Sunday, October 12, 2025

 


வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 340


 

நேற்றைய தொடர்ச்சி.............

 


இராவணனின் வசிப்பிடம் தெரிந்திருந்தால் மற்ற திசைகளுக்கெல்லாம் சுக்ரீவன் ஏன் வானரர்களை அனுப்ப வேண்டும் என்று கேட்கப்பட்டால், திருடன் எவனும் தன் கொள்ளையைத் தன் வீட்டில் பதுக்க மாட்டான் என்ற திடமான நம்பிக்கையே அதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். இங்கேயுங்கூட சுக்ரீவனால் இலங்கையின் உட்பகுதிகளை விரிவாக விவரிக்க முடியவில்லை. சுக்ரீவன் சொல்லும் புவியியல் சார்ந்த செய்திகளைக் கேட்டு மலைக்கும் இராமனுங் கூட, இராவணனின் இந்தக் குறிப்பட்ட இடத்தை முன்பே நீ ஏன் சொல்லவில்லை என்று கேட்பதுமில்லை. எனவே, சுக்ரீவன் தகவலைச் சொல்ல மறுப்பது முற்றிலும் அரசியல் சார்ந்தது.

 


 இப்போதோ தன் காரியம் நிறைவேறி, நண்பரின் நோக்கமான சீதையேத் தேடும் அவசியத்திற்காக இவற்றை வெளிப்படுத்துகிறான் என்றும் கொள்ளலாம். மேலும்‌, சுக்ரீவன்‌,  அங்கதன்‌ முதலிய வானரத்‌ தலைவர்களுக்கு யாத்திரை மார்க்கத்தைக்‌ கவனப்படுத்தும்போது, இந்தத்‌ தீவைப்பற்றி மாத்திரம்‌ சொல்லிவிட்டு இவ்விடத்தில்‌ தேடினால்‌ போதும்‌, என்று சொல்லிவிடவில்லை. மேலும்,  அதற்கப்பாலும்‌ தேடும்படியும்‌ எச்சரித்து அனுப்புகிறான். ‌ஆகவே, இராவணன்‌ இந்தத்‌ தீவிலேயே இருப்பானென்றும்‌, அங்கேயே ஜானகியையும்‌ வைத்திருப்பான்‌ என்றும்‌ உறுதி கொண்டு இருப்பதாகத்‌ தெரியவில்லை.

 


சுக்ரீவன்‌ இன்னும்‌ வானர வீரர்களுக்குச்‌ சொல்லிக்கொண்டே போகிறான்‌. அந்த தீவில்‌ ஊசிமுனை நுழையும்‌ துவாரங்கூட விடாது, கொல்லப்‌ படவேண்டிய அக்கொடிய அரக்கனையும்‌ சீதாப்பிராட்டியையும்‌ வெகு கவனமாகத்‌ தேடுங்கள்‌, அங்கு காணாவிடில்‌, இன்னும்‌ தெற்கே செல்லுங்கள்‌.. ஆனால் இதைக் கவனத்தில்‌ வைக்கவேண்டும். அக்கடலின் நடுவே,  ‌ஒரு பயங்கரமான, ஆபத்தே உருவாயிருக்கும்‌, அங்காரகி என்ற ஓர்‌ கொடியஅரக்கி கிடக்கிறாள். ‌அவளிடத்திலுள்ள  சக்தி மிக அற்புதமானது. அவள்‌ மேலே ஆகாயத்தில்‌ செல்லும்‌ ஜீவராசிகளின்‌ நிழல்களைப் பற்றியிழுக்கும்‌ மாயச்‌ சக்தி பெற்றிருக்கிறாள்‌. நிழலைப் பற்றியிழுத்து நிழலுடைய உருவத்தைப் பிடித்துத்‌ தின்றுவருகிறாள். இதைப் பற்றி நீங்கள்‌ கவனம்  செலுத்தவேண்டும். ஆனால் பயங் கொள்ள வேண்டாம். ‌எல்லா இடங்களையும்‌ துருவிப்‌ பாருங்கள். மனச் சோர்வு கூடாது. அளவிடற்கரிய ஒப்பற்ற பராக்கிரமசாலிகள்‌ நீங்கள். உங்களுக்குத்‌ தோல்வி என்பதே கிடையாதென்பது எல்லோருமறிந்த விஷயம். ஆகையால்‌ புருஷோத்தமனின்‌ பிரிய மனைவியைப்பற்றி கட்டாயம்‌ கண்டு தெரிந்து கொள்ளுவீர்கள்‌ என்பதில்‌ சந்தேகமென்ன?

 


தொடரும்.............


No comments: