Wednesday, December 31, 2025

 

வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

  சம்பாதியின் வருகை               

 பதிவு எண் 395

 

நேற்றைய தொடர்ச்சி

 

மீண்டும் வால்மீகியிடம்  வருவோம்.

 

புதிய தெம்பும் நம்பிக்கையும் பெற்ற வானரங்கள்  கடற்கரையை அடைந்தன.  கடலின் மிகப் பெரிய பரப்பளவைக் கண்டதும் அதைக் கடந்து செல்வது நடக்காத காரியம் என்று மீண்டும் உற்சாகமிழந்தனர். இந்தப் பெரிய கடலைத் தாண்டிச் செல்வது எப்படி? அல்லது இதைத் தாண்டிச் சென்று சீதையைப் பார்த்து வரும் ஆற்றல் பெற்றவர் யார்? என்று ஆலோசனை செய்தபடி நடந்தனர்.

 

அங்கதன் அவர்களை உற்சாகப் படுத்தி “நூறு யோசனைத் தாண்டி சீதையை இராவணனின் பிடியிலிருந்து மீட்கும் பணியை ஏற்கும் வானரங்கள் தயவு செய்து முன் வரலாம். சுக்ரீவனின் மரண தண்டனையிலிருந்து விடுபடலாம்” என்று கூறினான்.

 

இதற்கு யாரும் மறுப்புக் கூறவில்லை. பிறகு அங்கதன் எத்தனை தூரம் தாவுவார்கள்  என்பதை ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டு வந்தான். ஆனால் அவர்கள் யாராலும் கடலைக் கடக்க முடியாது என்று தெரிந்து கொண்டான்.

 

கடைசியாக ஜாம்பவான் “முன்பு நான் வரம்புக்கு மீறி எத்தனை யோஜனையானாலும் தாவும் சக்தியைப் பெற்றிருந்தேன். ஆனால் இப்போது வயதாகி விட்ட படியால் 90 யோசனை தூரம் தான் என்னால் தாண்ட முடியும். வெகு காலத்திற்கு முன் வாமன அவதாரத்தில்  வாமனன் விஸ்வ ரூபமெடுத்து  உலகமனைத்தும் மறைத்து நின்றான்.. அவன் மூன்றடி அளக்கும் பொழுது நான் அவன் திருவடிகளை வலம் வந்து வணங்கினேன். இப்பொழுது எனது துரதிர்ஷ்டம் என்னால் இலங்கைக்கு தாவிச் சென்று  சீதையைக் காப்பாற்ற இயலாமல் உள்ளேன்” என்று வருத்தப்பட்டான்.

 

அப்பொழுது அங்கதன் ஜாம்பவானைப் பார்த்து “நான் நூறு யோசனைத் தூரத்தை சாதாரணமாகத் தாண்டுவேன். ஆனால் என்னால்  திரும்பி வர முடியுமோ முடியாதோ அதுதான் எனக்குத் தெரியவில்லை” என்று சொன்னான்.

 

உடனே ஜாம்பவான் அங்கதனைப் பார்த்து  “இளவரசே! நீங்கள் பெரும் பலம் பொருந்தியவர் என்பதை நான் அறிவேன். உங்களால் ஆயிரம் யோசனை தூரத்தையும் தாண்ட முடியும். நீங்கள் எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் சென்று திரும்புவீர்கள். அதனை நான் அறிவேன். ஆனால், அரசனாய் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு கட்டளை இடலாமே தவிர, தாமே செய்யக் கூடாது. எங்களில் யாராவது ஒருவரை அனுப்புங்கள். தாங்கள் செல்ல வேண்டாம்/ அதுதான் சிறப்பாக இருக்கும்” என்று கூறினான்.

 

தொடரும்

Tuesday, December 30, 2025

 


  


வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

  சம்பாதியின் வருகை               

 பதிவு எண் 394

 

நேற்றைய தொடர்ச்சி

 

திருஞான சம்பந்தர் மயிலாடு துறையை அடுத்துள்ள புள்ளிருக்கு வேளூர் அதாவது இன்றைய வைத்தீஸ்வரன் கோவிலில் சிவபெருமானை ஜடாயு, சம்பாதி இருவரும் வழிபட்டுள்ளதாக நிறைய பதிகங்கள் தேவாரம்) பாடி உள்ளார். முந்தைய பதிவில் சிலவற்றைப் பார்த்தோம். இப்பதிவில் சில பாடல்களைப் பார்ப்போம்.

  

 =========================================

அத்தியினீ ருரிமூடி யழகாக வனலேந்திப்

பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்

பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து

புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே

 ===================================

 

யானையை உரித்த தோலால் உடலை மூடிக் கொண்டு அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப்பலியேற்றுத் திரியும் பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சம்பாதியால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்குவேளூர்.

 

 =========================================

பண்ணொன்ற இசைபாடு மடியார்கள் குடியாக

மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்

எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்

புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

 ===========================

 

பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத மூன்று கோடி ஆண்டுகளை வாழ்நாளாகப் பெற்ற இராவணனொடு போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால் பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.

 

 =======================================

வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்

சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்

ஆதித்தன் மகனென்ன வகன்ஞாலத் தவரோடும்

போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

=================================

 

தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின் முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும், கருணைக்கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக மக்களோடு பறவைவடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் சாரும்இடம் புள்ளிருக்குவேளூர்.

 

===========================================

கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே

தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்

விடைத்துவரு மிலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்

புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே

=================================

 

சினந்து வேகமாக வருகின்ற கங்கையைத்தனது மணம்கமழும் சடை ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம் தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக அவனைப்புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால் வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.

 

இது மட்டுமல்ல ஐந்தாம் நூற்றாண்டில் சாத்தானார் இயற்றிய மணிமேகலை என்ற நூலிலும் சம்பாதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

 

=============================

வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த

சம்பாதி இருந்த சம்பாதி வனமும்

===============================

 

மணிமேகலை கதைப் பொருள் புகார் நகரைச் சுற்றி நடக்கிறபடியால் அந்தப் புகாரின் அருகே சம்பாதி தங்கி இருந்த சம்பாதி வனமும் இருந்துள்ளது என்று தெரிகிறது. அது தற்போது பெருந்தோட்டம் என வழங்கும் ஊராகும்.

 

தொடரும்

 

Monday, December 29, 2025

 



 

காலை வணக்கம்

 வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம் 

சம்பாதியின் வருகை           

பதிவு எண் 393

 

நேற்றைய தொடர்ச்சி.............

 

திருஞான சம்பந்தர் மயிலாடு துறையை அடுத்துள்ள புள்ளிருக்கு வேளூர் அதாவது இன்றைய வைத்தீஸ்வரன் கோவிலில் சிவபெருமானை ஜடாயு, சம்பாதி இருவரும் வழிபட்டுள்ளதாக நிறைய பதிகங்கள் தேவாரம்) பாடி உள்ளார். முந்தைய பதிவில் சிலவற்றைப் பார்த்தோம். இப்பதிவில் சில பாடல்களைப் பார்ப்போம்.

 

  ========================================

மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை

ஏகாய மிட்டுகந்த வெரியாடி யுறையுமிடம்

ஆகாயந் தேரோடு மிராவணனை யமரின்கண்

போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

=======================================


பெரிய தனது திருமேனியில் பெரியதொரு யானையினை உரித்து அதன்தோலை உடைவகையில் ஒன்றான மேலாடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும், சீதையைக் கவர்ந்து வானில் தேரோடு விரைந்து சென்ற இராவணனோடு போரிட்டுத் தாக்கி அவனைப் போகாதவாறு செய்ய முயன்ற சடாயுவால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.

 

 =======================================

கீதத்தை மிகப்பாடு மடியார்கள் குடியாகப்

பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

  ==========================================

 வேதகீதங்களை மிகுதியாகப் பாடும் அடியார்கள் கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளிவடிவினனும், வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால் ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்குவேளூர்.

 

  ==========================================

திறங்கொண்ட வடியார்மேற் றீவினைநோய் வாராமே

அறங்கொண்டு சிவதன்ம முரைத்தபிரா னமருமிடம்

மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்

புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

  ==========================================

சைவத்திறம் மேற்கொண்ட அடியவர்மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும், சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் அமரும் இடம் புள்ளிருக்குவேளூர்.

 


தொடரும்

Sunday, December 21, 2025

 



 

 

வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

  சம்பாதியின் வருகை               

 பதிவு எண் 392

 


நேற்றைய தொடர்ச்சி

 

சங்க கால இலக்கியங்களில் அதாவது கம்ப இராமாயணத்திற்கு முன்னரே  இராமாயணம் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில் திருஞான சம்பந்தர் மயிலாடு துறையை அடுத்துள்ள புள்ளிருக்கு வேளூர் அதாவது இன்றைய வைத்தீஸ்வரன் கோவிலில் சிவபெருமானை ஜடாயு, சம்பாதி இருவரும் வழிபட்டுள்ளதாக நிறைய பதிகங்கள் தேவாரம்) பாடி உள்ளார். அந்தப் பதிகங்களை விரிவாகப் பார்ப்போம்


============ 

கள்ளார்ந்த பூங்கொன்றை மத மத்தம் கதிர் மதியம்

    உள்ளார்ந்த சடைமுடி எம் பெருமானார் உறையும் இடம்

    தள்ளாய சம்பாதி சடாய் என்பார் தாம் இருவர்

    புள்ளானார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே

 

===============

தேன் நிறைந்த கொன்றை மலர்களையும் சிந்தனையை கலக்கும் ஊமத்தை மலர்களையும்,  ஒளிவீசும் பிறைச் சந்திரனையும், நிறைவாகத் தனது சடையினில் ஏற்றுக்கொண்டுள்ள பெருமான் உறையும் இடமாவது, இழிந்த பிறவி என்று கருதாமல் உயர்ந்தவை என்று மதிக்கப்பட வேண்டிய சடாயு மற்றும் சம்பாதி கழுகு இனத்தினைச் சார்ந்த பறவைகள் தங்களது அரசனாகக் கருதி இறைவனைத் தொழுது வணங்கும் தலம் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப் படும் தலமாகும்.


==================== 

தையலாள் ஒருபாகம் சடைமேலாள் அவளோடும்

ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையுமிடம்

மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்து

பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

===================

 ஒருபாகத்தே விளங்கும் தையல்நாயகியோடும் சடையின் மேல் பொருந்திய கங்கை நங்கையோடும் சென்று ஐயம் ஏற்று உழலும் அழகிய கருணையாளனும், உண்மை புகலாத இராவணனைப் பறந்து சென்று வலிமையை அழித்து அவனால் தாக்குண்டு, இராமனிடம்  நடந்த உண்மைகளைப் புகன்று உயிர்விட்ட சடாயுவால் வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் புள்ளிருக்கு வேளூர்.


=================== 

வாசநலஞ் செய்திமையோர் நாடோறும் மலர்துாவ

ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்

யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே

பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே

  ==================

தேவர்கள் தலவாசம் செய்து நாள்தோறும் தீர்த்த நீராடி நறுமலர்தூவி வழிபட விளங்கும் ஈசனும், எம் தலைவனும் யோசனை தூரம் சென்று மலர்பறித்து வந்து ஒருநாளும் தவறாமல் சம்பாதியால் பூசிக்கப்பட்டவனும் ஆகிய சிவபிரான் இனிதாக உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.. சில உரையாசிரியர்கள் ஜடாயுவும், சம்பாதியும் தினமும் பலயோசனை தூரம் பயணம் செய்து பூக்களைக் கொண்டுவந்து சிவபெருமானை வழிபட்டதகச் சொல்லப்படுகிறது.

 

தொடரும்

 

Saturday, December 20, 2025

 




 


வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

 சம்பாதியின் வருகை               

 பதிவு எண் 391

 


நேற்றைய தொடர்ச்சி....

 

வால்மீகி இராமாயணத்தின்படி இராவணனால் இறக்கைகள் வெட்டப்பட்டு ஜடாயு இறந்த இடம் தண்டகாரண்யத்தில் ஜனஸ்தானம் என்ற இடத்தில். ஆனால் கேரளத்தில் கொல்லம் மாவட்டத்தில் சடயமங்கலம் என்ற இடத்தில் இராவணனால் இறக்கைகள் துண்டிக்கப்பட்டு jஜடாய   பாறைகளில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. ஜடாயுமங்கலம் என்ற பெயர் மருவி சடையமங்களமாக மாறிவிட்டதாகச்  சொல்லப்படுகிறது இப்பகுதி பூமியிளிர்ருந்து 1160 அடி உயரத்தில் உள்ளது அங்குள்ள Jatayu Earth's Center Nature Park  ல் உள்ள தேசிய பூங்காவில் இருநூறு அடி அகலமுள்ள ஜடாயுவின் சிலை உள்ளது.

  

இது போல ஆந்திர பிரதேசத்தில் உள்ள லெபாக்ஷி என்ற இடத்திலும் இராவணனால் வெட்டப்பட்ட ஜடாயு விழுந்ததாகச் சொல்லபடுகிறது. தமிழ் நாட்டின் திருப்புட்குழி ள் உள்ள விஜயராகவ பெருமாள் கோவிலும் ஜடாயுவுடன் தொடர்பு உடையாதாகச் சொல்லப்படுகிறது, காரணம் இங்குள்ள தெய்வமான விஜயராகாவப் பெருமாள் தான் ஜடாயுவின் இறுதிக் காரியங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது.  ஜடாயு இங்குள்ள நீர்நிலையில் தான் விழுந்ததாகவும் அது இப்போது ஜடாயு தீர்த்தம் என்று அழைக்கபடுகிறது. அதுபோல கும்பகோணம் அருகில் உள்ள திருப்புல்ல பூதங்குடி யில் உள்ள பெருமாள் கோவிலும் ஜடாயுவுடன் தொடர்பு உடையதாகச் சொல்லப்படுகிறது. காரணம் இந்த இடத்திலும் ஜடாயுவிற்கு இறுதிக் காரியம் நடைபெற்றதாகக் கூராப்படுகிறது.

 

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. வால்மீகி இராமாயணம் திரேதாயுகத்தில் எழுதப்பட்டது.   கம்ப இராமாயணம் எழுதப்பட்டது பன்னிரண்டாம் நூற்றாண்டில் . ஆனால் ஏழாம் நூற்றாண்டின் சங்க இலக்கியங்கள், திருமுறைகள், மற்றும் புறநானூறு, மணிமேகலை போன்ற இலக்கியங்களிலும் இராமாயணம் பற்றிய நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த இடைப்பட்ட காலத்தில் தமிழில் வேறு இராமாயணங்கள் இருந்தனவா? இல்லை, சங்ககாலப் புலவர்கள் வடமொழியில் தேர்ச்சி பெற்று வால்மீகி இராமாயணத்திலிருந்து எடுத்து கருத்துகளைக் கையாண்டுள்ளனரா? காரணம் திருஞான சம்பந்தர் மயிலாடு துறையை அடுத்துள்ள புள்ளிருக்கு வேளூர் அதாவது இன்றைய வைத்தீஸ்வரன் கோவிலில் சிவபெருமானை ஜடாயு, சம்பாதி இருவரும் வழிபட்டுள்ளதாக நிறைய பதிகங்கள் தேவாரம்) பாடி உள்ளார். அந்தப் பதிகங்களை விரிவாகப் பார்ப்போம்.

 

தொடரும்

Friday, December 19, 2025

 




வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

சம்பாதியின் வருகை

பதிவு எண் 390

நேற்றைய தொடர்ச்சி

ஜடாயு, சம்பாதி பற்றி நிறையை புராணக் கதைகள் கிடைக்கின்றன.அதில் ஒன்று சம்பாதி முருகப் பெருமானுக்குச் செய்த உதவி. பர்ணசாலையில் இருந்து ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது எதிர்ப்பட்ட கழுகரசன் ஜடாயு ராவணனை எதிர்த்து வீரப் போர் புரிந்தான். ஆனால், ராவணனின் வாளுக்குத் தப்ப முடியாமல் இறக்கை அறுபட்டு நிலத்தில் வீழ்ந்து குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தான். அந்நேரம் சீதையைத் தேடிக்கொண்டு இராமபிரானும் அங்கே வந்தார். ஜடாயுவின் நிலையை அறிந்து வருத்தம் கொண்டார். அவரிடம் தகவல் கேட்டு, அவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

சீதையைத் தேடிக் கொண்டு இலங்கை செல்லும் அனுமன் மூலம் இதனைக் கேட்டறிந்தார் ஜடாயுவின் சகோதரன் சம்பாதி. தன் சகோதரனின் ஈமச் சடங்குகளை தன்னால் செய்ய இயலாது போய் விட்டதே என்று வருத்தப்பட்டார். இதனால் தனக்கு எழும் பாவத்தை எப்படிக் கழுவுவது என்று யோசித்தார். அதற்கு விடை கிடைத்தது சம்பாதிக்கு. கஜமுக பர்வதத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தால், சரியான தீர்வு கிடைக்கும் என்றது அசரீரி. அதன்படி சம்பாதி கஜமுக பர்வதத்திலேயே பல காலம் தங்கியிருந்து பூஜை செய்து வந்தார்.

ஒருநாள்.. முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியே சென்றார். அந்நேரம் இந்தப் பகுதியில் வாழ்ந்த சாதுக்களையும் அப்பாவி மக்களையும் முனிவர்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசுரன் துன்புறுத்தி வந்ததைக் கண்ணுற்றார் முருகப் பெருமான். முதலில் தாரகாசுரனை வதம் செய்ய எண்ணினார். ஐப்பசி பஞ்சமி திதியில் தாரகாசுரனை வதம் செய்த முருகப் பெருமான், பின்னர் களைப்பு தீர கஜமுக பர்வதத்தில் சற்றே ஓய்வெடுத்தார். அந்நேரம் சம்பாதி முருகப் பெருமானுக்கு அனைத்து வித உபசாரங்களையும் செய்து, அவரை வணங்கினார். பின்னர் சூரபத்மன் இருக்கும் இடத்தையும் முருகப் பெருமானுக்குக் காட்டித் தந்தார். இதனால் மனம் மகிழ்ந்த முருகப் பெருமான், சம்பாதியின் சங்கடத்தைத் தீர்த்து, நல் முக்தி நல்கினார். சம்பாதியின் பாவம் கரைந்தது. கழுகு அரசனாகிய சம்பாதி தவக்கோலம் கொண்டு வாழ்ந்த கஜமுக பர்வதம் பின்னர் கழுகு மலை எனப் பெயர் பெற்றது.

தொடரும்

Thursday, December 18, 2025

 

 


வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

 

சம்பாதியின் வருகை               

 பதிவு எண் 389

 

நேற்றைய தொடர்ச்சி

  

சம்பாதி தொடர்ந்தான் “ தோழர்களே! பார்த்தீர்களா! இம்மகத்தான பிரபாவத்தை.  முனிவர், இரகுநாதன் காரியத்தில்  ஈடுபடும்படி கூறினார். ஈடுபட்டேன். இதோ புதிய ஜீவன் உதயமாயிற்று. என் பழைய இளமை, பராக்கிரமம், ஆண்மை அப்படியே திரும்பப் பெற்றேன். இது இராகவனின் மேன்மையால் சாத்தியமாயிற்று. ஆகவே நீங்களும் விரைந்து செயல்படுங்கள். வெற்றி உங்களுக்கே! இம்மியும் சந்தேகம் இல்லை. இதோ என் வீர்யத்தையும் சக்தியையும் அறிந்து கொள்ளும்பொருட்டு உயரப் பறந்து போகிறேன். விடையளியுங்கள். உங்களக்கு மங்களமுண்டாகட்டும்” என்று சொல்லி மின்னல் போல  பறந்து மறைந்தான். வானரர்கள் அவன் பறந்து மறைந்ததை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். வானரர்களுக்கு உண்டான உற்சாகம் உச்சியை எட்டியது.

 

இங்கு நாம் ஒரு ஆராய்ச்சியில் இறங்கும் நேரம். வால்மீகி இராமாயணம் திரேதா யுகத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதாவது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன். பல்லாயிரம் ஆண்டுகளா அல்லது லட்சக் கணக்கான ஆண்டுகளா? என்பது இன்னும் விவாதப் பொருளாக உள்ளது.  இராமன் முதன் முதலில் சந்தித்தபொழுது ஜடாயு தனது வரலாற்றைச் சொல்கிறான். கிட்டத்தட்ட அது உயிரனங்கள் தோன்றிய வரலாறு போல இருந்தது.  அதில் ஜடாயு தன்னைப் பற்றியும் தனது அண்ணன் சம்பாதியைப் பற்றியும் குறிப்பிடுகிறான். தனக்கும் தனது அண்ணனுக்கும் இடையே சூரியனுக்கு அருகில் செல்லும் போட்டியில் ஜடாயு மயக்கமடைய  அவனைக் காப்பாற்ற தனது இறகுகளை விரித்துக் கொண்டு அவனுக்கு மேல் பரந்த பொழுது தனது இறகுகள் கருகி விந்திய மலையில் விழுந்ததாகச் சொல்கிறான். ஒரு முனிவர் தன்னைக் காப்பாற்றி எட்டாயிரம் ஆண்டுகள் இராம இலக்ஷ்மண வருகைக்காக காத்திருக்கச் சொன்னபடி காத்திருப்பதாகவும் சம்பாதி சீதையைத் தேடி வந்த வானரர்களிடம் சொல்கிறான்.

 

ஜடாயு இராவணனுடன் செய்த யுத்தத்தில் இறக்கைகள் வெட்டப்பட்டு தண்டகாரண்யம் ஜனஸ்தானத்தில் இறந்து போகிறான். ஆனால் சங்க இலக்கியங்களில் திருமுறைகளில் ஜடாயு, சம்பாதி இருவரும் தமிழகத்தைச் சேர்ந்த வைதீஸ்வரன் கோயில் அதாவது புள்ளிருக்கு வேளூர் என்ற ஊரில் இருட்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் எது சரி? இதில் வேறு என்ன செய்திகள் உள்ளன?

 

நாளை பார்ப்பபோம்.


 

 

Wednesday, December 17, 2025

 




வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

சம்பாதியின் வருகை

பதிவு எண் 389

நேற்றைய தொடர்ச்சி

சம்பாதி தொடர்ந்தான் “ தோழர்களே! பார்த்தீர்களா! இம்மகத்தான பிரபாவத்தை. முனிவர், இரகுநாதன் இலட்சியத்தில் ஈடுபடும்படி கூறினார். ஈடுபட்டேன். இதோ புதிய ஜீவன் உதயமாயிற்று. என் பழைய இளமை, பராக்கிரமம், ஆண்மை அப்படியே திரும்பப் பெற்றேன். இது இராகவனின் மேன்மையால் சாத்தியமாயிற்று. ஆகவே நீங்களும் விரைந்து செயல்படுங்கள். வெற்றி உங்களுக்கே! இம்மியும் சந்தேகம் இல்லை. இதோ என் வீர்யத்தையும் சக்தியையும் அறிந்து கொள்ளும்பொருட்டு உயரப் பறந்து போகிறேன். விடையளியுங்கள். உங்களக்கு மங்களமுண்டாகட்டும்” என்று சொல்லி மின்னல் போல பறந்து மறைந்தான். வானரர்கள் அவன் பறந்து மறைந்ததை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். வானரர்களுக்கு உண்டான உற்சாகம் உச்சியை எட்டியது.

இங்கு நாம் ஒரு ஆராய்ச்சியில் இறங்கும் நேரம். வால்மீகி இராமாயணம் திரேதா யுகத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதாவது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன். பல்லாயிரம் ஆண்டுகளா அல்லது லட்சக் கணக்கான ஆண்டுகளா? என்பது இன்னும் விவாதப் பொருளாக உள்ளது. இராமன் முதன் முதலில் சந்தித்தபொழுது ஜடாயு தனது வரலாற்றைச் சொல்கிறான். கிட்டத்தட்ட அது உயிரனங்கள் தோன்றிய வரலாறு போல இருந்தது. அதில் ஜடாயு தன்னைப் பற்றியும் தனது அண்ணன் சம்பாதியைப் பற்றியும் குறிப்பிடுகிறான். தனக்கும் தனது அண்ணனுக்கும் இடையே சூரியனுக்கு அருகில் செல்லும் போட்டியில் ஜடாயு மயக்கமடைய அவனைக் காப்பாற்ற தனது இறகுகளை விரித்துக் கொண்டு அவனுக்கு மேல் பரந்த பொழுது தனது இறகுகள் கருகி விந்திய மலையில் விழுந்ததாகச் சொல்கிறான். ஒரு முனிவர் தன்னைக் காப்பாற்றி எட்டாயிரம் ஆண்டுகள் இராம இலக்ஷ்மண வருகைக்காக காத்திருக்கச் சொன்னபடி காத்திருப்பதாகவும் சம்பாதி சீதையைத் தேடி வந்த வானரர்களிடம் சொல்கிறான்.

ஜடாயு இராவணனுடன் செய்த யுத்தத்தில் இறக்கைகள் வெட்டப்பட்டு தண்டகாரண்யம் ஜனஸ்தானத்தில் இறந்து போகிறான். ஆனால் சங்க இலக்கியங்களில் திருமுறைகளில் ஜடாயு, சம்பாதி இருவரும் தமிழகத்தைச் சேர்ந்த வைதீஸ்வரன் கோயில் அதாவது புள்ளிருக்கு வேளூர் என்ற ஊரில் இருடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் எது சரி? இதில் வேறு என்ன செய்திகள் உள்ளன?

நாளை பார்ப்பபோம்.

தொடரும்

Tuesday, December 16, 2025

 





வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

  சம்பாதியின் வருகை               

 பதிவு எண் 388

 

நேற்றைய தொடர்ச்சி

 

முனிவர் மேலும் சொல்லிக்கொண்டே போகிறார் “ஆகையால் கேள்! கழுகரசே! கவலையுற வேண்டாம். இத்தகைய உத்தமியான ஜானகியைத் தேடிக் கொண்டு இங்கு வருவார்கள் ஸ்ரீ இராம தூதர்களான வானரர்கள்.  அவர்களுக்கு நான் சொன்னதையும் ஸ்ரீ இராஜ மகிஷியைப்பற்றியும் நீ தெரிவிப்பாயாக. இதைச் செய்ததும் நீ உன் வலிவையும் இறக்கைகளையும் திரும்பப் பெறுவாய். அதை எதிர்பார்த்து இங்கேயே தங்கியிரு. இப்பொழுதே உனக்குச் சிறகுகள் உண்டாக்க என்னால் முடியாது.

 

“இது முக்கியமான தேவ காரியம். அந்த அரச குமாரர்களுக்காகவும், பிரம்மம் உணர்ந்தவர்களுக்காகவும், தருமத்திற்காகவும், தேவர்களுக்காகவும், முனிவர்களுக்காகவும்,  இந்திரனுக்காகவும் நீ இந்த சேவையைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும். நானும் அம்மானிட திலகங்களான மகான்கள் ஸ்ரீ இராம இலக்ஷ்மணர்களைத்  தரிசிக்க ஆவல் உள்ளவன்.  ஆனால் எனது உடல் அவ்வளவு காலம் உயிரை வைத்துக் கொள்ள சக்தியற்றது. ஆகவே நீ இந்த சேவையைச் செய்து முடிப்பாயாக. உன் சிறகுக்கும், வலிவும் மீண்டு வருமளவும் காலம் காத்திரு என்று ஆறுதல் சொல்லிப் போனார். நான் உங்கள் வருகைக்காக காத்து நிற்கிறேன்,”


இவ்வாறு சம்பாதி சொல்லிகொண்டிருக்கும் பொழுதே  தனது உடலில் புதிய இறக்கைகள் தோன்றுவதை உணர்ந்தது.  ஸ்ரீ இராம காரியத்தில் ஈடுபடுவர்களுக்கு எதுதான் கைகூடாது என்ற நம்பிக்கை ஒருபுறம். எண்ணாயிரம் வருடங்கள் இதற்காகக் காத்திருந்து இது உண்மையே என்று தனக்கும் உலகத்தொருக்கும் என்றென்றும் எடுத்துக் காட்டவே வாய்ப்புக் கிடைத்ததைப் பற்றியும் மா முனியின் வாக்கு ஒரு நாளும் பொய்த்துப் போகாது என்ற நம்பிக்கையும் செயலில் முடிவு பெறுவதைப் பற்றியும் அவன் மனம் பூரித்தது.

 

அவன் வானரர்களின் புது உணர்ச்சியைச் சிறப்புறச் செய்ய மேலும் சொல்லிக்கொண்டே போகிறான் “இராம தூதர்களே! இராம காரிய வீரர்களே! மகத்தான இயக்கத்தின் பெரு வீரர்களே! உங்கள் வரவை எதிர்பார்த்து நூறு வருடங்கள் காத்திருந்தேன். இன்றுதான் என் எண்ணம் நிறைவேறிற்று. நல்லவேளையாக அந்த சுபார்சுவன் இராவணனையும் வைதேகியையும் எதிர்த்து ஒழிக்கவில்லை.அவன் ஏதாவது செய்திருந்தால் உங்கள் முயற்சி வீணாகியிருக்கும். எனது விருப்பமும் நிறைவேறி இருக்காது. இதுதான் தெய்வ சங்கல்பம் போலும். இதை உணராது நான் அவனைக் கடிந்து பேசினேன். அபகரிக்கப்பட்டு  கதறிக்கொண்டு செல்லும் மைதிலியைக் காக்காமலும் கொடிய அரக்கனை மாய்க்காமலும்  விட்டுவிட்டது உனக்கு அழகாவென்று கோபித்தேன்.  நீசனானாலும் அவன் சரணடைந்த பின் அவனை வதைப்பது நீதியாகுமோவென்றான் மைந்தன். அந்த உண்மை இப்பொழுது நன்கு பலனளிக்கிறது. ஆகவே இராவணனைத் தேடுவது உங்கள் பொறுப்பாகிறது. உங்கள் ஆற்றல் வெற்றி அளிக்குமென்று உறுதி கூறுவேன்” என்று அவன் சொல்லிகொண்டிருக்கையில், சம்பாதியின் உடலிலிருந்து இரு சிறகுகள் முளைத்து வெளிவர ஆரம்பித்தன. புளகாங்கிதமடைந்தான் சம்பாதி. மயிர்கூச்சலுடன் பிரமித்து நின்றனர் வானரர்கள்.கழுகரசனின் வாய் எதேச்சையாக ‘இராமா ‘இராமா’ என்று உச்சரிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்தவர்கள் எல்லோர் மனத்திலும் அத்தாரக மந்திரம்  எதிரொலி எழுப்பி  அவர்கள் அறியாமலே ‘இராம ‘இராம’  வென்று ஆவலுடன் உச்சரிக்க ஆரம்பித்தன. புதிய வடிவம் பெற்றான் சம்பாதி. எங்கும் ஆரவாரம்.

 

தொடரும்

 

Monday, December 15, 2025

 


வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

சம்பாதியின் வருகை

பதிவு எண் 387

நேற்றைய தொடர்ச்சி

சீதையைப் பற்றி தகவல் அறிந்து கொண்ட வானரர்கள் தாங்கள் மேற்கொள்ளவிருந்த சாகும் வரை உண்ணாவிரதத்தை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு மகிழ்ந்தனர். அவர்கள் சம்பாதியைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர். மறுபடியும் திரும்பும்பொழுது ஜாம்பவான் “இராவணன்தான் சீதையைக் கடத்தினான் என்பதை எவ்வாறு கேட்டு அறிந்தாய்” என்று கேட்டான்.

அதற்கு சம்பாதி “என் இறகுகள் எரிந்த பிறகு என் மகன் ‘சுபாஷ்வன்’ என்னைக் காப்பாற்றி வந்தான். எனக்குத் தினம் உணவு கொண்டு வருவான். ஒரு நாள் நான் பசியோடு இருந்தேன். சுபாஷ்வன் உணவு கொண்டுவராமல் திரும்பினான்.நான் அவனைக் கடிந்து கொண்டேன். அப்போது அவன் அதற்கான காரணத்தைக் கூறினான் “ இன்று நான் உணவைத் தேடிக் கொண்டிருந்த பொழுது ஆற்றல் மிகுந்த ஒரு பெரிய இராக்ஷசன் ஒரு பெண்ணை ஆகாய மார்க்கமாகத் தூக்கிச் செல்வதைக் கண்டேன். அவர்கள் இவர்களையும் பிடித்து உனக்குத் தீனியாக கொண்டு வர விரும்பினேன். ஆனால் அந்த இராக்ஷசன் மிகவும் நட்புடன் தன்னைப் போகவிடும்படி கேட்டுக் கொண்டான். என்னால் அவன் வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. அவன் சென்ற பிறகு சித்தர்கள் வந்து அவன் இராக்ஷஸ அரசன் இராவணன் என்று தெரிவித்தனர். இராக்ஷஸ அரசன் என்னைக் கொல்லாது விட்டது எனது அதிர்ஷ்டம் என்று தெரிவித்தனர்”


தனது நட்பினால் வானரங்களுக்கு தன்பால் ஏற்பட்டுள்ள நம்பிக்கையைக் கண்ட சம்பாதி தனது சரித்திரத்தைத் தொடர்ந்தது.”நான் விந்திய மலையில் விழுந்த பிறகு ஆறு நாட்கள் நினைவில்லாமல் கிடந்தேன். நினைவு வந்ததும் நிசாகரன் ’ என்னும் முனிவரின் அருகில் இருப்பதைக் கண்டேன். அவர் எனது இறகுகள் எரிந்த காரணத்தைக் கேட்டார். அவரிடம் முழு விவரத்தையும் தெரிவித்தேன்.

நிசாகர மகரிஷி ஸம்பாதியின்‌ வரலாற்றைக்‌ கேட்டார். ‌. அவன்‌ புலம்பி அழுது உயிர்‌ மாய்க்க எண்ணியதையும்‌ பார்த்துக்‌ கொஞ்சநேரம்‌ சிந்தனையில்‌ ஆழ்ந்தார். தவத்தால் சித்திபெற்ற அவர் அகக் கண்ணில் என்ன கண்டனரோ? ஸம்பாதியை நோக்கிப் ‌ புன்முறுவல் செய்து முகக்காந்தியால் புத்துயிர்‌ அளித்தும்‌ பின்வருமாறு இனிது மொழிந்தார்.


“அப்பனே! சம்பாதி! அழாதே! கண்ணீரைத் துடைத்துக் கொள். யாவருக்கும் உண்டு இறைவனருள் என்று உணர்வாயாக. என் தவ மகிமையால் அகக்கண்ணால் எல்லாம் புலனாகிறது. ஆகையால் கவலை வேண்டாம். நன்றாகக் கவனி. இக்ஷ்வாகு குலத்தில் கீர்த்திமானான தசரத சக்ரவர்த்திக்கு மகா தேஜஸ் பொருந்திய புதல்வன் ஒருவர் பிறக்கப் போகிறார். அவர் சத்தியத்தில் ஊன்றியவர் . அதுவே அவருடைய ஜீவசக்தி. தந்தையின் கட்டளைப்படி தம்பி இலக்ஷ்மணனுடன் கானகமேகுவார். அம்மகானின் பத்னியாகிய சீதை என்ற உத்தமி. அவருடன் கூடவே வருவாள். அப்போது தேவர்களாலும் அசுரர்களாலும் கொல்ல முடியாதவனான இராட்சதன் இராவணன் அவளை ஜனஸ்தானத்திலிருந்து திருடிக் கொண்டு போவான், உண்மைப் பதிவிரதை அவ்வம்மையார் கொடிய அரக்கன் என்ன முயற்சி செய்த போதிலும் அவனுக்கு இசையாமலும் அவனை கண்ணெடுத்தும் பாராமலும் துக்கத்தில் மூழ்கியவளாய் கணவனின் நினைவிலேயே உயிர் வைத்திருப்பாள்.


அவள் நிலையைக் கண்டு பசி, தாகம், களைப்பு மேலிடாதபடி அவளை இரட்சிக்கும்பொருட்டு இந்திரன் தேவர்க்கும் கிடைப்பதற்கரிய தேவ அமுதத்தை வைதேகியிடம் அனுப்புவான். அதை அவள் பெற்று இது இந்திரனிடமிருந்து வந்ததாகையால் உத்தமமானததென்று அறிந்து அது தன் கணவருக்கு சேரவேண்டியதென்று தீர்மானித்து அதைத் தன் முன்வைத்து “இது ஸ்ரீ இராகவனுக்குச் சமர்ப்பணம். எனது தலைவனும் கணவனுமான ஸ்ரீ இராமச்சந்திரன் தம்பி இலக்ஷ்மணனுடன் இப்போது உயிருடன் இருந்தாலும் சரி அல்லது அவர்கள் அமரர்களாகி விட்டிருப்பினும் சரி. இது அவர்களுக்கே உணவாகட்டும் என்று சொல்லி அதைத் தரையில் வைத்து நிவேதனம் செய்துவிடுவாள்.

தொடரும்

Sunday, December 14, 2025

 



அதாகப்பட்டது

 

 

 

விதி என்ன செய்துவிடும்?

 

இப்படிகேட்ட இருவர் விதியிடம் சரண்டர் ஆன கதை இங்கு சொல்லப்போவது.  உங்களுக்கும் தெரிந்து இருக்கும். ஒரு நினைவூட்டல்...

 

அது ஜனமேஜயன் அரசவை

 

ஜனமேஜயன் யார் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். அர்ஜுனனின் புதல்வன் அபிமன்யு. அபிமன்யுவின் புதல்வன் பரிக்ஷித். அவனது புதலவன்தான் ஜனமேஜயன். ஹஸ்தினாபுரத்து அரசன்.

 

ஒரு நாள் ஜனமேஜயன் தனது  மந்திரிகள், பிரதானிகளுடன் அரசவையில் அளவளாவிக் கொண்டிருந்தான்.

 

அப்போது திடீரென்று வேதவியாசர் அவையில் நுழைந்தார். வியாசர் முதலில் ஜனமேஜயனுக்கு பாட்டன் முறை. அவரைக் கண்டதும் குல முதல்வர் என்ற முறையிலும் தவ வலிமை கொண்டவர் என்ற காரணத்தினாலும் மகிழ்வுடன்  வணங்கி, வரவேற்று, அவருக்கு பாத பூஜைகள் செய்து ஆசனத்தில் அமர வைத்தான்.

 

பிறகு அவரிடம் பேச ஆரம்பித்தான்.

 

“முனிவரே, எனக்கு ஒரு சந்தேகம்  தங்களுக்கு முக்காலமும் அறிந்து கொள்ளும் சக்தி உள்ளது என்பது உண்மைதானே? என்று வினவினான்.

 

வியாசரும் சிரித்துக்கொண்டே ‘ஆமாம் அது உண்மைதான். எனது தவ வலிமையால் எனக்கு அது கிடைத்தது” என்று பதிலுரைத்தார்.

 

ஜனமேஜயன் தொடர்ந்தான் ‘முனிவரே இவ்வளவு பெரிய யுத்தம் மூண்டு லட்சக்கணக்கான பேர் மாண்டு போனார்களே? பீஷ்மர், துரோணர் போன்ற பல முக்கியாமனவர்கள் அழிந்து போனார்களே? இரண்டு தரப்பிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லோரும் அழிந்து போனார்களே? முக்காலமும் உணர்ந்த உங்களுக்கு தெரியும் இப்படி ஒரு யுத்தம் வரப்போகிறதென்று.  இத்தனை அழிவை நீங்கள் நினைத்தால் ஏதாவது செய்து  தடுத்து இருக்கமுடியுமே. நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?” என்று ஒரு பெரிய கேள்வியைச் சுலபமாக  எழுப்பினான்.

 

வியாசரோ “எவ்வளவு பெரிய விஷயத்தை மிகச் சுலபமாக இவன் இப்படிச் சபையில் சான்றோகள் முன் கேட்டுவிட்டானே. இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா இல்லை வேண்டாமா?” என்று நினைத்துச் சிரித்துக்கொண்டே மௌனமாக இருந்துவிட்டார்.

 

ஜனமேஜயன் விடவில்லை. அவரிடம் மீண்டும் ‘சுவாமி நான் சபையில் கேள்வி கேட்கிறேன் . நீங்கள் பேசாமல் உள்ளீர்கள். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் ஏன் மகாபாரதப் போரை தடுத்து இருக்கக்கூடாது?” என்று மீண்டும் கேட்டான்.

 

 

மீண்டும் வியாசர் சிரித்துவிட்டு மௌனமாக இருந்தார்.

 

ஜனமேஜயன் விடவில்லை ‘சுவாமி! நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? என்றான்.

 

வியாசர் ‘ஜனமேஜயா... நீ கேட்பதெல்லாம் சரி. எனக்கு முக்காலம் அறியும் சக்தி உண்டு. போர் வருவது எனக்கு நன்றாக தெரியும், ஆனால் நான் நினைத்து இருந்தாலும் இந்தப் போரைத் தடுத்திருக்கமுடியாது “ என்றார்

 

ஜனமேஜயன் மீண்டும் அவரை விடவில்லை. ‘ஏன் உங்களால் அந்தப் போரைத் தடுத்து இருக்கமுடியாது காரணம் சொல்லுங்கள்? என்று வினவினான்.

 

ஜனமேஜயன் இளைஞன். அவனால் வியாசர் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

 

வியாசர் ‘ஜனமேஜயா நான் நினைத்து இருந்தாலும் தடுத்திருக்க முடியாது?” என்றார்

 

இளமை வேகம். ஜனமேஜயன் அவரை விடவில்லை ‘சுவாமி குல முன்னவர் என்ற முறையில்,  நீங்கள் இன்ன இன்ன ஆபத்து வரப்போகிறது என்று சொல்லி இருந்தால் எல்லோரும் கேட்டு இருப்பார்களே” என்று சொல்ல

 

வியாசரோ ‘கேட்டிருக்க மாட்டார்கள்” என்றார்.

 

சுவாமி நீங்கள் சொல்வதை துரியோதனனும் அவனது சகோதரர்களும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் என் பாட்டன்  தர்மர் நீங்கள் சொல்வதைக் கேட்டிருப்பார் அல்லவா”

 

‘கேட்டு இருக்கமாட்டார்”

 

‘ஐயனே  சூதாட்டம் ஆரம்பிக்கும் போதே நீங்கள் தருமரிடம் இதில் நீ தோற்றுப்போவாய். திரௌபதி துகிலுரியப்படுவாள். நீங்கள் நாட்டை இழப்பீர்கள். போர் மூழும். பலர் மாண்டு போவார்கள் என்று தெளிவாக எச்சரித்து இருந்தால் தர்மர் விளையாடி இருக்க மாட்டாரே”

 

‘கண்டிப்பாக விளையாடி இருப்பார்”

 

 

ஜனமேஜயன் வியாசரிடம் தொடர்ந்து மகாபாரத யுத்தத்தை ஏன் தடுத்திருக்கமுடியாது என்று வாதம் செய்து  கொண்டே இருந்தான்.

 

வியாசர் அவனிடம் ‘நீ விடுவதாக இல்லையா” என்று கேட்டார்

 

‘இல்லை” அவன் பதில்

 

 ‘ஜனமேஜயா இப்போது உன்னுடைய அபிப்ராயம் என்ன? பின்னல் நடக்கப்போவது தெரிந்தால் அதைத் தடுத்துவிடலாம் என்பதுதானே”

 

“ஆமாம் முனிவரே”

 

‘அப்படியானால் உனக்கு நடக்கப்போவதை இப்போது சொல்கிறேன். முடிந்தால் தடுத்துக்கொள்”

 

‘சொல்லுங்கள்”

 

‘இன்றிலிருந்து பத்தாம் நாள் உனக்கு பிரம்மஹத்தி தோஷம் (பிராமணனைக் கொன்ற தோஷம்) வரப்போகிறது. முடிந்தால் நீ அதைத் தடுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு வியாசர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

திகைத்துப் போனான் ஜனமேஜயன். இப்படி வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டோமே என்று ஒரு கணம் நினைத்தான்.

 

ஆனாலும் ஜனமேஜயன் க்ஷத்ரிய அரசன் அல்லவா? ராஜஸ குணம் பொருந்தியவன். உடனே வியாசரின் வாக்கை எப்படி எதிர்கொள்வது என்று யோசனை செய்தான். தேசத்தில் உள்ள பண்டிதர்கள் எல்லோரையும் வரவழைத்து  இந்த பிரச்னையிலிருந்து எப்படி வெளிவருவது என்று ஆலோசனை சொல்லுமாறு பணித்தான்.

 

அந்த பண்டிதர்கள் எல்லோரும் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து மன்னனுக்கு ஒரு யோசனை சொன்னார்கள்.

 

‘மன்னரே நீங்கள் ஒரு யாகம் செய்வதே இந்த பிரச்னை நேராமல் தடுக்க முடியும்” என்றனர்.

 

மன்னன் உடனே யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய உத்திரவிட்டதுடன் வேத விற்பனர்களை வரச்சொன்னார்.

 

 மூட்டை மூட்டையாக சமித்துகளும், குடம் குடங்களாக நெய்யும் வந்தன. வேள்விக்காக பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன.

 

வேள்வியைத் தலைமை ஏற்று யார் நடத்தப்போகிரார்கள்? பல அந்தண  வேத விற்பன்னர்கள் வியாசர் சொன்னதை மனதில் கொண்டு யாகத்தை நடத்த முன்வரவில்லை. இறுதியாக ஒரு வேதவித்து, ஏழை அந்தணர் முன்வந்தார். இதைச்செய்தால் நிறைய பொருள் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு தலைமை ஏற்று யாகம் நடத்த ஒப்புக்கொண்டார்.

 

வேள்வி நடக்கும் இடத்தைச் சுற்றி வீரர்கள் நிறுத்தப்பட்டனர். வேறு யாரும் உள்ளே வரவிடக்கூடாது என்று அவர்களுக்கு உத்திரவு இடப்பட்டது.

 

வேள்வி ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிறைய நெய்யும் சமித்துகளும் அக்னியில் இடப்பட்டதால்  நெருப்பின் ஜ்வாலைகள் மேலெழும்பின.அந்த இடமே ரம்மியமாக காட்சி அளித்தது.

 

ஜனமேஜயனுக்கு மிக்க மகிழ்ச்சி. வியாசர் சொன்னது தவறு என நிரூபித்து விடலாம் என்ற நம்பிக்கை அவன் மனதில் துளிர்விட்டது.

 

வேள்வி துவங்கி ஒன்பது நாட்கள் கழிந்துவிட்டன.

 

பத்தாம் நாளிலும் பாதி கடந்துவிட்டது.

 

ஜனமேஜயன் இரண்டு வீரர்களை தனக்கு அருகில் நிற்க உத்திரவிட்டான். ஒரு வேளை கோபத்தில், தான் அங்கிருந்த அந்தணர்களைத் தாக்க முற்பட்டால் தன்னை உடனே தடுத்துவிடும்படி அவர்களுக்கு கட்டளையிட்டான்.

 

வேள்வி முடிய இன்னும் ஒரு மணி நேரம்...................

 

அரை மணி நேரம்...................

 

கால் மணி நேரம்..........................

 

இன்னும் ஐந்தே வினாடிகள்...........................

 

 

இன்னும் இரண்டே நொடிகள்....

 

ஜனமேஜயனுக்கு மிக்க மகிழ்ச்சி. கடைசி வினாடியில் தவறு நடந்துவிடக்கூடாது என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு நிமிடம் திகைத்துவிட்டான். ஒன்பது நாட்களாக விடாமல் யாகத்தை நடத்தி வைத்துக்கொண்டிருந்த அந்த ஏழை அந்தணன் தூங்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் வாய் மந்திரங்களைத் தெளிவாகச் சொல்லிகொண்டிருந்தது. கை நெய்யை யாககுண்டத்தில் வார்த்துக்கொண்டிருந்தது.

 

கடைசி நொடியில் முதியவர் ஏதும் தவறு செய்துவிடக்கூடதே என்று நினைத்தான். அவரைத் தொட்டு எழுப்ப நினைத்தவன் சற்று யோசித்தான். வேள்வி செய்வதற்காக அவர் காப்புக் கட்டியிருந்தார்.

 

என்ன செய்வது என்று யோசித்த மன்னன் அருகிலிருந்த தர்ப்பையை எடுத்து அவர் முதுகில் மெதுவாகத் தட்டினான்.திடுக்கிட்டு விழித்தெழுந்த அந்த அந்தணர் பதற்றத்தில் அப்படியே யாககுண்டத்தில் விழுந்து மாண்டார்.  திகைத்துபோனான் ஜனமேஜயன்.

 

வியாசரைப் பிரார்த்தித்தான். அங்கு எழுந்தருளிய வியாசரிடம் ‘முதற்கண் என்னை மன்னியுங்கள். தாங்கள் சொன்னது சரி என்று ஆகிவிட்டது. ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை. நான் தர்ப்பையால் தொட்டதற்கு அந்தணர் ஏன் பதறித் தீயில் விழுந்தார்” எனக்கேட்டான்.

 

வியாசரோ ‘ஒன்பது நாட்கள் தொடர்ந்து அந்த அந்தணர் வேள்வி நடத்திய களைப்பில் உறங்கிவிட்டார். அப்போது அவருக்கு ஒரு கனவு வந்துள்ளது. கனவில் அவர் காட்டுக்குள் செல்கிறார். அவரை ஒரு சிங்கம் துரத்தி வருகிறது. சிங்கம் அவர் முதுகில் காலால் அடிக்கும் நேரத்தில் நீ தர்ப்பையால் அவர் முதுகைத் தொட, கனவு நிஜமாகிறதோ என்ற பதட்டத்தில் அவர் தப்பிப்பதற்காக முயற்சி செய்து தீக்குள் விழுந்துவிட்டார்”

 

“அரசனே இதைத்தான் விதி என்பர். உனக்கு வரப்போகும் பாதகம் என்ன என்று தெரியும். அதைத் தடுக்கும் சக்தியும் இருக்கும். ஆனால் தடுக்கமுடியாது. இதுதான் மகாபாரதப் போருக்குக் காரணம்” என்று சொல்லி ‘இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற நீ மகாபாரதக் கதையைக் கேட்கவும். வைசம்பாயனர் உனக்கு அதைச் சொல்லுவார்” என்று சொல்லி வியாசர் மறைந்தார்.