Monday, July 27, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 168

 

நேற்றைய தொடர்ச்சி

 

இராமன் சொல்கிறான் ‘உன்னைத் தண்டித்தால் எனக்கு பாவம் கிடைக்கும் என்கிறாய்.  தவறான உன்னைத் தண்டித்ததால் எனக்கு பாவம் கிடையாது. உன்னைத் தண்டிக்காமல் விட்டிருந்தால் தான் எனக்கு பாவம்” என்கிறார். மனுஸ்ம்ருதியில் இது சொல்லப்பட்டுள்ளது

 

दण्ड्यान्

दण्डयन्राजा दण्ड्यांश्चैवाप्यदण्डयनू।

अयशो महदाप्नोति नरकं॑ चेव गच्छति।'

 

“அதாவது எந்த அரசன் நிரபராதிகளைத் தண்டித்துக் குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதில்லையோ அந்த அரசன் நரகத்திற்குச் செல்வான்” ஆத்யாத்ம இராமாயணத்திலும்

 

धर्मस्य गोप्ता लोके5स्मिंश्चरामि सशरासन:

अधर्मकारिणं हत्वा सद्धर्म पालयाम्यहम्'

 

வால்மீகியும் சொல்கிறார்

 

न हि लोक विरुद्धस्य लोक वृत्तात् अपेयुषः |

दण्डात् अन्यत्र पश्यामि निग्रहम् हरि यूथप || ४-१८-२१

न च ते मर्षये पापम् क्ष्त्रियो अहम् कुलोद्गतः |

औरसीम् भगिनीम् वा अपि भार्याम् वा अपि अनुजस्य यः || ४-१८-२२

प्रचरेत नरः कामात् तस्य दण्डो वधः स्मृतः |

 

“தர்ம மார்க்கத்திலிருந்து நழுவி நடக்கும் மூர்க்கனைத் தண்டிப்பதற்கு  மரண தண்டனையைத் தவிர வேறு தண்டிக்கும் வழி ஒன்றும் இல்லை. க்ஷத்ரியனாயும் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவனான நான் உன்னுடைய பாவத்தை எப்படிச் சகித்துக் கொள்ளமுடியும்? தன்னுடைய பெண், சகோதரி, தம்பியின் மனைவி இவர்களிடம் காம எண்ணத்துடன் அணுகியவனைக் கொல்லவேண்டும் என்று புனித நூல்கள் சொல்கின்றன.. ஆகையால் ஒரு அரசனின் இராஜ்ஜியத்தில் தர்ம மார்க்கங்களுக்கு உடன்பாடில்லாத கோரமான பாவங்களை ஒருவன் செய்தால். அவனை அந்த அரசன் தண்டிக்கவேண்டும் என்ற நீதி நூல்களின் கோட்பாட்டின்படி அந்த நீதி நூல்களுக்கு கொடுக்கப்படவேண்டிய மரியாதையை உத்தேசித்தும் நான் உன்னைத் தண்டித்தேன்” என்கிறான் இராமன்..

 

தொடரும்


 



அன்று சொன்னது....அர்த்தமுள்ளது....

 

பதிவு ஐந்து.

 

முந்திய பதிவில் நல்லவர்களைக் காக்க அவர்களுக்குத் தீங்கிழைக்கும் கொடியவர்களை அழிப்பது ராஜதர்மம் என்ற நிலைப்பாட்டை குந்தி எடுக்கிறாள் என்று பார்த்தோம். அவள் நிலையில் அவள் சொல்வது சரி காரணம் அவள் ஹஸ்தினாபுரத்து முன்னால் அரசி.

 

ஆனால் இது போன்ற சந்தர்ப்பத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சீதாபிராட்டி ராமனுக்கு உபதேசம் செய்தாள்? இன்று பார்க்கலாம்.

 

வனவாசத்தின் போது ராமன், லக்ஷ்மணன். சீதை சரபங்கர் ஆசிரமத்தை அடைகின்றனர். அவரைத் தரிசனம் செய்து தங்களுக்கும் ஒரு நல்ல ஆசிரமம் வேண்டும் என்று கேட்க, சரபங்கரோ சற்று தொலைவில் சுதீக்ஷனர் என்ற முனிவர் உள்ளார். அவரிடம் சென்றால் தங்களுக்கு எல்லா உதவிகளும் செய்வார் என்று சொல்ல்கிறார்.  அங்கிருந்து கிளம்பும் முன் பல ரிஷிகள் ராமனைச் சந்தித்து “இராமா! நாங்கள் இங்கு பெரிதும் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். கொடிய அரக்கர்களின் தொல்லைகளை எங்களால் தாங்கமுடியவில்லை. அரக்கர்கள் கொன்று குவித்த மகரிஷிகளின் எலும்புகள் இங்கு குவிந்திருப்பதைப் பார்; நாங்கள் உன்னைச் சரணடைகிறோம். எங்களைக்கப்பாற்ற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டனர்.

 

இராமன் அவர்களைப் பார்த்து “என் தந்தையின் சொல்லைக் காப்பாற்ற கானகம் வந்தேன். இங்கு உங்களைப் பார்த்தபிறகு உங்கள் காரியமாகவும் வந்தது போல தோன்றுகிறது” என்று சொல்லி அவர்களுக்கு அபயம் அளித்தார்.

 

பிறகு முனிவர் சுதீக்ஷனரை சந்தித்து அவரை வணங்கி தங்களுக்கும் ஒரு ஆசிரமம் வேண்டும் என்று இராமர் கேட்டார். முனிவரும் அவர்களுக்கு எதிரில் இருந்த இடத்தைக் காட்டி “இங்கு எல்லா வசதிகளும் கிடைக்கும். ஆனால் மிருகங்கள், அரக்கர்களின் தொல்லை அதிகம் உண்டு” என்று சொல்ல, இராமனோ,”அதைப் பற்றி கவலை இல்லை. நான் வில்லை எடுத்து நாணேற்றிவிட்டால் எந்த விலங்கோ, அரக்கர்களோ என் கண்முன் இருக்கமாட்டார்கள். என் கூர்மையான அம்புகள் அவர்களைக் கொன்று குவித்துவிடும்” என்று சொல்லிவிட்டு முனிவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர்.

 

இராமர் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தாள் சீதை. இராமருடைய கருத்தை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவளுடைய முகம் உணர்த்தியது. இனி இராமன் மிருங்கங்களையும் அரக்கர்களையும்  கொல்ல ஆரம்பித்துவிடுவான் என எண்ணினாள்.

 

அங்கிருந்து அவர்கள் அகத்திய முனிவரைச் சந்திக்க கிளம்பினர். சீதை இராமனிடம் பேசத் துவங்கினாள்.

 

சீதை என்ன சொன்னாள்?

 

நாளை வாருங்கள்.


Sunday, July 26, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 பதிவு எண் 167

 

நேற்றைய தொடர்ச்சி

 

अनुज बधू भगिनी सुत नारी। सुनु सठ कन्या सम चारी॥

इन्हहि कुदृष्टि बिलोकइ जोई। ताहि बधें कछु पाप होई॥4

 

இராமன் கூறினான் “ஏ  மூடனே! கேள். தம்பியின் மனைவி, சகோதரி, புதல்வனின் மனைவி மற்றும் மகள் ஆகிய நால்வரும் ஒன்றே. இவர்களைத் தவறானக் கண்ணோட்டத்தில் எவன் பார்க்கிறானோ அவனைக் கொல்வது பாவம் அல்ல”. தம்பியே மகனுக்குச் சமம்” என்று சொல்கிறார் வால்மீகி. 

 

यवीयान् आत्मनः पुत्रः शिष्यः च अपि गुणोदितः |

पुत्रवत् ते त्रयः चिंत्या धर्मः चैव अत्र कारणम् || ४-१८-१४

 

 

துளசிதாசர் முதலில் अनुज बधू  தம்பியின் மனைவி என்று ஆரம்பிக்கிறார். காரணம் இங்கு வாலி தனது தம்பி சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததுவிட்டான். வாலியின் முதல் தவறு இது என்று சொல்கிறார்.

 

வாலிக்கு ஏன் தண்டனை கிடைத்தது? துளசிதாசர் कुदृष्टि बिलोकइ தனது தம்பியின் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததால் மட்டுமல்ல அவளை உனது மனைவியாக்கி கொண்டாய்  அதனால் தண்டனை என்கிறார்

 

இதையே தான் வால்மீகி இராமயனாத்திலும் சொல்லப்படுகிறது

 

तत् एतत् कारणम् पश्य यत् अर्थम् त्वम् मया हतः |

भ्रातुर् वर्तसि भार्यायाम् त्यक्त्वा धर्मम् सनातनम् || ४-१८-१८

 

எதற்காக நான் உன்னைக் கொன்றேனோ அந்தக் காரணத்தைச் சொல்கிறேன். கேட்பாயாக. நீ சனாதனமான தர்மத்தைக் கைவிட்டு உனது தம்பியான சுக்ரீவனின் மனைவியை அபகரித்து அனுபவித்துக் கொண்டிருக்கிறாய், இந்த மஹாபாவமே நான் உன்னைத் தண்டித்ததற்கு காரணம்”

 

 

தொடரும்


 


அன்று சொன்னது...அர்த்தமுள்ளது....

பதிவு நான்கு

 

ஏகசக்ர நகரில் தாங்கள் தங்கி இருக்கும் பிராமணனுக்கு உதவுவதற்காக பகன் என்ற அரக்கனிடம் தனது மகன் பீமன் செல்வான் என்று குந்தி சொன்னதை ஏற்க மறுத்த பிராமணனிடம் குந்தி, "ஓ பிராமணரே! நானும் ஒரு பிராமணன் எப்போதும் காக்கப்பட வேண்டும் என்று உறுதியான கருத்தையே வைத்திருக்கிறேன்.  பெரும் உடல் கொண்ட பல ராட்சசர்கள் எனது வீர மகனிடம் மோதுவதை நான் கண்டிருக்கிறேன். இறுதியில் அவர்கள் எனது மகன் கையால் கொல்லப்பட்டுள்ளனர் இந்த ராட்சசனால் எனது மகனைக் கொல்ல முடியாது. ஏனென்றால் எனது மகன் பெரும் சக்தியும், ஆற்றலும் கொண்டவனாவான். அவனுக்கு மந்திரங்களிலும் நிபுணத்துவம் உண்டு. அதனால், அவன் தன்னைக் காத்துக் கொள்வான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்” என்று சொல்கிறாள்.


பிராமணனும் மகிழ்ச்சியுடன் அதற்கு ஒத்துக்கொண்டான். மாலை தர்மர் தனது தம்பிகளுடன் திரும்பி வந்தபோது பீமனின் முகத்தைக் கண்டு அவன்  ஏதோ செய்யப்போகிறான் என்பதைப்  புரிந்துகொண்டு தாயாரிடம் கேட்கிறான். குந்தி “பீமன் ஒரு பிராமணனுக்கு நன்மை செய்து, {ராட்சசனிடம் இருந்து} இந்த நகரத்தை விடுவிக்கும் செயற்கரிய காரியத்தைச் செய்யப் போகிறான்" என்றாள்.

 

அதற்கு யுதிஷ்டிரன் “அன்னையே , மற்றவர்களுக்காக உனது சொந்த மகனையே தியாகம் செய்ய ஏன் விரும்புகிறாய்?, பீமனின் கர வலிமையை நம்பியே நாம் இரவில் மகிழ்ச்சியுடன் உறங்குகிறோம். திருதராஷ்டிரனின் தீய மகன்களிடம் இருந்து நாட்டை மீட்கும் காரியமும் அவனை நம்பியே இருக்கிறது. எந்தப் பீமனின் பேராற்றலை நினைத்து துரியோதனனும் சகுனியும் விழிதட்டாமல் இரவு முழுவதும் உறங்குவதில்லையோ, எந்தப் பீமன் நம்மை அரக்கு மாளிகை அபாயத்திலிருந்து மீட்டானோ, அந்தப் பீமனின் ஆற்றலை நம்பியே, நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  நீ அவனைக் கைவிடுவதாக முடிவு செய்துவிட்டாயா? நீ உன் சுயநினைவை இழந்து விட்டாயா?” என்று வருத்தப்படுகிறான்.

 

குந்தி, "ஓ யுதிஷ்டிரா, பீமனைக் குறித்து நீ வருத்தப்படாதே. எனது புத்தியின் பலவீனத்தால் நான் இந்த முடிவை எடுக்கவில்லை. திருதராஷ்டிரன் மகன்களுக்குத் தெரியாமல் நாம் இந்த பிராமணரின் இல்லத்தில் கவலையில்லாமல் வாழ்ந்து வருகிறோம். அவரும் நம்மைப் பெரிதும் மதிக்கிறார். அதற்குக் கைம்மாறாக இதைச் செய்யத் தீர்மானித்தேன்.

 

நான் முட்டாள்தனமாகவோ, அறியாமையாலோ அல்லது ஏதேனும் லாப நோக்கத்தோடோ இப்படிச் செயல்படவில்லை. அறச்செயல் செய்வதற்காகவே இந்த முடிவை வலிந்து எடுத்தேன். இச்செயலால் இரு காரியங்கள் சாதிக்கப்படும்; ஒன்று பிராமணனுக்கான செய்ந்நன்றியைச் செய்வது, மற்றொன்று உயர்ந்த அறத்தகுதியை அடைவது

 

தனது தாயின் வார்த்தைகளைக் கேட்து சமாதனமடைந்த  யுதிஷ்டிரன், "அன்னையே , துயருற்ற பிராமணன் மீது இரக்கப்பட்டு, நீ வலிந்து செய்த காரியம் நிச்சயமாக சிறப்பானதேயாகும்” என்று சொல்கிறான்.

 

ஆக குந்தி இந்த விஷயத்தில் நல்லவர்களை காக்க தீயவர்களை அழிப்பது ராஜ தர்மம் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறாள். அவளும் ஹஸ்தினாபுரத்து முன்னாள் அரசிதானே,

 

இதே போன்று விஷயத்தில் சீதை என்ன நிலைப்பாட்டை எடுக்கிறாள் என்று நாளை பார்ப்போம்.

 


Saturday, July 25, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 166

 

நேற்றைய தொடர்ச்சி.

 

சென்ற பதிவிலேயே சொல்லியிருந்தேன். வால்மீகி இராமாயணத்தில் வாலியின் கேள்விகளுக்கு இராமன் மூலம் வால்மீகி விரிவான பதில் அளித்திருந்தார். அதன் மூலம்  வாலியையை அழித்ததுடன் அவனது அகங்காரத்தையும் அழித்தார். முதலில் வால்மீகியிலிருந்து ஆரம்பிப்போம்

 

வாலிக்கு இராமனின் பதில்

 

தன்னை அம்பு எய்து சாய்த்த இராமனிடம் வாலி பல கேள்விகள் கேட்கிறான். அந்தக் கேள்விகளுக்கு இராமன் பதிலளிக்க முற்படுகிறான்.

 

இங்கு ஒரு கேள்வி எழுகிறது. இராமன் ஏன் வாலிக்குப் பதிலளிக்க வேண்டும்? தனது நண்பனான சுக்ரீவனை நாட்டைவிட்டு அடித்துத் துரத்தியது மட்டுமல்லாமல் அவன் மனைவியான ரூமையை  வாலி அபகரித்துக் கொண்டான் என்ற ஒரு விஷயமே இராமன் வாலியைக் கொன்ற காரணமாகும்.  அப்படிக் கொல்வதற்கு இராமனுக்கு என்ன உரிமை உளது என்பதை வாலி மட்டுமல்ல நாமும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இராமன் சொல்வது போல வால்மீகி நமக்குச் சொல்கிறார்.

 

புண்பட்டு பூமியில் விழுந்து ஒளியிழந்த சூரியன் போலவும், நீரைப் பொழிந்த மேகம் போலவும் நீறு பூத்த நெருப்பைப் போலவும் தோன்றிய வானரங்களின் தலைவனுமாகிய வாலி கடிந்து கேட்ட கேள்விகளுக்கு இராமன் பதில் கூறலானான்.

 

तम् निष्प्रभम् इव आदित्यम् मुक्त तोयम् इव अंबुदम् |

उक्त वाक्यम् हरि श्रेष्ठम् उपशांतम् इव अनलम् || ४-१८-२

धर्म अर्थ गुण संपन्नम् हरि ईश्वरम् अनुत्तमम् |

अधिक्षिप्तः तदा रामः पश्चात् वालिनम् अब्रवीत् || ४-१८-३

 

அறம், பொருள், இன்பம் எனும் வைதீகமான புருஷார்த்தங்களையும் உலக நியாயத்தையும் அறியாது குழந்தை புத்தியினால் ஏன் என்னை இழுக்கிறாய்.? நீ ஒரு விவேகியாகத் தோன்றவில்லை. ஏனெனில் வைதீகமான அறம், பொருல், இன்பம் என்னும் பலன்களையும் அறியவில்லை. உலக நீதியையும் அறியவில்லை

 

अपृष्ट्वा बुद्धि संपन्नान् वृद्धान् आचार्य संमतान् |

सौम्य वानर चापल्यात् त्वम् माम् वक्तुम् इह इच्छसि || ४-१८-५

 

விவரமறிந்த பெரியோர்களிடம் கேட்டறிந்து கற்றால்தான் தெளிவு பெற முடியும். உனது ஆசிரியன் யார்? அவ்வாறில்லாமல் நீயே உன்னைச் சிறந்த உயர் அறிவாளி என்று நினைத்துக் கொள்வது குரங்கு புத்தியின் சுவாபமாகும்.

 

தொடரும்


 


அன்று சொன்னது.....அர்த்தமுள்ளது......


பதிவு மூன்று.

 

ஏகசக்ர நகரத்தில் அந்தணர்களாக மாறுவேடத்தில், ஒரு அந்தணர் வீட்டில் தங்கியிருந்தனர்  பாண்டவர்களும் அவர்களின் தாயார் குந்தியும்.  ஒரு நாள் பீமனும் குந்தியும் மட்டும் இருந்தபோது,வீட்டினுள் அழுகுரல் கேட்டது. அதற்கான காரணத்தை குந்தி கேட்க, முதலில் சொல்ல மறுத்த அந்த பிராமணன், பிறகு துயரத்துக்கான காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

 

‘தாயே இங்கு அருகில் யமுனை நதிக்கருகே, பகன் என்று ஒரு ராட்சசன் வசித்துவருகிறான். மனிதர்களைக் கொன்று உண்பவன். தினமும்  ஊருக்குள் வந்து எல்லோரையும் அடித்து கொன்று தின்று கொண்டிருந்தான். கடைசியில் ஒரு உடன்படிக்கைக்கு வந்தான். அதன்படி, தினம் இரு எருமைகள் பூட்டிய வண்டியில் சமைத்த உணவுடன் அதை கொண்டு செல்ல ஒருவனுடன் அனுப்பவேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் பல ஆண்டுகளுக்கொருமுறை மீண்டும் இந்த முறை வரும். இன்று முதன்முதலாக எனது வீட்டுமுறை.  ஆதலால் யார் சமைத்த உணவுடன் அங்கு செல்வது என்ற கவலை. செல்லாவிட்டால் பகன் மிகுந்த கோபப்படுவான். வசதி உள்ளவர்கள் பணம் கொடுத்து எடுத்து செல்ல ஒருவனை விலைக்கு வாங்கிவிடுவர். நான் ஏழை. மிகச்சிறு குழந்தைகள். இவர்களை விட்டு என்னால் செல்லவும் முடியாது.  என்ன செய்வது என்று தெரியவில்லை” என்றான்.

 

குந்தியோ ‘கவலை படாதீர்கள். எனக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒருவனான பீமன் வண்டியுடன் செல்வான்” என்றதும். அந்த பிராமணன் "என் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒருபோதும் நான் இந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன். எனது வாழ்வுக்காக, ஒரு பிராமணனின் உயிரையோ அல்லது ஒரு விருந்தாளியின் உயிரையோ நான் துறக்க மாட்டேன். ஒரு பிராமணனின் நன்மைக்காக, ஒருவன் தன்னையோ அல்லது தனது வாரிசையோ தியாகம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நான் அந்த அருமையான அறிவுரையை மதித்து நடக்க விரும்புகிறேன். ஒரு பிராமணனின் மரணமா? அல்லது எனது மரணமா? என்று வரும்போது நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன்.

 

“பிராமணனைக் கொல்வது என்பது பாவத்திலேயே பெரும் பாவமாகும், அதற்கு விமோசனமே இல்லை. ஒரு பிராமணனின் உயிர்த்தியாகத்தைவிட, ஒருவன் தன்னைத் தியாகம் செய்து கொள்வதே சிறந்தது என்று நான் நினைக்கிறேன். தாயே, நான் என்னைத் தியாகம் செய்வதால், தற்கொலை செய்யும் குற்றவாளி ஆக மாட்டேன். இன்னொருவன் எனது உயிரை எடுக்கும்போது, எந்தப் பாவமும் என்னைப் பற்ற முடியாது. ஆனால் தெரிந்தே நான் ஒரு பிராமணனை மரணத்திற்கு அனுப்பினேன் என்றால், அந்தக் கொடிய பாவகரச் செயலில் இருந்து நான் எப்போதும் தப்ப முடியாது. தனது வீடு தேடி வந்தவரையோ, தன்னிடம் தஞ்சமடைந்தவர்களையோ கைவிடுவதும், தன்னிடம் மரணம் வேண்டுபவனைக் கொல்வதும் கொடூரமான பாவகரச் செயல்களாகும் என்று கல்விமான்கள் கூறியிருக்கிறார்கள்.ஆதலால் நான் இதற்க்குச் சம்மதிக்கமாட்டேன்”

 

பிறகு என்ன நடந்தது.....

 

ஒரு நாள் பொறுத்திருங்கள்.