினையைக் கற்பிக்கிறது போலும் சுக்ரீவனின் பூகோள விரிவுரை)
பலதிசைகளுக்கு வானர
வீரர்களை சுக்ரீவன் அனுப்பினான். இருப்பினும் இராவணனும் சீதையும் தென் திசையில்
தான் இருக்கவேண்டும் என்று சுக்ரீவன் நம்பினான். ஏனெனில் ஆகாயத் தேரில் சீதை அலறிப் புலம்ப, இராவணன் தென் திசை நோக்கித்தான் சென்று கொண்டு இருந்தான் என்பது முதற்காரணம்.
இரண்டாவது இராவணனுடைய இருப்பிடமான இலங்கை தென் திசையில் தான் இருக்கவேண்டும் என்று
முன்னரே ஓரளவு அறிந்து இருந்தான்.
தொடரும்
No comments:
Post a Comment