Saturday, October 11, 2025

 


வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 339

 

 

 

சுக்ரீவன் தொடர்கிறான்:

 

 

அந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில்தான்‌ தெற்குச்‌ சமுத்திரம்‌ ஆழ்ந்து அமர்ந்து அரசாளுகிறது. அக்கடலினுள்‌ அழுந்தியிருப்பது மகேந்திரம்‌ எனும்‌ ஓர்‌ பர்வதம்‌. அதற்கு  நூறு யோஜனையில்‌ எவராலும்‌ அடையமுடியாத பயங்கரமான ஒரு தீவு காணப்படும்‌. இதை எப்படியாவது தேடிக் கண்டு பிடிக்கவேண்டும். மிக்க பிரயாசையும்‌ கவனமும்‌ செலுத்தி ஓரிடமும்‌ விடாதபடி இந்தத்‌ தீவைத்‌ துருவிப்பார்க்கவேண்டும், ஏனென்றால் அந்தத் தீவுதான் இந்திரனின் ஆற்றல் கொண்ட கொடிய இராக்ஷஸ அரசனான   கொல்லப்படவேண்டியவனான இராவணனின்‌ இருப்பிடம்‌.

 

[இராவணன்‌ வசிக்குமிடம்‌ இன்னதென்றறிந்த சுக்ரீவன்‌ இராவணன்‌ எங்குள்ளானென்றும்‌,  சீதையை எவ்விடம்‌ கொண்டுபோனானென்றும்‌ தனக்கு தெரியாதென்று இராம இலட்சமணர்களை முதல்முதல்‌ கண்டவுடன்‌ சொன்னது பொருத்தமாகுமோ என்ற கேள்வி எழலாம்.. ஆனால் இப்போதோ இராவணன் வசிக்கும் குறிப்பிட்ட தீவையே அடையாளம் காட்டுகிறான். அப்போது சுக்ரீவன் பொய் சொன்னானா என்று கேட்கலாம். புத்திசாலி மன்னன் எவனும் தனக்குத் தெரிந்த ரகசியத்தை, அதுவும் அரசாங்க ரகசியத்தைச் சொல்லமாட்டான். முதலிலேயே சுக்ரீவன் இராமனிடம் இதைச் சொல்லியிருந்தால், இராமன் வாலியைக் கொல்லாமல் நேரடியாக இலங்கைக்குச் சென்றிருப்பான். சுக்ரீவனின் நலத்திற்கு இது உகந்ததல்ல. சுக்ரீவனுக்கு இராவணன் வசிக்கும் இலங்கை தெரிந்திருந்தது என்பது சரியே. ஆனால் சீதையைக் கடத்திச் சென்று இலங்கையில்தான் இராவணன் வைத்திருப்பான் என்பதற்கான உத்தரவாதம் ஏதுமில்லை. எனவே அந்த சந்தேகத்தையே சுக்ரீவன் அங்கும், இங்கும் பயன்படுத்திக் கொள்கிறான். மேலும் தாரையின் மூலமே சுக்ரீவன் இராவணன் குறித்த விபரங்களை அறிந்தான் என்பதை நம்புவதற்கும் இடமிருக்கிறது. ஆனால் சுக்ரீவன் இளவரசனாக இருந்தவன். இவற்றையெல்லாம் அறியாமல் இருந்திருக்கமாட்டான். அவன் வேண்டுமென்ற இராமனிடன் உண்மையை மறைத்தான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

 

தொடரும்


No comments: