Tuesday, October 14, 2025

 


வால்மீகியின்

 

கிஷ்கிந்தா காண்டம்

 

சுக்ரீவ ஆக்ஞை

 

பதிவு எண் 342

 

 

அங்கதனைத் தலைவனாகக் கொண்டு வானர பிரமுகர்கள் மிகவும் ஆற்றல் கொண்டு உற்சாகம் மிகுந்து துள்ளிக் குதித்து தெற்கு நோக்கிச் சென்றனர். அடுத்து சுக்ரீவன்  தாரையின் தந்தையான சுஷேணன் , மரீசியின் மகனாகிய மாரீசி, அர்ஷீமான்  ஆகியோரை மேற்கு திசையில் எங்கெங்கு தேடிப்பார்க்கவேண்டும் என்று கூறி அனுப்பினான். மேற்குதிசையில்  சௌராஷ்ட்ரம், பகலீகம், சூரம் (சூரத் – பம்பாய் பிராந்தியம்), பீமம் (ராஜபுதனம்), குட்சி(கட்ச்)ஆகிய நாடுகள் உள்ளன. புன்னாகம் முதலான மரங்கள் அடர்ந்த நாடு குச்சி. அதில் மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளும்  அவற்றின் கரைகளில் தவக் குடில்களும் உள்ளன. அதன் மேற்றிசையில் பாலைவனமும்(தார் பாலைவனம்) நீண்ட மலைத்தொடர்களும் உள்ளன. அதற்கு அப்பால் திமிங்கிலங்களும் முதலைகளும் நிறைந்த மேலைக் கடல் உள்ளது. அக்கரையில் முரசி, சடீபுரம், அவந்தி, அங்கலேபை, ஆகிய நகரங்களும்(இயற்கை துறைமுகங்கள்) அலட்சிதம் என்னும் காடும் உள்ளன. சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் நூறு முகடுகளையுடைய எமகிரி என்னும் மலை இருக்கிறது. அங்கு பறக்கும் சிங்கங்கள் வாழ்கின்றன அங்கு எல்லாம் விடாமல் தேடுங்கள்.

 


அதைத் தொடர்ந்து நூறு யோசனைப் பரப்புள்ள பாரியாத்திரம் என்னும் மலை உள்ளது. பழ மரங்கள் நிறைந்தது அப்பகுதி.  அதனைப் பேராற்றலும் விரும்பும் வடிவம் எடுக்கும் திறனுமுடைய கந்தர்வர்கள் காத்து வருகின்றனர். அங்கு நீங்கள் நுட்பமாகவும் தந்திரமாகவும் நடந்து கொள்ளவேண்டும். அடுத்து வைடூர்யம் போல் ஒளிவீசுவதும் வஜ்ரப்படைபோல் உறுதி வாய்ந்ததும் மரஞ்செடிகொடிகள் நிறைந்ததுமான வஜிரமலை சதுரவடிவில் இருக்கிறது. பிறகு கடலின் நான்காவது பகுதியில் சக்கரவான் மலை உள்ளது.  அங்குதான்‌ விச்வகர்மா ஸகஸ்ராரமென்ற சக்கரத்தை, நிர்மாணித்திருக்கறார்‌. அங்கேதான்‌ ஸ்ரீமகாவிஷ்ணு, பஞ்சஜனன்‌, ஹரக்ரிவன்‌ என்ற தானவர்களைக்‌ கொன்று உலக பாபிகளைப்‌ போக்கடித்து, சக்கரத்தையும்‌ சங்கையும்‌ கையில்‌ தரித்து வாகைசூடி, வெற்றி விலாசத்தில்‌ விளங்கினார்‌. அதற்கு அப்பால் வராக மலையும்  உள்ளன. அம்மலையில்  நரகன் என்னும் அவுணன் உறையும் ப்ராக்ஜோதிடம் என்னும் நகரம் உண்டு. அதனை அடுத்து மேகவான்மைலையும் அறுபதாயிரம் தங்க மலைகளும் உள்ளன, அம்மலைகளின் நடுவில் ஓர் இரவும் பகலும்  தன்பால் தாங்குபவன் பொன் வண்ணம் பெறுவான் என்னும் வரத்தைச் சூரியனிடமிருந்து பெற்ற மேரு மலை விளங்குகிறது.

 


அங்கிருந்து பத்தாயிரம் யோசனை தொலைவில் அத்த மலையும் அதில் தெய்வ தச்சனால் உருவாக்கப்பட்ட  வருணனின் வளமனையும் உள்ளன. அம்மலையில் மேருசாவருணி என்னும் பரமனை நிகர்த்த தவமுனிவர் உறைகிறார். அம்மலைக்கு அப்பால் யாரும் செல்ல முடியாத இருள் நிறைந்த பகுதி. சுக்ரீவன் இவ்விடங்களைப்பற்றி விரிவாக விளக்கி  அங்கெல்லாம் சீதையைத் தேடும்படி கூறினான். ஒரு மாதக் கெடு விதித்தான்,

 


தொடரும்


No comments: