Sunday, January 4, 2026

 



 

 


வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம் 


ஹனுமனின் எழுச்சி                

 

பதிவு எண் 399

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஜாம்பவான் ஹனுமனின் வீரத்தை அவனுக்கு உணர்த்துவதை  நலுங்கு மெட்டு இராமாயணத்தில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.

 


===========================================

இஷ்டசித்தி நிறைவேற இருக்குதையா மார்கமொன்று

கஷ்டமில்லை நஷ்டமில்லை காரியத்தைத் தேறிச்செய்யப்

புத்தியிலும் சக்தியிலும் பொறுமையிலும் அருமையுள்ள 

எத்தனையோ பெருமையுள்ள சித்தசுத்தி மிகவுமுள்ள

உத்தமராம் அனுமாரை உபசரிப்போம் சுபம்பெருக

 

--------------------

 

இத்தரையில் அவராலேயே எல்லாங்கை கூடுமையா

மருமமெல்லாம் அவரரிவார் மாதவனாம் ஸ்ரீ இராமனுக்குப்

பிரியமுடன் உழைத்திடவே பிரபஞ்சனந்தன் லுதித்துவந்தார்

தன்னுடைய பலமறியார் தகுந்தபடி யுபசரித்துச்

சொன்னலவர் பலமிகுமே சுளுவிலெல்லாம் சாதிப்பாரே

 

-----------------------

 

ஆகையினால் அனுமாரை அடுத்துரைப்போக் வருமென்று

தாகமுடன் எழுந்தாரம்மா தனியாக ஓரிடத்து

மவுனமாக விருக்குமந்த மருதியை வந்துசூழ்ந்து

விவரமெல்லாஞ் சொன்னதோடு வெகுவிதமா உபசரித்துப்

புகழ்ந்தாரம்மா................

 

(நலுங்கு மெட்டு இராமாயணம்)

===========================================



தொடரும்

 

 

Saturday, January 3, 2026

 


இலங்கையில்

ஏழு நாட்கள்

===================

 


முதல் நாள்

 

முருகன் தரிசனம் முடிந்து கொழும்பு நகரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம். இலங்கையில் பார்க்கவேண்டிய இடங்கள் கோவில்கள் நிறைய இருந்தாலும், ஏழு நாட்கள் அனைத்தையும் பார்ப்பது கடினம் என்பதால் பயண அமைப்பாளர் முக்கியமான இடங்களை பேருந்தில் இருந்து கொண்டே காட்டினார் , இறங்கி ஏறி பார்ப்பதால் நிறைய நேரம் வீணாகும் என்றும் முக்கியமான இடங்களைப் பற்றிச் சொல்ல பேருந்தில் இருந்தே அவற்றைப் பார்த்தோம்.

 

முதலில் கொழும்பு நகரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.:

 

கொழும்பு இலங்கையின் வணிகத் தலைநகரம் மற்றும் பெருங்கொழும்பு மாநகர சபையின் மையமாகும். 2000 ஆண்டுகளுக்கு  முன் கிரேக்கர், அரபர், சீனபோர்த்துகீசிய வணிகர்களின் துறைமுகமாக இருந்தது. 1815 ல் இந்நகரம் வெள்ளையர்களின் கைக்குள் வந்தது .அப்போது அது இலங்கையின் தலைநகரானது.  1948 ல்  சுதந்திரம் பெற்றது. பெரு நகர மக்கள் தொகை முப்பது லட்சம் என்று சொல்லப்படுகிறது. இங்கு நிறைய இடங்களை பெருந்திளிருந்தே பார்த்தோம். அவைகளாவன  இலங்கையின் பழைய பாராளுமன்றம், ஐ.நா அலுவலகக் காரியாலயம், இந்திய மற்றும் பல நாட்டுத் தூதரகங்கள், ஜனாதிபதி மாளிகை,, பண்டாரநயாக சர்வதேச மாநாட்டு மண்டபம் கொழும்பு துறைமுகம். ...................

 

இவற்றில் முக்கியமான ஒரு சில இடங்களைப் பற்றியக் குறிப்புகளைக் கீழே தருகிறேன்

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்:.

 

இந்த பெயரை யாரும் எளிதில் மறக்க முடியாது. 1975 கால கட்டங்களில் நான் தூத்துக்குடியில் இருந்தேன் அன்றைய கால கட்டத்தில் ரேடியோவைத் தவிர வேறு பொழுது போக்கும் சாதனங்கள் இல்லை. தூத்துக்குடி இலங்கைக்கு அருகில் இருப்பதால் மிகவும் தெளிவான ஒலிபரப்புடன் அதிகமாகக் கேட்பது இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகள் தான். அதுவும் அவர்களது வர்த்தக ஒலிபரப்பு மிகவும் புகழ் பெற்றது. கே எஸ் ராஜா, அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரின் குரலை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். அவர்களின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது,  அதைப் போல அமீன் சயானியின் பினாகா கீத் மாலா என்ற நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது  அந்த இலங்கை வானொலியின் கட்டிடத்தை பார்த்ததும் எனக்கு அன்றைய நினைவுகள் நினைவுக்கு வந்தன

 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் என்பது ஆசியாவின் பழமையான வானொலி நிறுவனமாகும். 1925-இல் "Radio Ceylon" என்ற பெயரில் தொடங்கப்பட்ட இது, 1967-இல் அரசாங்கத்தின் கீழ் "Ceylon Broadcasting Corporation" ஆக மாற்றப்பட்டு, பின்னர் SLBC என அழைக்கப்பட்டது 1925 டிசம்பர் 16 அன்று "Radio Ceylon" என்ற பெயரில் நிறுவப்பட்டது. இது ஆசியாவின் முதல் வணிக குறுக்கலை (short-wave) வானொலி நிலையமாகும். இந்த நிலையம் கடந்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது/. இது ஒரு வரலாற்றுச் சாதனை  இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் கோடிக்கணக்கான கேட்போரைக் கவர்ந்தது.   70,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட மிகப்பெரிய இசை காப்பகம் உள்ளது. அந்த நிலையம் என் கண்களில் இருந்து மறைந்தது..........

 

அடுத்து உலக சரித்திரத்தின் அத்தியாயங்களைத்  தனது கரும் பக்கங்களால் நிரப்பிய ஒரு இடத்தைப் பற்றிச் சொல்கிறேன்

 

 



பயணம் தொடரும்

 


இலங்கையில் 

ஏழு நாட்கள் 


முதல் நாள்


 பயணத்தின் முதல் நாளை முருகன் தரிசனத்துடன் இனிது துவங்கினோம். அந்தக் கோவிலின் பெயர் மாதம்பே முருகன் கோவில்.

 

இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே நகருக்கு அருகில் அமைந்துள்ள மாதம்பே முருகன் கோவில் "குட்டி கதிர்காமம்" என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ஒரு இந்து ஆலயமாகும். சிற்பக் கலையின் மேன்மைக்கு இந்தக் கோவில் உதாரணம்

 

இக்கோவில் பற்றிய முக்கிய தகவல்கள்:

 

அமைவிடம்: கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில், சிலாபம்) நகரிலிருந்து சுமார் 9 கி.மீ தெற்கிலும், மரவில) நகரிலிருந்து 10 கி.மீ வடக்கிலும் இது அமைந்துள்ளது.

 

சிறப்பம்சங்கள்:

 

இக்கோவிலின் முகப்பில் 20 அடிக்கும் உயரமான பிரம்மாண்டமான முருகன், சிவன் மற்றும் அனுமன் சிலைகள் காணப்படுகின்றன.

 

நவீன திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இக்கோவில், வண்ணமயமான சிற்பங்களாலும் வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

வரலாறு: இது ஒரு தனியார் கோவிலாகும். 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு உள்ளூர் தொழிலதிபரின் பங்களிப்புடன் இந்த ஆலய வளாகம் திறந்து வைக்கப்பட்டது.

 

வழிபாடு: இங்கு கதிர்காமம் கோவில் பாணியிலான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. இங்கு கோவில்களில் நாம் அர்ச்சனை வைக்க வெற்றிலை, பாக்கு தேங்காய் பழம் ஆகியவை எடுத்துச் செல்வோம். அங்கு அவர்கள் வெற்றிலை தேங்காய் எடுத்துச் செல்வதில்லை. பதிலாக பப்பாயா, தர்பூஷனி,  வாழைபழம் ஆகியவைகளை நறுக்கி ஒரு தட்டில் வைத்து மேலே மறைத்து அர்ச்சனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.

 

இது ஆகாமக் கோவில் அல்ல.  கோவில் மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது,

 



பயணம் தொடரும்

 





வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

  ஹனுமனின் எழுச்சி                

 பதிவு எண் 398

 

 

நேற்றைய தொடர்ச்சி

 

திகைத்து நிற்கும் ஹனுமனுக்கு உற்சாகமூட்டுகிறான்  ஜாம்பவான்.

 

 ======================

बलम् बुद्धिः च तेजः च सत्त्वम् च हरि सत्तम |

विशिष्टम् सर्व भूतेषु किम् आत्मानम् न सज्जसे || ४-६६-७

==============


உன் தோள்வலியும் அவன்(கருடன்) சிறகின் வேகமும் சமானமென்பதையும் எல்லாரும அறிவர். அவனது ஆண்மையும் உனதேயாகுமல்லவா? உனது ஆற்றலை அறிந்தல்லவா ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி  தனது கணையாழியை உன்னிடம் அளித்திருக்கிறார். அதன் சக்தி உன்னிடத்தில் பிரதிபலித்து பரிணமிக்குமன்றோ? இதில் சிந்தனைக்கு இடமுண்டோ? வானரோத்தமா! பலமும் புத்தியும், தேஜசும் சத்வ குணமும் மற்ற எல்லோரையும் விட உன்னிடத்தில் அதிகம் திகழ்வதை நீ மறந்தனை போலும். ஒப்புவமை இல்லாத அழகும், நினைத்த உருவமெடுக்கும் அஞ்சனா தேவி என்ற அப்சரஸ் மாதிடம் வாயு பகவானால்  ஆக்கவைத்த உன் பிறவியின் மகிமையையும் நீ மறந்ததின் காரணமென்ன? வாயு பகவானான உனது தந்தையின் வேகம் உனதன்றி வேறு யாருக்குண்டு?

 

  ====================

அசையா கரை! நம் உள்ளம் அசையட்டுமே!

அஞ்சாதே வீரா! அருளே நம் ஆயுதமே!

சமுத்திரம் பாயும், சத்ரு பலம் மாயும்,

சத்ரு முன் மௌனமா? சூரியனை வலம் வந்தாய்!

 ----

அங்கதன் நின்றான், நீலன் மயங்கினான்,

ஜாம்பவன் சிந்தைத் தீயால் சுடர்த்தினான்!

“ஹனுமனே! எழு! பொங்கி எழு!

உன் பாய்ச்சலால் இலங்கை நடுங்கட்டுமே!”

வானர வீர! வானின் கனலே!

 ----

வாழும் அருளின் வாகை மலரே!

நீ பாயும் தருணம், நதி நடுங்கும் தருணம்,

நீ நினைக்கும் தருணம், உலகம் நிமிரும் தருணம்!

அசையா கரை! நம் உள்ளம் அசையட்டுமே!

அஞ்சாதே வீரா! அருளே நம் ஆயுதமே!


 

தொடரும்.

 

Friday, January 2, 2026

 





 


வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

ஹனுமனின் எழுச்சி

பதிவு எண் 397

நேற்றைய தொடர்ச்சி

ஸ்கந்த புராணத்தில் இருந்து ஒரு சுலோகம்,


=======================

“निइलो अ~नगादो हनुमानं च जाम्बवान् अथ केसरी | समुद्र तीरं आगम्य न शेकुः स्पन्दितुम पदम् | रावणस्य बलं ज्ञानत्व तीरे नाद नदी पतेः

======================

இந்த சுலோகத்தின் பொருள்: “நீலன், அங்கதன், ஹனுமன், ஜாம்பவான், கேசரி ஆகியோர் கடற்கரையை அடைந்ததும், அவர்கள் பயத்தால் கால்களை எடுத்து வைக்க முடியாமல் நிற்கின்றனர்.. இராவணனின் வலிமையை அறிந்த அவர்கள், அநத, நதிக்கரையில் வீழ்ந்தனர் என்று கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது” என்பதாகும்.


=========================

சமுத்திரம் பாய்ந்தது, சலனமின்றி நின்றோம்,

சத்ரு பலம் தெரிந்ததும், சிந்தை மயங்கியது!

அங்கதன், ஹனுமான், ஜாம்பவன், நீலன்,

அடிக்கொரு அசைவும் செய்யாது நின்றனர்!

“ராவணன் வீரமோ? நம் உள்ளம் வீணோ?”

என்றே கேள்விகள் எழுந்தன உள்ளத்தில்!

அந்தக் கரை நமக்குக் கற்பனைக் கோட்டை,

அதைத் தாண்டும் துணிவே தெய்வத்தின் அருள்!

==========================


அனுமனின் நிலையைக் கவனித்த ஜாம்பவான் மனம் தெளிந்தான். ஸ்ரீ இராம காரியம் கைகூடுவதில் ஆற்றல் குன்றியதாகத் தெரியவில்லை. இவ்வொரு வானரத் தலைவனால் தான் அக்காரியம் நிறைவேறப்பெறும் என்று நன்கறிந்த ஜாம்பவான் ஹனுமனை நோக்கிப் பேசுகிறான்.

“வானர இனத்து தலைச்சிறந்த தனிப்பெரும் வீரனே! எல்லா சாஸ்திரங்களையும் கற்றறிந்து கருத்துணர்ந்த கலைஞனே!


======= ============

वीर वानर लोकस्य सर्व शास्त्र विदाम् वर |

तूष्णीम् एकांतम् आश्रित्य हनुमन् किम् न जल्पसि || ४-६६-२

===================

“என்ன இது? ஒரு தனி இடத்தை அடைந்து மௌனம் சாதிப்பது என்ன காரணமோ?


==================

हनुमन् हरि राजस्य सुग्रीवस्य समो हि असि |

राम लक्ष्मणयोः च अपि तेजसा च बलेन च || ४-६६-३

====================

இராமலக்ஷ்மனர்கள், சுக்ரீவன் முதலிய பெரியோர்களுக்கு வலிமையிலும் பராக்கிரமத்திலும் சமமானவன் நீ என்பதை நினைக்கவில்லை போலும். என்ன சிந்தனை செய்கிறாய்? அப்பனே! கருடனின் வேகம் உனக்குண்டு என்பதனை நான் அறிவேன்.

தொடரும்

Thursday, January 1, 2026

 


இலங்கையில்

ஏழு நாட்கள்

===============


இலங்கைக்குச் சென்று வருவது என முடிவு செய்தேன். ஏன் இலங்கை? இந்தியாவில் எல்லா இடங்களும் பார்த்தாகி விட்டதா? என்ற உங்கள் கேள்வி புரிகிறது.  உடலில் தெம்பு இருக்கும்போது இலங்கைக்கு சென்று வந்துவிடுவோம் என்ற எண்ணம் தான். இலங்கை எனது தாயின் தாய் நாடு. என்னது புரியவில்லையா? எனது தாய் யாழ்ப்பாணம் அருகே உள்ள சுநாகம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். 1943 ல்  தனது திருமணத்திற்காக இலங்கையிலிருந்து இங்கு குடிபெயர்ந்தார். 1943  மார்ச்சில் திருமணம் 1956 மார்ச்சில் அமரர் ஆகிவிட்டார். அப்போது எனக்கு வயது ஐந்து. அன்னையுடன் இருக்கமுடியவில்லை அன்னை பிறந்த மண்ணையாவது பார்த்து விடுவோம் என்ற எண்ணத்தில் சென்றென்

 

அதிகாலை இரண்டு மணிக்கு விமானம் கொழும்பு சென்றடைந்தது. நாற்பத்து எட்டுபேர் கொண்ட எங்கள் குழுவிற்காக பேருந்து தயாராக இருந்தது. நீர் கொழும்பபு வழியாக பேருந்து சென்றது. சரியாக நான்கு மணிக்கு ஒரு தேநீர் கடை வாசலில் நின்றது. பொறுப்பாளர் ஒரு குண்டு போட்டார். இங்கு பாலே கிடையாது. இறக்குமதி செய்யப்பட்ட பவுடர் பால் தான். மெஷின் காபி தயார் செய்வதால் சர்க்கரை முதலிலேயே கலந்து விடுவர். மீண்டும் இந்தியா திரும்பும் வரை சர்க்கரை நோயாளிகளுக்கு சிரமம் என்று சொல்லிவிட்டார்.

"என்னது!பாலே கிடையாதா? அப்புறம் எப்படி?" இணையத்தின் பக்கங்களைப் புரட்டினேன். அவர் சொல்வது சரிதான்.  மாட்டிலிருந்து பால் கறப்பது” என்ற நடைமுறை அங்கு மிகக் குறைவாகவே உள்ளது;  இலங்கையில் உள்ளூர் பால் உற்பத்திச் செலவு அதிகமாக இருப்பதால், இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர் பெரும்பாலும் மலிவானதாகவும், எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. அதனால் அரசு மற்றும் வணிகர்கள், உள்ளூர் பசும்பால் உற்பத்தியை விரிவாக்குவதற்குப் பதிலாக, வெளிநாடுகளில் இருந்து பால் பவுடரை இறக்குமதி செய்வதற்கு  முன்னுரிமை கொடுக்கின்றனர். காரணம் இங்கு மேய்ச்சல் நிலங்கள் மிகவும் குறைவு. உள் நாட்டு உற்பத்தி நாட்டின் தேவையில் முப்பது முதல் நாற்பது சதவீத தேவையைத்தான் எதிர்கொள்ள முடியும். அதனால் தேவையைப் பூர்த்தி செய்ய  நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இறக்குமதி செய்கிறது. 2025ம் ஆண்டில் இலங்கை சுமார் 2,700க்கும் மேற்பட்ட கப்பல்கள் மூலம் சரக்குகளை  இறக்குமதி செய்துள்ளது. இலங்கை ஆண்டு ஒன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் பால் உபயோகப்படுத்துகிறது. ஆண்டு ஒன்றுக்கு 8௦௦௦௦ முதல் 90000 மெட்ரிக் டன் பால் பவுடர் இறக்குமதி செய்யப்படுகிறது.

 

ஆக இலங்கையில் நகரக் குழந்தைகள் எல்லோரும் பவுடர் பாலைக் குடித்துத்தான் வளர்கின்றனர். இன்னும் இருபத்து ஆண்டுகள் கழித்து அங்கு பசு மாடுகளை மியூசியத்தில் தான் பார்க்க முடியும். இப்போது புரிகிறதா, நமது பிரதமர் ஏன் அமெரிக்காவின் பால் பவுடர் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்துயிட மறுத்தார்  என்று. உள்ளூர் உற்பத்திச் செலவு  இறக்குமதியை விட அதிகம்தான். ஆனாலும் நமது விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர் அந்த முடிவு எடுத்தார்.

 

இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும்போது தங்கும் விடுதி வந்துவிட்டது. மீதி அடுத்த பதிவில்.

 




 


வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

 சம்பாதியின் வருகை               

 பதிவு எண் 396

  

நேற்றைய தொடர்ச்சி

 

கடலைத் தாண்டுவதற்குத் தான் தயாராக இருப்பதாகச் அங்கதன் சொல்ல ஜாம்பவான் அரசனாக இருப்பவர்கள் மற்றவர்களுக்குக் கட்டளை இடலாமே தவிர தானே அந்த வேலையைச் செய்யக்கூடாது என்று சொல்கிறான்.

 

அதற்கு அங்கதன் “என்னைப் போகவேண்டாம் என்று தடுக்கின்றீர்கள். மற்றவர்களுக்கோ சக்தியில்லை.. இப்பொழுது என்ன செய்வது? அரசரின் உத்திரவை நிறைவேற்றாமல் திரும்பிப் போகவும் கூடாது. அப்படிப் போனால் தண்டனை கிடைக்கும்.  அதைவிடப் பட்டினி கிடந்தது உயிரை விடுவதே மேல். அப்படி இந்தச் செயலை செய்து முடிப்பவர் நம்மிடையே யார் உள்ளார்?” என்று சொல்லிக் கவலைப்பட்டான். இதைக் கேட்டதும் வானர வீரர்கள் மனத் துயரடைந்தனர்.

 

ஜாம்பவான் நிதானிக்கிறான். மற்றெவரும் இல்லையா? தாண்டிச் சென்று வெற்றி பெற்றுத் திரும்பாது மனந்தளர்ந்து பட்டினி கிடந்தது அங்கேயே உயிர் விடுவதா?

 


=====================

ततः प्रतीतम् प्लवताम् वरिष्ठम्

एकांतम् आश्रित्य सुखोपविष्टम् |

संचोदयामास हरि प्रवीरो

हरिप्रवीरम् हनुमंतम् एव || ४-६५-३५

=====================

 

இத்தகைய அங்கதனின் கவலைக் கேள்விகள் காதில் ஒலிக்கும்போதே  “வீரச் செல்வனே! கவலை வேண்டாம். நாம் எடுத்த கருமம் வெற்றி காணுவதில் ஐயமென்ன? இதை எவன் இனிது முடித்துத்  தருவானோ, அவனையடைந்து இதோ வேண்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, அமைதியாக அமர்ந்திருந்த அனுமனை அணுகினான்.

 

 (“இங்கே ஹனுமன், வெறித்தனமான குரங்களின் கூட்டத்திலிருந்து விலகி, சுகமாக அமர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அனைவரும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது, ஹனுமன் எப்படி வசதியாக அமர முடியும். இது சந்தேகம்? “அவன், வசதியாக அமர்ந்திருந்தாலும், அவனது இதயத்தில் கடலைக் கடப்பது குறித்த எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன” என்று பதிலுக்குச் சொல்லப்படுகிறது. ஒருபுறம், இராமன் தன் தங்க மோதிரத்தை ஹனுமனிடம், இதே குரங்குகளின் முன்னிலையில்தான் கொடுத்தான். மறுபுறம் அங்கதனோ, கடலைக் கடக்கப்போவது யார் என பிற குரங்குகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

 

 பிறகு குரங்குகளால், இந்த சந்தர்ப்பத்தில், நூறு யோஜனை தூரத்தைத் தாண்ட முடியாததாலல்ல; இராவணனிடம் கொண்ட பயத்தாலேயே ஏதோவொரு வகையில் தப்ப முயல்கின்றன என்பதை முழுமையாக அறிகிறான். ஹனுமன், இராவணனுக்கோ, அவனது கைக்கூலி அரக்கர்களுக்கோ அஞ்சவில்லை; ஆனால், அவன் தனது கடமையைக் குறித்துக் கவலைப்படுகிறான். எவரும் தாண்டுவதற்கு முன்வரவில்லையென்றாலும், துணையில்லாமலேயே அவன் இலங்கைக்கு நிச்சயம் செல்ல வேண்டியிருக்கும். இதில் எதுவாக இருந்தாலும், ஹனுமனே போகவேண்டும். இதனால்தான் அந்த “வசதியும்”, “தீர்மானமான முடிவும்”. எனவேதான் அவன் தன் கடமையிலேயே குறியாக இருக்கிறான்.

 

தொடரும்