Sunday, October 18, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 வாலி வத சர்ச்சை

 பதிவு எண் 240

ஆர்.சேஷாத்ரிநாதன் 


 

நேற்றைய தொடர்ச்சி.............

 

 

தனக்களித்த தண்டனையாக இராமன் விட்ட பாணம் தனக்குப் பரமபதம் தரும், வீடு பேற்றை அருளும் பரிசாக அமைவதாக மகிழ்ச்சியோடு கூறுகிறான் வாலி. அது மட்டும் அல்ல, தன்னைக் கொல்ல முயன்ற தம்பி சுக்ரீவன் கூட "வெற்று அரசு எய்தி, எம்பி, வீட்டு அரசு எனக்கு விட்டான்" என உளம் களிக்கிறான். இந்த மகிழ்ச்சியின் விளைவாகவே, தம்பி சுக்ரீவனை அழைத்துத் தழுவிக்கொண்டு அவனை இராமனிடம் ஆற்றுப்படுத்துகிறான் :

 

'மறைகளும், முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத்

துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், திணி வில் தூக்கி,

அறை கழல் இராமன் ஆகி, அற நெறி நிறுத்த வந்தது

இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய்!"

 

இங்கே, பரம்பொருளை உணர்ந்துகொண்ட ஜீவாத்மா தான் பெற்ற பெருவளத்தைப் பெறாஆர்க்கு அறிவுறுத்துகிறது. தன் தம்பியை மட்டும் அல்லாது தன் சுற்றம் முழமையுமே இராமனுக்கு அடைக்கலம் ஆக்கிய பின் "உயர் கரம் உச்சி வைத்தான்" வாலி. முன்பு மானிட இராமனை வெறுந் தலையாலே வணங்கிய வாலி இப்போது பரமாத்மாவை உணர்ந்து கொண்ட உணர்வோடு பரமாத்மாவான இராமனைத் தலைக்கு மேலே கைகூப்பித் தொழுகிறான்

 

பாரதி கருத்துப்படி, வாலி வதையை இக் கண்ணோட்டத்தில் கண்டால் இப்படி வேதாந்தமாகப் பொருள் கொள்ளலாம் - வாலி வதை வழியாகக் கம்பன் உணர்த்த வரும் கருத்து இதுதான் : வாலி வேறு யாரும் இல்லை நாம்தான். விலங்கான வானர மனம் - குரங்கு மனம்- நம் மனம். இதன் ஆற்றல்கள் அளப்பரியன. அதன் விளைவாக, ஆணவம், சினம்... எனப் பல மலங்களில் மூழ்கிக் கிடக்கிறோம். அப்போது இறைவன் நம் முன் தோன்றாமல் மறைவாகவே நின்று சோதனை(கள்) என்ற பாணத்தை எறிந்து நம்மைத் தாக்குகிறான். ஆனால் அந்தச் சோதனைகளைத் தாங்கி ஈடு கோடுக்கும் போது விலங்கு மனம் மானிட மனமாக மாறுகிறது.  பின் அந்தப் பரம்பொருளை அறிந்துகொள்ளும் போது, இறைவனோடு ஒப்புரவு ஆகும் போது, மானிட மனமாக மாறிய விலங்கு மனம் பரமபதத்தை, வீடு பேற்றை அடைகிறது. ஆகவே இறைவன் மறைவாக இருந்து நமக்கு அனுப்பும் சோதனைகள் தண்டனைகள் அல்ல மாறாக, வீடு பேற்றை அருளும் பரிசுகள். இந்த இறையியல் தத்துவத்தைதான் கம்பன் தன் வாலி வதை வழியே உணர்த்திவிடுகிறான்.

 

தொடரும்

 


No comments: