துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
இங்கு வாலியின் மனைவி தாரையைப் பற்றி
சிறிது தெரிந்து கொள்வோம்.
வாலியின் மனைவி தாரை - அறிவும் ஆளுமையும் நிறைந்த பெண்
இராமாயணத்தில் இடம்பெறும் பெண் பாத்திரங்களில் தாரை தனித்துவமானவள். அவள்
வானர அரசனான வாலியின் மனைவியாகவும், அங்கதனின் தாயாகவும்
அறியப்படுகிறாள். ஆனால் அவளது சிறப்பு இந்த உறவுகளுடன் முடிந்துவிடுவதில்லை.
அரசியல் நுண்ணறிவு, முன்னறிவு, துணிவு, குடும்பப் பொறுப்பு, நீதியுணர்வு, சொல்வன்மை ஆகிய பல
உயர்ந்த பண்புகளைக் கொண்டவளாகத் தாரை விளங்குகிறாள். ஆண்களின் வீரமும் அதிகாரப்
போட்டியும் முன்னிலை பெறும் கிஷ்கிந்தைக் காண்டத்தில், அறிவின் குரலாக
ஒலிக்கும் பெண் தாரை.
தாரையின் பிறப்பும் குடும்பமும்
வால்மீகி இராமாயணத்தில் தாரை, வானர மருத்துவரான
சுஷேணனின் மகள் என்று குறிப்பிடப்படுகிறாள். அவள் வானர அரசனான வாலியை மணந்து, கிஷ்கிந்தையின் அரசியாக
வாழ்ந்தாள். வாலி மிகுந்த உடல் வலிமையும் போராற்றலும் கொண்டவன். அவனுக்கும்
தாரைக்கும் பிறந்த மகன் அங்கதன். அங்கதன் பின்னாளில் இராமனின் அணியில் முக்கியமான
வானர வீரனாகத் திகழ்கிறான்.
தாரையின் குடும்ப உறவுகளைப் பின்வருமாறு காணலாம்:
தந்தை :சுஷேணன், வானரர்களின்
மருத்துவராக அறியப்படுபவர்
++கணவன்: வாலி, கிஷ்கிந்தையின் வலிமைமிக்க அரசன்
மகன்: அங்கதன், இராமனுக்கு உதவிய சிறந்த வானர வீரன்
கணவனின் தம்பி: சுக்ரீவன், பின்னர்
கிஷ்கிந்தையின் அரசனானவன்
++ தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து களைத்தபோது வாலி தனி ஒருவனாகக்
கடைந்து தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தான் என்று கம்ப ராமாயணம் கூறுகிறது. அப்படி
கடையும் போது வெளிவந்த பொருட்களில் ஒருவள் தான் தாரை என்று ரங்கநாத ராமாயணம்
கூறுகிறது. இதையே கம்ப ராமாயணம் யுத்த காண்டத்தில் மீட்சிப் படலத்தில், அதாவது
வானர வீரர்களின் மனைவியர் சீதையைச் சந்திக்கச் செல்கின்றனர். அப்போது தாரை பாற்கடலில்
தன்னுடன் உதித்த முத்துமாலையைச் சீதைக்கு பரிசளிக்கிறாள் என்று கம்பர் சொல்கிறார்.
நின்ற வாரிதியை முன்பு
நெருப்பு எழ கடைந்தபோது அங்கு
ஒன்றல பலவும் ஆங்கே
உற்பவித்தவற்றினுள்ளே
தன்னுடன் பிறந்த முத்து
மாலையை தரையில் தோன்றி
மின் என நின்ற சீதைக்கு
அளித்தனள் விரைவில் தாரை
ஆனால் சில உரையாசிரியர்கள் இது கம்பரின் பாடல் அல்ல. இடைச் செருகல் என்று
சொல்கின்றனர்.
தொடரும்.
No comments:
Post a Comment