Friday, October 2, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

வாலி வத சர்ச்சை

 

பதிவு எண் 223

 

நேற்றைய தொடர்ச்சி............... 

 

இராமனின் வில்லில் இருந்து புறப்பட்ட அந்த நாணொலி, பொறியைப் {இயந்திரத்தைப்} போல ஒலி பெருக்கியது. அக்கணையால் மார்பில் துளைக்கப்பட்ட வாலி, அச்சத்தில் நடுங்கினான். இதயம் துளைக்கப்பட்ட வாலி ரத்தம் கக்க ஆரம்பித்தான். பிறகு தன் முன் நின்ற ராமனையும், அவன் {ராமனின்} அருகில் நின்ற சுமித்திரையின் மகனையும் {லட்சுமணனையும்} கண்டான். காகுஸ்த குலத்தவனை {ராமனை} ஏசிய வாலி தரையில் விழுந்து உணர்வற்றவன் ஆனான். சந்திரனைப் போன்ற பிரகாசமுடைய தனது தலைவன் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைத் தாரை கண்டாள். இப்படி வாலி கொல்லப்பட்ட பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையையும், அதனுடன் சேர்த்து அழகிய நிலவு போன்ற முகம் கொண்ட தாரையையும் மீண்டும் அடைந்தான்

 

வியாசரால் மகாபாரதத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட இராமாயணத்தில் தாரை சுக்ரீவன் மீது ஆசைப்படுவதாக வாலி நினைப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த இராமாயணத்தில் இராமன் வாலி மீது நேருக்கு நேர் நின்று அம்பு எய்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

அடுத்து நாம் காண இருப்பது. அத்யாத்ம இராமாயணம். இது முழுக்க முழுக்க பக்தி இலக்கியம். இராமனைக் கடவுளாகச் சித்தரிக்கிறது. இதிலும் இராமன் மறைந்து நின்று வாலியைக் கொன்றதாகச் சொல்லப்படுகிறது.

 

இராமனைப்‌ பார்த்தபடியே சுக்ரீவன்‌ சண்டை செய்து கொண்டிருந்தான்‌. இவ்விதமே மற்போர்‌ புரிந்து கொண்டிருந்த அவர்களைப்‌ பராக்கிரமசாலியான இராமன்‌ பார்த்தார்‌. அம்பறாத்தூணிலிருந்து ஒரு பாணத்தை எடுத்து, இந்திரனால்‌ அளிக்கப்பட்ட வில்லில்‌ பூட்டி, செவிவரையில்‌ நாண்‌ கயிற்றை இழுத்து, மரக்கூட்டத்தின்‌ அருகில்‌, பிறர்‌ கண்ணில்படாதவாறு இருந்து வாலியின்‌ மார்பைக்‌ குறிவைத்து, வஜ்ராயுதம்‌ போல்‌ வேகமும்‌ ஆற்றலும்‌ பொருந்திய அதைச்‌ செலுத்தினார்‌. அந்த பாணம்‌ வாலியின்‌ மார்பைப்‌ பிளந்தது. அவன்‌ பெரும்‌ குரல்‌ எழுப்பித்‌ துள்ளிக்‌ குதித்துப்‌ பூமியை நடுங்கச்‌ செய்தவாறு (தரையில்‌) வீழ்ந்தான்‌.

 

சிறிது நேரம்‌ நினைவிழந்து கிடந்த பின்‌, மீண்டும்‌ நினைவடைந்தான்‌. அப்போது, தன்‌ முன்பாக, இடது கையில்‌ கோதண்டம்‌; வலது கையில்‌ பாணம்‌; மரவுரி ஆடை; சடா மகுடம்‌; அகன்ற மார்பு; ஒளி வீசும்‌ வனமாலை; செழித்து நீண்ட அழகிய கைகள்‌; இளம்‌ அருகம்புல்‌ போன்று பச்சைப்‌ பசேல்‌ என்று உடற்பிரகாசம்‌; இருபுறங்களிலும்‌ பணி செய்யக்‌ காத்திருக்கும்‌ சுக்ரீவ-லட்சுமணர்கள்‌; தாமரைக்‌ கண்கள்‌ - இவ்விதமாக ஸ்ரீராமன்‌ நின்று கொண்டிருப்பதைப்‌ பார்த்து, வெறுப்புடன்‌ நோக்கி, மெல்லிய குரலில்‌, “ராமா, உனக்கு நான்‌ என்ன தவறிழைத்தேன்‌ - என்று என்னைக்‌ கொன்றாய்‌?” என்று கேட்டான்‌.

 

“அரசநீதியை நீ அறியாததால்‌ தான்‌, இகழத்தக்க இந்தச்‌ செயலைச்‌ செய்திருக்கிறாய்”‌. என்றான் இராமன்

 

“மரத்தின்‌ கிளை மறைவிலிருந்து என்மேல்‌ பாணத்தை விடுத்து, ஒரு திருடனைப்‌ போல்‌ நடந்து கொண்டாயே, அதனால்‌ என்ன புகழை அடையப்‌ போகிறாய்‌? நீ ஒரு க்ஷத்திரியன்‌; மனு குலத்‌ தோன்றல்‌. என்‌ எதிரில்‌ நின்று யுத்தம்‌ செய்திருந்தால்‌, இவ்விரண்டு சிறப்புக்களின்‌ பயன்‌ (வென்றால்‌ புகழ்‌, தோற்று மடிந்தால்‌ வீரசொர்கம்‌) பெற்றிருப்பாய்‌. என்னால்‌ செய்ய முடியாத ஏதேனும்‌ ஒரு மகத்தான காரியத்தை சுக்ரீவன்‌ உனக்குச்‌ செய்து கொடுத்திருக்கிறானா? “ என்று வினவினான் வாலி.

 

தொடரும்..........


No comments: