துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
ஆர்.சேஷாத்ரிநாதன்
நேற்றைய தொடர்ச்சி.............
இனி மூன்றாவது கேள்வி. வாலியின்
மனமாற்றம் இயல்பானதா? வாலி வதம் என்பது எல்லா இராமாயணங்களிலும் இடம் பெற்றுள்ள
அம்சமாகும். எல்லா இராமாயணங்களிலும் அம்பால் தாக்கப்பட்ட வாலி இராமனிடம் பல
கேள்விகள் கேட்டாலும் இறுதியில் மனம் மாறி இராமனிடம் மன்னிப்புக் கேட்டு இராமனை
ஏற்றுக் கொள்கிறான். அத்தகைய மனம் மாற்றம்
இயல்பானதா என்ற கேள்வி எல்லோரும் மனத்திலும் எழ வாய்ப்புண்டு. இதைப் பற்றி விரிவான பதிவு கம்ப இராமாயணத்தின்
அடிப்படையில் கம்பரின் கிட்காந்தா காண்டம் எழுதும் சமயம் தருகிறேன். தற்பொழுது
துளசி தாசரின் இராமாயணம் படித்துக் கொண்டிருக்கிறோம். துளசி தாசரின் இராம சரித
மானஸ் ஒரு பக்தி இலக்கியம். அதில் இராமனைப் பற்றி உயர்வான கருத்துகளை மட்டுமே அவர்
பதிவு செய்துள்ளார். போருக்குச் செல்ல
விடாமல் தடுக்கும் தாரையிடம் வாலி இராமனைப் பற்றி மிக உயர்வாகச் சொல்கிறான்.
அம்பால் தாக்கப்பட்டு இராமனிடம் ஒரு சில
கேள்விகளே கேட்டாலும் இறுதியில் இராமனின் திருவடிகளைச் சரணடைகிறான். இங்கு
பக்தி தான் பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாலி வாதத்தில் சில கேள்விகள் மறைந்து நிற்கின்றன. வால்மீகியும் கம்பரும் அவற்றை நமது கற்பனைக்கு விட்டுவிட்டனர். அதில் முக்கியமான கேள்வி. குகையிலிருந்து வெளியே வந்த வாலியுடன் அவனது கோபமும் ஆணவமும் சேர்ந்து வந்தது. அரசனாக சுக்ரீவன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனது கோபம் அதிகமாயிற்று. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக சுக்ரீவன் குகையிலிருந்து தான் வெளிவரக்கூடாது என்பதற்காக குகையின் வாயிலை பாறை கொண்டு அடைத்துவிட்டான் என நினைத்தான். சுக்ரீவன் போதிய விளக்கங்கள் கொடுத்தும் அதை வாலி ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் அந்த விவரங்களை மற்ற அமைச்சர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. இறக்கும் தருவாயில் வாலி அனுமனைப் புகழ்ந்து இராமனிடம் சொல்கிறான். அப்படிப்பட்ட அனுமனிடம் வாலி ஏன் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை?
அனுமன் மட்டுமல்ல ஜாம்பவான் போன்ற மூத்தோரிடம் அவன் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. சுக்ரீவன் வெளியேறியதும் அவனுடன் அனுமன், நலன், நீலன், ஜாம்பவான் போன்றோர் உடன் சென்றனரே. அப்போதாவது அவன் உணர்ந்து கொண்டிருக்கவேன்டாமா? காரணம் அவர்கள் எல்லோரும் நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். அவர்கள் நம்மை விட்டு ஏன் பிரிந்து செல்கின்றனர்? என்றாவது யோசித்திருக்கலாமல்லவா? அவனது மனைவி தாரை, சிறந்த பெண்மணி, நன்கு கற்றவள் அவளிடமாவது நடந்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாமல்லவா? அங்கு தான் வாலியின் ஆணவம் அவனது கண்ணை மறைத்தது. இங்கு தான் வால்மீகி, கம்பர் நமது யூகத்திற்கு விட்டுவிட்டனர்.
காரணம் எல்லா விவரங்களையும் அறிந்து வாலி திருந்தி விட்டால் இராவண வதம் என்னாவது? அதே போல் சுக்ரீவனும் வாலியும் மோதும் போது இராமனால் சுக்ரீவனை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அனுமன் அவர்களுடனே இருந்தவன். அவனாலுமா சுக்ரீவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை? இப்படி ஒரு சில கேள்விகளுக்கான பதிலை வால்மீகியும் கம்பரும் நமது கற்பனைக்கே விட்டு விட்டனர்.
தொடரும்
No comments:
Post a Comment