Thursday, May 21, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 114

 

நேற்றைய தொடர்ச்சி

 

இராமன் வாலியை, சுக்ரீவன் 'इहाँ साप बस आवत नाहीं। तदपि सभीत रहाँ मन माही அதாவது அவன் சாபத்தினால் இங்கு வர முடியாது. ஆனாலும் எனக்கு அவனிடம் பயம் உள்ளது என்று சொன்னவுடன் வாலியைக் குற்றம் செய்தவனாகக் கருதினான். கோபத்தின் வேகத்தில் சுக்ரீவனைத் தவறாக நினைத்து அடித்துத் துரத்தி இருக்கலாம். அதற்குப் பிறகு தனது அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்து தாரையிடம் முழுவிவரங்கள் கேட்டுத்தெரிந்து கொண்டு சுக்ரீவனை மீண்டும் கிஷ்கிந்தைக்குள் அழைத்து இருக்கலாம். ஆனால் நிறைய காலம் கடந்த பின்னரும் வாலி அதைச் செய்யவில்லை. அதற்குப் பதில் தனது மகளாக நினைக்க வேண்டிய சுக்ரீவனின் மனைவி ரூமையை தன்னுடையவளாக வைத்துக் கொண்டதைக் கேட்டதும் இராமன் கோபமுற்று வாலியைக் குற்றம் செய்தவனாகக் கருதி அவன் கொல்லப்படவேண்டியவன் என்று முடிவு செய்தான்.

 

மேலும் சுக்ரீவன் வாலிக்குப்  பயந்து எல்லா லோகங்களுக்கும் சென்றும் யாரும் அவனுக்கு சரண் அளிக்கவில்லை. அதனால் இராமன் வாலியை ஒரே பாணத்தால் கொல்லுவேன்  என்று சொல்லுகிறான். இந்திரனின் மகன் ஜெயந்தன் போல எந்த உலகத்திற்குச் சென்றாலும் பிரம்மா சிவனைச் சரணடைந்தாலும் அவன் தப்பமுடியாது என்று சொல்கிறான். தனது உறுதி மொழிக்கான காரணத்தையும் சொல்லுகிறான் இராமன்.

 

जे न मित्र दु:ख होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥

 

எவன் ஒருவன் தனது நண்பனின் துயரத்தைக் கண்டு தானும் துக்கமடைவதில்லையோ, அவனைப் பார்ப்பதும் பாவம் என்கிறார் துளசிதாசர்.

 

துன்பம் தருவான் துணை நிற்கா தோழன் 

அன்பின் இலக்கணம் அல்ல  

நண்பன் துயரத்தில் நின்றிடா நெஞ்சினை 

பாவம் பெரிதெனப் பார்.

 

தொடரும்


No comments: