Thursday, October 9, 2025

 



வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 337

 

 

 

சுக்ரீவன் வானரர்களை தெற்குத் திசையில் தேடச் சொல்வதின் தொடர்ச்சி...

 

 

இவைகள்‌ நீர்வளம்‌ நிலவளமமைந்த செழிப்புற்றுத்‌ திகழும்‌ திவ்வீய ப்ரதேசங்கள். ‌. சந்தனம்‌, மா, புளி, ஆல்‌, அரசு, பனை, வாழை, அகில்‌, கமுகு  முதலிய உயர்ந்த மரக்காடுகள்‌, தாதுக்கள்‌ பொருந்திய அயோமுகம்‌ முதலிய மலைகள்‌ இங்குண்டு. சந்தனம் கமழும் சிறப்புக் கொண்ட  இப்பிரதேசம்‌ முழுவதும்‌ தேடத்தக்கது. 

,

 

 

ततः ताम् आपगाम् दिव्याम् प्रसन्न सलिलाशयान् || ४-४१-१४

तत्र द्रक्ष्यथ कावेरीम् विहृताम् अप्सरो गणैः |

 

 

அங்கே அழகில் சிறந்த புனிதமான மனங்களிக்கும்  ௮ப்ஸரஸ்‌ பெண்கள் பூஜிக்கும் காவேரி நதி காட்சியளிக்கிறாள்‌. அவைவிட்டு இன்னும்‌ தெற்கே செல்லுங்கள்‌. அங்கே அழகு வாய்ந்த  அமுதம்‌ பொழியும்‌ பழ மரங்களடங்கிய, அத்தி, பலா, கமுகு, ஜாதிக்காய்‌ காடுகள்‌ பரந்த மலைத்‌ தாழ்வரையைக்‌ காண்பீர்கள். அது மலய மலையின் தாழ்வரை. நந்தவனங்களும் காய் கனிகள் கொழிக்கும் இயற்கை வனப்பு வாய்ந்த காடுகள் நிறைந்த பகுதி. அம்மலையின்‌ உச்சியில்தான்‌ சூரியனை நிகர்த்த ஒளியுடன்‌ அகத்திய மாமுனி வீற்றிருப்பார். அப்பெரியாரைத் தரிசித்து பயபக்தியாய்‌ பணியுங்கள்‌. அம்மகாத்மாவினிடம்‌ உங்கள்‌ இலட்சியத்தைத்‌ தெரிவித்து அவருடைய அருள் பெற்று, பின்பு அகண்டமானதும்  கம்பீரமானதும், மகா புனித மானதுமான தாம்பிரபரணி என்ற திவ்விய நதியை அடையுங்கள். சந்தன  வனங்கள் கொண்ட மனோரம்மியமான மணல்‌ திட்டுகள்‌ அங்குண்டு

 

ततः तेन अभ्यनुज्ञाताः प्रसन्नेन महात्मना || ४-४१-१६

ताम्रपर्णीम् ग्राह जुष्टाम् तरिष्यथ महानदीम् |

 

(தாமிரபரணி  இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அகஸ்திய மலையில் தோன்றி, புனிதக்ஷேத்திரமான பாபநாசம் வழியாகப் பாய்ந்து, திருநெல்வேலியைச் செழிப்படையச் செய்து, வங்கக் கடலில் கலக்கிறாள். இந்த நதியின் கரைகளில் எண்ணற்ற வைணவத் திருப்பதிகள் இருக்கின்றன. இது குறித்தும் பல புராணக் கதைகள் இருக்கின்றன. அகஸ்திய முனிவர் தாமிரபரணி உற்பத்தியானதிலிருந்து இருபத்தேழு நாட்களில் அவளை சமுத்திரத்திடம் அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படும் கதையும் அவற்றில் ஒன்றாகும்). அடுத்த சுலோகத்தில் பாண்டியர்களின் பழம்பெரும் தலைநகரான கபாடபுரம் குறிப்பிடப்படுகிறது. அதன் பிறகே மஹேந்திரகிரி குறிப்பிடப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

ततो हेममयम् दिव्यम् मुक्ता मणि विभूषितम् || ४-४१-१८

युक्तम् कवाटम् पाण्ड्यानाम् गता द्रक्ष्यथ वानराः |

 

தொடரும்


No comments: