Monday, October 13, 2025

 






வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 341

 

 

நேற்றைய தொடர்ச்சி..................

 


இத்தீவைத்தேடி முடித்து அங்குத்‌ தேவியைக்‌ காணாவிடின்‌ இன்னும்‌ நூறு யோஜனை தெற்கே சென்றால்‌, சித்தர்கள்‌, சாரணர்கள்‌ பூஜிக்கின்ற மிக்க மங்களகரமான புஷ்பிதகம், எனப்படும்‌ ஒரு திவ்விய மலையைக்‌ காண்பீர்கள்‌, அம்‌மலையும்‌ தெற்கு சமுத்திரத்தால்‌ சூழப்பட்டதே; அது சந்திரன்‌, சூரியன்‌ ஓளி கொண்டது. வானளாவும்‌ சிகரங்கள். ‌அதன் சிகரம்‌ ஒன்றில்‌ சூரியஒளி எப்பொழுதும்‌ ஜ்வலிக்கின்றது. மற்றொன்‌றில்‌ சந்திர ஒளி வீசுகிறது. அது மிகவும் புனிதமானது. நன்றி கெட்டவர்களுக்கும் பொய்‌ பேசுபவர்களுக்கும்‌, நாஸ்திகர்களுக்கும்‌ அந்த இடம்‌ புலனாகாது. நீங்கள் அங்கடைந்ததும் அப்புண்ணிய  க்ஷேத்திரத்தைத்  தலையால்‌ வணங்குங்கள். பின்பு அங்கும்‌ நன்கு தேடுங்கள்.

 


 அதன்பின் இன்னும் தெற்கில், ஆவி பதறவைக்கும்‌ ஓர் வழி காணும். அதிலிருந்து  பதினான்கு யோஜனைகளுக்கப்பால்‌ சூரியவான்‌ என்றொரு மலை தோன்றும்‌. அதையுங்கடந்து சென்றபின்‌, நினைத்த எண்ணங்களை நிறைவேற்றும்‌ சக்தி வாய்ந்ததும்‌, எக்காலத்திலும்‌ மனங்களிப்பளிக்கும்‌ மரங்களடர்ந்த, வைத்யுதமென்ற மலை ஒன்றுண்டு, அங்கே கிடைக்கும்‌ காய்கனிகள்‌ கிழங்குகளின்‌ ருசியின்‌ இனிமை எவராலும்‌ வர்ணிக்க முடியாது. அதற்கிணை ஒன்றே ஒன்றுதான். ‌. அது அங்கு கிடைக்கும்‌ தேன்தான். அங்கும்‌ நன்கு தேடுவீர்களாக. அங்கும் உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்றால். இன்னும்‌ அப்பால்‌ தெற்கே செல்லுங்கள்‌.

 


“அப்போது என்றும்‌ கண்டிறாத, மனமும்‌ கண்ணும்‌ பூரிக்கவைக்கும்‌ ஒரு உன்னத உணர்ச்சி உங்களிடம்‌ படர்ந்து பரவும். அவ்விடம்‌ தான்‌ புனிதமான குஞ்சரம்‌ என்ற மலைப் பிரதேசம் அங்கேதான்‌ விஸ்வகர்மாவினால்‌ அகஸ்திய மாமுனிக்காகச்‌ செய்யப்பட்ட ஓர்‌ தனிப்பெரும்‌ மாளிகை உளது. பொன்‌னாலிழைக்கப்பட்டு, இரத்தினங்களால்‌ பொலிவுண்டு, விசாலமாய்ப்‌ பரவி, ரம்மியமாகத் திகழ்ந்து வருபவரை வரவேற்க, அமைக்கப்பட்டு உள்ளது  . அவ்விடத்திலேயே, பாம்புகளின்‌ வாசமான போகவதி என்ற நகரமிருக்கின்றது.  அது யாரும் புகமுடியாதது. கடும் விஷமுள்ள சர்ப்பங்கள் அந்நகரைப் பாதுகாக்கின்றன.

 


 அங்கே தான் வாசுகி என்ற சர்ப்பராஜன் வசிக்கிறான். அவ்விடத்திலும் நம் தேவியைத் தேடவேண்டும். அதை அடுத்துச் சில தேசங்கள் இப்போது மறைந்துவிட்டன. இதைக்‌ கடந்துச்‌ சென்றால்‌, கோசீர்ஷம், பத்மகம்‌, ஹரிச்யாமம்‌, என்ற சந்தனம்‌ உற்பத்தி ஆகும்‌ ரிஷபம்‌ என்ற மலை புலனாகும். கொடியவர்கள் ரோஹிதர்கள் என்ற கந்தர்வர்கள் அதைக் காத்து நிற்கின்றனர். அதற்கப்பால் தான் பூமியின் எல்லை காணும். அங்கேதான் புண்ணிய ஆத்மாக்கள் வசிக்குமிடம். அத்துடன் உங்கள் யாத்திரை நிறைவு பெரும். ‌அங்கிருந்து துவங்குகிறது பித்ருலோகமும்‌ யமனுடைய ராஜதானியும்‌. காரியத்தை முடித்து ஜயங்கொண்டு வருவீர்களாக '' என்று ஆசிகூறி அனுப்பினான்‌.

 


தொடரும்................

 


No comments: