துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 175
வால்மீகி இராமாயணத்தில்.. ………….
வாலி இராமனிடம்
“நீங்கள் எந்த
நோக்கத்திற்காக சுக்ரீவனுக்கு உதவி செய்ய முன்வந்தீர்களோ, அந்த
வேலையை என்னிடம் முதலிலேயே கொடுத்திருந்தால் அந்தக் கொடிய இராவணனை எந்த வித
யுத்தமும் செய்யாமல் கழுத்தில் சுருக்கிட்டு உங்கள் முன் கொண்டு வந்ததோடு அல்லாமல்
சீதையையும் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைத்திருப்பேன்” என்று
சொல்கிறான்.
இங்கு ஒரு
விஷயத்தைக் கவனிக்க வேண்டும். சுக்ரீவனுடன் யுத்தம் செய்ய வாலி புறப்படும் சமயம்
தாரை சுக்ரீவனுக்கு உதவி செய்ய தசரதனின் புதல்வர்கள் உடன் இருப்பதாக அங்கதன் மூலம் தெரிந்து கொண்டதாகச் சொல்கிறாள்.
அப்பொழுது சீதையை இராவணன் கடத்திச் சென்றுவிட்டான். அவளைத் தேடித் தருவதற்காக
இராமன் சுக்ரீவனுடன் நட்பு கொண்டுள்ளான் என்ற எந்த விவரமும் அவள்
தெரிவிக்கவில்லை. ஆனால் வாலி இராமனிடம்
கேள்விக் கணைகளைத் தொடுக்கும்போழுது இந்த விவரத்தைச் சொல்லி என்னிடம்
சொல்லியிருக்கலாமே என்று சொல்கிறான். அப்படியானால் வாலிக்கு இந்த விவரம் முதலிலேயே
தெரிந்துள்ளது. இராவணன் சீதையைத் தனது பகுதியின் மீதுதான் எடுத்துச் சென்றுள்ளான்
என்ற உண்மையும் தெரிந்துள்ளது. இராவணன் வாலியின் நண்பன். தர்மத்தைப் பற்றிப்
பேசும் வாலி, தனது நண்பனிடம் அவனது செயலைக் கண்டித்து சீதையை இராமனிடம் ஒப்படைக்கச்
சொல்லி இருக்கலாமே? ஆனால் அவன் அதைச் செய்யாமல் மௌனமாக
இருந்துவிட்டான்.
தருமத்தை
மீறுவது மட்டும் தவறு அல்ல. அதைத் தட்டிக் கேட்காமல் பார்த்துக் கொண்டிருப்பவனும்
தவறு செய்பவன் தான். இராமனைப் பொறுத்தவரை இதையும் தர்மத்தை மீறிய செயலாகக் கருதி
அவனைத் தண்டித்திருக்கலாம்.
“என்னிடம் முதலிலேயே சொல்லி இருந்தால் நான் சீதையை இராவணனின்
பிடியிலிருந்து மீட்டு கொண்டு வந்திருப்பேன்” என் வாலி
சொல்கிறான். அப்படி கொண்டு வந்திருந்தால் தான் மரணம் அடைய வேண்டியதிருக்காதே என்று
நினைக்கிறான். ஆனால் வாலியின் பிடியிலிருந்து சுக்ரீவனின் மனைவியான ரூமையை
விடுவித்து சுக்ரீவனிடம் யார் கொண்டு வந்து ஒப்படைப்பது? வாலி இதைப் பற்றி நினைக்கவில்லை பேசவில்லை. ஆனால் இதைத்தான் தர்மத்தை
மீறிய நிரூபிக்கப்பட்ட குற்றமாக இராமன் கருதுகிறான். அதனால் வாலிக்கும்
இராமனுக்கும் இடையே ஒப்பந்தம் என்பது சாத்தியமில்லாதது.
இராமன் வாலியை
மன்னித்தால், வாலி இராவணன் என்ற தனி ஒருவனிடமிருந்து சீதையை மீட்டு வரலாம். ஆனால்
இராமன் வாலிக்கிடையே உள்ள ஒப்பந்தம் பற்றி அறிந்தால் ஒரு வேளை இராவணனே நேரடியாக
வந்து இராமனிடம் சரணடையலாம். அதனால் இராவணன் மன்னிக்கப்படலாம். அதனால் இராவண வதம்
நிகழாது. இராமன் தேவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல்
போகலாம். அவதார நோக்கம் நிறைவேறாது.
தொடரும்,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment