வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 343
வடதிசை சென்ற படை
அடுத்து வடதிசை சென்ற
படைக்குத் தலைவன் சதவலி. அவனோடு லட்சக் கணக்கான வானரர் சென்றனர்.. அவர்களுக்கு
வடக்கே உள்ள நாடு, நகரம், காடுகளைப்பற்றி விளக்கினான். வடதிசையில் மிலேச்சம்,
புளிந்தம், சூரசேனம், பிரத்தலம், பரதம், குரு, மாத்திரம், காம்போயம், யவனம்,
சுகம், ஆரத்டகம், பாகலீயம், இருடிகம் (ரிஷபம்) பௌரம், டங்கணும், சீனம், பரமசீனம்,
நீகாரம், தரதம் என்னும் நாடு
நகரங்களும் இமயமலையும் உள்ளன. இவற்றை
அடுத்துக் காலம், சுதரிசனம், தேவசகமலைகள் இருக்கின்றன. அடுத்து நூறு யோசனை
பரப்புள்ள அச்சமூட்டும் பாழ் வெளிக்கு
அப்பால் கயிலை மலை காட்சி தருகிறது. அங்கு சாம்புந்தம் என்னும் பொன்னால் தெய்வதச்சனால் கட்டப்பட்ட
குபேரனின் மாளிகை உள்ளது. அதன்பின் இருபது
மாமுனிவர்கள் வாழும் புகுதர்கரிய
குருகுபெயர்க்குன்றம் (கிரௌஞ்ச மலை) அடுத்து மரங்களே இல்லாத காமசைலமலையும்
பறவைகளின் புகலிடமான மானச எறியும் இருக்கின்றன.
கிரௌஞ்ச மலைக்கு அப்பால்
மயன் மாளிகையும் குதிரை முகங்கொண்ட கின்னரப்பெண்களின் இருப்பிடமான மைந்நாகமலையும்
இருக்கின்றன. அம்மலையினைக் கடந்தால் சித்தர்கள் வாழும் தவக்குடில்களைக் காணலாம்.
அங்கு இளஞாயிறு போல் செவ்வொளி வீசும்
அன்னங்கள் திரியும் வைகானச ஏரி உள்ளது. குபேரனின் ஊர்தியான சார்வபௌமம்
களிறு பிடிகளோடு உலாவிக் கொண்டிருக்கும். அதன் பின் வெட்ட வெளியையும் சைலோத
ஆற்றையும் கடந்தால் உத்தரகுரு நாட்டை
அடையலாம்..
உத்தரகுரு புண்ணியம்
இயற்றிவர்கள் இருப்பிடம். அங்கே பொற்றாமரைகள்
உள்ள ஓடைகளும் மலர்கள் நிறைந்த ஆறுகளும் உண்டு, சென்கழுநீர்பூக்கள் மண்டிக்
கிடக்கும் ஏரிகளைப் பார்க்கலாம். நீல மலர்கள் நிறைந்து இருக்கும். ஆற்றங்கரைகளில்
முத்தும் மாணிக்கமும் இருக்கும். அங்குள்ள மரங்கள் புதுமையானவை, அவை ஆடைகள்,
அணிகலன்கள், கனிகள், படுக்கைகள், மணம் மிக்க மாலைகள், உணவுகள் ஆகியவற்றைக்
கொடுப்பன. அங்குப் புண்ணியம் சேர்த்த
கந்தருவர், கின்னரர், சித்தர், நாகர்,
வித்தியாதரர்கள் பெண்களோடு கூடிக் களிப்பர். அவர்கள் சிற்றின்பத்தில் ஈடுபடுட்டுக்
கிடப்பவர்கள். மன நிறைவும், அறவாழ்வும் உடையவர்கள் அங்கு எப்போதும் இசையொலியும்
சிரிப்பொலியும் எழுந்து கொண்டே இருக்கும்.
தொடரும்
No comments:
Post a Comment