தீபாவளி நல்வாழ்த்துகள்
வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
சுக்ரீவ ஆக்ஞை
பதிவு எண் 347
நேற்றைய தொடர்ச்சி
ஹனுமானைப் புகழ்ந்து
சுக்ரீவன் சொல்வது நலுங்கு மெட்டு இராமாயணத்தில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது?
=================================================================
புறப்படுமுன் சுக்ரீவன்
பின்னுஞ்சொல்வான் அனுமானிடம்
பிரியமுள்ள மந்திரியே
பெருமைபெற நடந்துகொள்வாய்
அரக்கனுள்ள தெற்குத்திசை
அனைத்தையும்போய்த் தேடிச்சீதை
இருக்குமிடங் கண்டறிந்து
என்னிடத்து வந்துரைப்பாய்
காரியத்தைச்
சாதித்தென்னைக் கனப்படுத்தும் பொறுப்புள்ளோர்
ஆருமுண்டென் றெயுரைப்பார்
ஆனாலும் உன்னைப் போலப்
புத்தியுடன் சக்தியுமே
பொருந்தியுள்ளோர் அரிதாமே
சித்தசுத்தி யுள்ளநீயே
சீதைதனைதத் தேடிக்காண்பாய்
உன்வரவை நம்பியேநான்
உறுதியாக இருப்பேன்பார்
என்னிஷ்டப் படிநடந்து
இராமகாரியஞ் சாதிப்பாயே
உனையனுப்புங் காரியத்தில்
ஒருகுறையும் வருவதில்லை
எனதுமனங் கண்டறிந்து
என்னைமிக ஆதரிக்கும்
உனக்கேதுஞ் சொல்லவேண்டாம்
உனக்குநிக ரொருவரில்லை
அனைவருக்கும் பெருமைதரும்
அனுமானே.....என்றுரைத்தான்
(நலுங்கு மெட்டு ராமாயணம்)
===========================================================================
அருகிலிருந்த இராகவன் தனது
அருள் நிறைந்த கண்களால் ஹனுமனை நோக்குகிறான். ஹனுமனும் வெற்றி உணர்ச்சி உடல்
முழுவதும் பரவுவதை உணர்கிறான். முகமும், மனமும் மலர்கின்றன. அரசன் சுக்ரீவனால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவன், காரியத்தை
நிறைவேற்றுபவன்தான் என்று நிச்சயமடைந்து அவனைத்
தனது அருகில் அழைத்து தனது பெயர்
பொறிக்கப்பட்ட முத்திரை மோதிரத்தை அவனிடம் கொடுத்தான். பிறகு அவனிடம் “அன்பனே!
சுக்ரீவன் உன் மீது பெரும் நம்பிக்கை
வைத்துள்ளான்.
ददौ तस्य ततः प्रीतः स्व नामांक उपशोभितम् |
अंगुलीयम् अभिज्ञानम् राजपुत्र्याः परंतपः || ४-४४-१२
अनेन त्वाम् हरिश्रेष्ठ चिह्नेन जनकाअत्मजा |
मत् सकाशात् अनुप्राप्तम् अनुद्विग्ना अनुपश्यति
|| ४-४४-१३
சீதையை உன்னால்தான் கண்டு பிடித்துக் கொண்டு வர முடியும் என நானும்
திடமாக நம்புகிறேன். அப்படி நீ சீதையைச் சந்திக்க நேர்ந்தால் அப்பொழுது இந்தக் கணையாழி உனக்குப் பயன்படும்;
இதன் மூலம் நீ என்னால் அனுப்பப்பட்டவன் என்பதைச் சீதை தெரிந்து கொள்வாள்” என்று
கூறினான்.
இந்தியாவில் நிலவும் இராமாயணம் பலவற்றில் இராமன் ஹனுமனுக்கு
சீதையைப் பற்றிய அடையாளங்கள் சொல்வதாகச் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் வால்மீகி அவ்வாறு
சொல்லவில்லை. ஈழத்து நூலான இராம நாடகம்
வடமோடி நாட்டுக் கூத்து என்ற நூலில் இராமன் ஹனுமனிடம் சீதையைப் பற்றி ஒரு சில
அடையாளங்கள் சொல்லுகிறான். அதைப்
பார்ப்போம்,
தொடரும்
No comments:
Post a Comment