Sunday, December 14, 2025

 


அதாகப்பட்டது

 

 


அரிசியினால் ஒரு நாடு திவாலான கதை ?

 

“என்னங்காணும் வாய் இருக்குங்கிறதுக்காக  நீர் பாட்டு கண்டதையும் சொல்லிடாதேயும் ...செத்த வாய வெச்சுண்டு சும்மா இரும் ஓய் ...................”

 

 இது எங்க பக்க டயலாக்..... எதையும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல்  ஒரு அரசன்  வாயால் வாக்குறுதி கொடுத்து எப்படிச் சீரழிந்தான் என்பதற்கு நான் படித்த கதை உதாரணம். ஒரு வேளை உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

 

ஒரு அரசன்,  ஒரு புலவர் தன்னை பாராட்டிக் கவிதை பாடினார் என்பதற்காக புலவரைப் பார்த்து உங்களுக்கு என்ன பரிசு வேணும் கேளுங்கள் என்றான்.....

 

புலவர்” அரசே எனக்கு அடுத்த 64 நாட்களுக்கு அரிசி கொடுத்தால் போதம்”

 

“நான் தங்கமே தருகிறேன் எனும்போது நீர் விலை மலிவான அரிசி மட்டும் கேட்கிறீர் “

 

“ஆமாம் எனக்கு அது போதும். இன்று ஒரு அரிசி . நாளை இரண்டு. அடுத்த நாள் நாலு நாலாவது நாள் பதினாறு.இப்படி நேற்று எவ்வளவு அரிசி வாங்கினேனோ அதைப்போல இரண்டு பங்கு அரிசி வேண்டும் அடுத்த அறுபத்து நான்கு நாட்களுக்கு”

 

“புலவரே என்ன இது சிறுபிள்ளைத்தனமா இருக்கு இன்று ஒரு அரிசியாம் அறுபத்து நாங்களுக்கு வேணுமாம் ஓகே தந்தோம் என்றான்.

 

அமைச்சர் எச்சரித்தும் மன்னன் கேட்கவில்லை.

 

புலவர் வந்து சொன்னபடி அரிசி வாங்க ஆரம்பித்தார்

 

நாள் 0: ஒரு அரிசி

நாள் 1: இரண்டு அரிசிகள்

நாள் 2: நாலு அரிசிகள்

நாள் 3; எட்டு அரிசிகள்

நாள் 4:  பதினாறு அரிசிகள்

நாள் 10: 1024  அரிசிகள்

நாள் 32:  4,294,967,296 அரிசிகள்

நாள் 64:  18,446,744,073,709,551,616 அரிசிகள்

 

ஒரு அரிசி 0.03 கிராம்னு வைத்துக்கொண்டாலும் மொத்த அரிசியின் எடை சுமாராக 553 402 322 211  டன் வருகிறது. உலகின் மொத்த அரிசி உற்பத்தியே எழுநூறு மில்லியன் டன் தான்.

 

அரசன் புலவரிடம் மன்னிப்புக் கேட்டான். புலவர் சொன்னார் ‘வாக்குறுதிகள் கொடுக்கப்படும்போது எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டு கொடுங்கள். சில சமயம் சிலவிஷயங்கள் எளிதாக தெரியும் .உண்மையில் எளிதல்ல”

 

மன்னன் புரிந்து கொண்டான்.

 

இந்தக் கதையைப் படித்துவிட்டு நீங்கள் வேறு எதாவது கற்பனை செய்தால் கம்பனி பொறுப்பல்ல

 


 




அதாகப்பட்டது . . . . .

பரிச்சைய்

அறிமுகம்

ஹிந்தியில் 1972 ல் வெளிவந்த பரிச்சய் என்ற இந்திப் படத்தில் உள்ள musaafir hoon yaaro என்ற இனிய பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதே ஆண்டு தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு வங்கியில் வேலைக்குச் சேர கிளம்பினேன். அன்று தூத்துக்குடி ஒரு glorified village. Optimism, positive thinking, lateral thinking இவைகள் தூத்துக்குடியின் கதவுகளை அப்போது தட்டவில்லை. என் தந்தை கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர். பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சம்பளம் என்று ஒன்றுமில்லை, நான் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். Rs. 150 மாத சம்பளம். குடும்பத்தில் ஏழு உறுப்பினர்கள், திடீரென்று நான் வேலைக்கு கிளம்பிவிட்டால் குடும்பம் சிரமப் படுமோ என்ற பயம், நம்பிக்கையின்மை இத்துடன் கிளம்பினேன்.

வேலையில் சேர்ந்து நான் முதலில் பார்த்த ஹிந்தி படம் PARICHAY. ஒரு பணக்கார முதியவர் தனது ஐந்து பேரக்குழந்தைகளுடன் ஒரு பங்களாவில் வசித்து வருகிறார். யாருக்கும் கீழ்ப்படியாத அந்த குழந்தைகளை நல்வழிபடுத்திப் பாடம் கற்றுக் கொடுக்க ஒரு ஆசிரியரைத் தேடுகிறார். அவ்வாறு அவரால் தேர்வு செய்யப்பட்டவர் தனது கிராமத்திலிருந்து கிளம்பி வரும் சமயம் பாடும் பாட்டுதான் musaafir hoon yaaro. குல்சார், ஆர். டி பரமன், கிஷோர் குமார் போன்ற மேதைகள் சேர்ந்து உருவாக்கின பாடல். அந்தக் கால கட்டத்திலேயே மோடிவேஷன் தந்த பாடல்.

=============


मुसाफ़िर हूँ यारों

ना घर है ना ठिकाना

मुझे चलते जाना है

बस चलते जाना

एक राह रुक गई तो और जुड़ गई

मैं मुड़ा तो साथ-साथ राह मुड़ गई

हवा के परों पे मेरा आशियाना

मुसाफ़िर हूँ यारों...

दिन ने हाथ थाम कर इधर बिठा लिया

रात ने इशारे से उधर बुला लिया

सुबह से शाम का मेरा दोस्ताना

मुसाफ़िर हूँ यारों...

=================

அதன் தமிழ் வடிவம்


நான் பயணி நண்பரே —

இல்லம் இல்லை,

இடம் இல்லை,

நெடுந்தெரு தான் என் திசை,

நடைதான் என் வாகனம் .

தடை வந்தால் வழி பிறக்கும்,

திரும்பினால் பாதை திரும்பும்,

காற்றின் சிறகில் வீடு,

காலத்தின் ஓசை தோழன்.

பகல் கையில் பிடித்து நிறுத்தும்,

இரவு கண்ணால் அழைத்து செல்லும்,

அந்தி, விடியல் — என் உறவு,

அலைந்து செல்லும் என் உயிர்.

==========

அந்தப் பாடலைத் திரையில் பார்த்த போது எனக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. என்ன கருத்தாழமுள்ள பாடல்? இந்தப் பாடலை இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் மனதில் தோன்றிய ஒரே கேள்வி. திரைப்படமாக இருந்தாலும் அந்த நாயகனுக்கிருந்த நம்பிக்கை அப்போது என்னிடம் ஏன் இல்லை?

 



வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

 சம்பாதியின் வருகை

 பதிவு எண் 386

 

நேற்றைய தொடர்ச்சி

  

பத்துமுக இராவணனும் அவனது பரம்பரையும்

 

பிரம்மாவின் சிந்தனையில் பிறந்தவர்களில் ஒருவர் புலஸ்தியர், அவரது மனைவி ஹவிர்புக் மூலம் அகஸ்தியர் மற்றும் விஸ்வஸ்ரர்கள் என்ற இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தார். இந்த விஷவரஸுக்கு நான்கு மனைவிகள். அவரது முதல் மனைவி இலபிலா, அவரிடமிருந்து குபேரனை மகனாகப் பெற்றெடுத்தார். இரண்டாவது மனைவி சுமாலியின் மகள் கைகாசி. பெண் கைகாசி ராவணன், கும்பகர்ணன் மற்றும் விபீஷணன் ஆகிய மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார். விஷ்ரவஸின் மூன்றாவது மனைவி கைகாசியின் சகோதரி புஷ்போத்கதா, இந்த புஷ்போத்கதா மஹோதர, பார்ஷ்வதா மற்றும் பிறரைப் பெற்றெடுத்தார், அவர்களை நாம் பெரும் போர் காண்டத்தில் சந்திக்கிறோம். விஷ்ரவஸின் நான்காவது மனைவி கைகாசியின் மற்றொரு சகோதரி, ராகா, அவர் சூர்பனகையைப் பெற்றெடுத்தார்.


இராவணனின் மனைவியும் இலங்கையின் பேரரசியுமான மண்டோதரி திதியின் மகனான மாயாவின் மகள் மண்டோதரியின்  குணாதிசயம் சீதை, சாவித்ரி, அனசூயா, அஹல்யா, திரௌபதி மற்றும் பிற சிறந்த பெண்களுடன் சமமாகப் பொருந்துகிறது. அவளுடைய பெயருக்கு சில முக்கியத்துவம் உண்டு.   மண்டோதரி ஒரு இந்திரஜித்தைப் பெற்றெடுக்கிறாள், ராவணனின் மகன், ஒரு அசாதாரண போராளி மற்றும் அனைத்தையும் வெல்லும் போர்வீரன். மண்டோதரி இன்னும் ஒன்று அல்லது இரண்டு இந்திரஜித்களைப் பெற்றெடுத்தால், ஒரு டஜன் ராமர்கள் அவதாரம் எடுக்க வேண்டும். இந்திரஜித்தின் மனைவி சுலோசனா, சீதை போன்ற மற்ற கணவன் பக்தியுள்ள பெண்களுடன் சமமாகக் கருதப்படும் உயர் பிரபுத்துவம் மற்றும் கற்பு கொண்ட மற்றொரு பெண்மணி)

 

சம்பாதி மேலும் தொடர்கிறான் “நான் ‘விஜதா’வின் பரம்பரையிலிருந்து வந்தவன். அதனால் என் கண்களில் கூர்மை அதிகம். என்னுடைய பார்வையினால் நூறு யோஜனைகளுக்கு அப்பால் உள்ளவைகளை என்னால் காண முடியும். இங்கிருந்து இராவணனின் தங்கமயமான நகரத்தை என்னால் பார்க்க முடிகிறது”

 

“அன்புள்ள வானரங்களே! இலங்கையில் இராவணன் அரண்மனையின் அந்தப்புரத்தில் காவலில் வைக்கப்பட்டு மனம் வருந்தி வாடி வதங்கி இருக்கிறாள் வைதேகி. நான்கு பக்கங்களிலும் கோரமான அரக்கிகள் அவளைக் காவல் செய்து வருகின்றனர். நீங்கள் நேரே தெற்கில் சென்று நூறு யோசனை கடந்து, இந்தத் தீவைச் சேரவேண்டும். நீஙகள் இக்கடலைத் தாண்டிச் செல்வீர்கள் என்று உறுதி கூறுகிறேன். நீங்கள் அந்த அன்னையைக் கண்டு வெற்றி பெற்றுத் திரும்புவதை என் ஞானக்கண்ணால் காண்கிறேன்.

 

“நீங்கள் தற்பொழுது எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். என்னைக் கடற்கரை ஓரம் அழைத்துச் சென்றால் அங்கு காலம் சென்ற எனது சகோதரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவேன்” என்றது.


 

தொடரும்

 

 



பழங்கணக்கு 


கணக்கு பழையது: பதிவு புதியது

 

 

ஒருவர் படுக்கலாம்,

 இருவர் இருக்கலாம்,

 மூவர் நிற்கலாம்

 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு: பணி நிமித்தம் எனக்குத் திருச்சியிலிருந்து எர்ணாகுளத்திற்கு அவசரமாகச் செல்ல வேண்டியதிருந்தது. டிசம்பர் கடைசி வாரம். கிறிஸ்தமஸ் பண்டிகை பள்ளி கல்லூரிகள் விடுமுறை. ரயில், பேருந்து எதிலும் டிக்கட் கிடைக்கவில்லை.திருச்சியிலிருந்து இரவு ஒரு ரயில் புறப்படும். அங்கிருந்த ஒருவர் முன்னதாகவே சென்றால் பதிவு செய்யப்படாத கோச்சில் இடம் பிடித்துவிடலாம் என்று சொல்ல நானும் விரைந்தேன். நடைமேடையில் இரயிலைக் கண்டவுடன் மகிழ்ச்சி. ஆனால் முன்பதிவில்லாத கோச் அருகில் சென்றவுடன் அதிர்ச்சி. உள்ளே கூட்டம் அலை மோதியது. நானும் அவர்களுடன் ஐக்கியமானேன். மேலும் மேலும் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. மூச்சுத் திணறியது. விழி பிதுங்கியது. நின்று கொண்டே முழுப் பயணமும் கழிந்தது.

 

சமீபத்தில் ஆழ்வார்கள் பற்றி படித்துக் கொண்டிருந்தபோது "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் மூவர் நிற்கலாம்" என்ற சொற்றொடரைப் பார்த்ததும் எனக்கு அந்தப் பயணம் நினைவில் வந்தது.

 

 ஆழ்வார்கள் என்றால் வேதத்தாலும் அளவிட்டு அறிய இயலாத பெருமாளின் எல்லா குணங்களையும் அவனருளாலே அறிந்து அனுபவிக்கும் ஞானம் பெற்றவர்கள் என்று கூறலாம். மொத்தம் பன்னிரெண்டு ஆழ்வார்கள். அதில் முதாலாழ்வார்கள் மூவர். பொய்கை ஆழ்வார்: பூதத்தாழ்வார்; பேயாழ்வார்.  திருக்கோவிலூரில் விண்ணகரத்தில் பெருமாளைத் தரிசிக்கப் பொய்கை ஆழ்வார் வந்தார், இரவு நேரம் கொட்டும் மழை, கடுங்குளிர் அங்கிருந்த யாருமில்லாத குடிசைக்குள் சென்று கதவைத் தாழிட்டுப்  படுத்துக்கொண்டார்.. யாரோ கதவைதட்டி உள்ளே மழைக்கொதுங்க இடம் கேட்டார்.  ஒருவர் படுக்கலாம்,” என்று பொய்கை பதில்சொன்னார். ஒருவர் படுக்கலாம் எனில் இருவர் இருக்கலாம்,” என்று மீண்டும் வேண்டுகோள் வந்தது. கதவைத் திறந்து அவரை பொய்கையார் அனுமதிக்க, இருவரும் இருளில் அமர்ந்தனர். வந்தவர் பூதத்தாழ்வார் என்பது பொய்கையாருக்கோ இருந்தவர் பொய்கையார் என்று பூதத்தாருக்கோ தெரியாது. அப்போழுது மூன்றாம் ஒருவர் கதவை தட்டி இடமுள்ளதா? என்று வினவினார். இருவர் இருக்கலாம்,” என்று இவர்கள் பதில் சொல்ல, “இருவர் இருக்கலாம் எனில் மூவர் நிற்கலாம்,” என்று அவர் கேட்க, கதவைத் திறந்து உள்ளே அழைத்தனர். இந்த மூன்றாம் மனிதர் பேயாழ்வார். மூன்று ஆழ்வாரும் மற்றொருவரை யாரென்று தெரியாமல் இருளில் நிற்க திடீரென்று, கதவு திறக்காமலே யாரோ உள்ளே வந்ததுபோலும் மூவர் நிற்கும்மிடல் நால்வர் திணிந்து திகைப்பது போல் ஒரு நெரிசலை உணர்ந்தனர்.

 

பொய்கையாழ்வார் தொடங்குகின்றார் அந்தாதியை.

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய

சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று

 

அதைத் தொடர்ந்து பூதத்தாழ்வார் பாடுகின்றார்

 

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி

ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

 

இவர்கள் ஏற்றிய விளக்கொளியில் பெருமானைக் கண்டார் பேயாழ்வார்.

 

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழு

மருக்கனணி நிறமுங் கண்டேன் செருக்கி ளரும்

பொன்னாழி கண்டேன் புரி சங்கங் கைக் கண்டேன்

என்னாழி வண்ணன் பாலின்று” 

என்று பேயாழ்வார் பாடினார்.

 

மூவரும் திருமாலைக் கண்டனர். மூவரும் இறைஅருள் பெற்றவர்கள் ,உடனே பாடல் பிறந்தது.

 

இட நெருக்கடியால் விழிபிதுங்க, மூச்சுத் திணற நின்ற நான் என்ன பாட்டு பாடியிருப்பேன்?

 

மற்றொரு பழங்கணக்குடன் மீண்டும் சந்திக்கிறேன்...............


 




அதாகப்பட்டது................

  

ஷோலே  


 

தர்மேந்திரா, அமிதாப் பச்சன் நடித்த ஷோலே திரைப்படம் 1975 வருடம் சுதந்திரத் தினத்தன்று வெளி வந்து ஒரு கலக்கு கலக்கியது மும்பையில் ஒரு திரை அரங்கில் ஐந்து ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது.   ஐம்பது ஆண்டுகள் கழிந்து விட்டன. அந்தப் படத்தில் க்ளைமாக்ஸில் டாக்குர், கப்பர் சிங்கை ஆணிகள் பதித்த பூட்ஸ் காலால் மிதித்து கொல்லப்போகும் சமயம் போலீஸ் வந்து தடுத்து கப்பரை கைது செய்துவிடுவர்.

 

ஐம்பது ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில். அந்தப் படம் புதிய தொழில் நுட்பத்தில்  50 years of Sholay The final uncut என்று மறுபடியும் வெளிவருகிறது என்ற செய்தி படித்தேன். இதில் முந்தைய ஷோலே படத்தின் ஒரிஜினல் கிளைமாக்ஸ்ம் இடம்பெறுமாம். அது என்ன ஒரிஜினல் கிளைமாக்ஸ்?

 

பழைய படத்தின் படி டாக்குர் கப்பரை ஆணிகள் பதித்த பூட்ஸ் காலால் மிதித்தே கொன்றுவிடுவாராம். ஆனால் அன்றைய தணிக்கைக் குழு யாரும் சட்டத்தைத் தனது கையில் எடுத்துக் கொள்வதாகக் காட்டப்பட்டதை அனுமதிக்க தணிக்கை விதிகளில் இடமில்லை  என்று சொல்லிவிட மீண்டும் அக்காட்சி படமாக்கப்பட்டு கிளைமாக்ஸில் போலீஸ் வந்து கொள்ளையனைக் கைது செய்வது போல காட்சி எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதாம்.

 

இப்பொது வெளிவரும் படத்தில் பழைய கிளைமாக்ஸ் காட்டப் போகிறார்களாம். அதற்கு  படத் தரப்பு சொல்லும் காரணம்  இன்றைய படங்களில் காவல் அதிகாரிகளே குற்றவாளிகளைக்  கொல்வது போல நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. அது மட்டும் அல்ல நிறைய த்ரில்லர் படங்களில்  கதையில் கதாநாயகனோ, நாயகியோ சம்பத்தப்பட்ட யாரேனும்  நியாயத்திற்காக வில்லனைக் கொன்றால் காவல் துறை அதைக் கண்டு கொள்ளாதது  போலக் காட்சிகள் வருகின்றன. தனிக்கைக்குழுவும் அதை அனுமதிக்கின்றது.

 

ஆக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள யாருக்கும் அனுமதி இல்லை என்று தணிக்கை விதிகளைக் காட்டித் தணிக்கைக் குழு படங்களிக்கு அனுமதி மறுத்தது.   இன்றோ நியாயத்துக்காக கொலை செய்பவர்களை காவல் துறை கண்டுகொள்ளாமல் இருக்கும் திரைப்படங்களை அனுமதிக்கிறது? கண்டிப்பாக தணிக்கை விதிகளில் இத்தகைய மாறுதல் அனுமதிக்கபட்டிருக்க வாய்ப்பு இல்லை. இங்கு யார் புத்திசாலி?

 

Saturday, December 13, 2025

 



 


வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

 சம்பாதியின் வருகை

 பதிவு எண் 385

 

நேற்றைய தொடர்ச்சி......................

 

ஜடாயுவின் சகோதரன் சம்பாதி தனது வரலாற்றைக் கூறுகிறது.

 

“வெகு காலத்திற்கு முன்பு இந்திரன் விருத்தாசூரனைக் கொன்ற பிறகு நானும் என் சகோதரனாகிய ஜடாயுவும் எங்கள் வல்லமையைச் சோதிக்க இந்திரனைப் போருக்கு அழைத்தோம், ஆகாயத்தில் உயர பறந்த நாங்கள் தேவலோகம் போகும் வழியில் இந்திரனை ஜெயித்தோம். இதனால் செருக்கு அடைந்த நாங்கள் இன்னும் உயரே பறக்க எண்ணினோம். ஆனால் சூர்ய மண்டலத்தை அடைந்தவுடன் வெப்பத்தால் ஜடாயு தன்நினைவை இழந்தான், அவனைக் காப்பாற்ற நான் என் இறகுகளால் அவனை மறைத்தேன். ஆனால் அதன் விளைவாக எனது இறகுகள் எரிந்து விட்டன, நான் விந்திய மலையில் வந்து விழுந்தேன்”.


உடனே அங்கதன் “உண்மையாக நீ ஜடாயுவின் மூத்த சகோதரனாக இருந்து எங்கள் நலனை நாடுவதாக இருந்தால்  இராக்ஷஸர்களின் தலைவன்  இராவணனின் இருப்பிடத்தைக் கூறவேண்டும்” என்று இடைமறித்துக் கேட்டான்.


 ======================================

निर्दग्ध पक्षो गृध्रो अहम् गत वीर्यः प्लवम् गमाः |

वाङ् मात्रेण तु रामस्य करिष्ये साह्यम् उत्तमम् || ४-५८-१२

========================================

 

சம்பாதி “நான் மிகவும் வயோதிகனாகவும் என் இறகுகள் எரிந்துவிட்டதாலும்  என்னால் உடல் அளவில் இராமருக்குத் தொண்டு செய்ய இயலாமல் இருக்கிறேன். அதனால் நான் என் சொல் திறமையினால் உதவி புரிகிறேன். ஒரு யுவதியை இராவணன் கடத்திச் சென்றதாகக் கேள்விப்பட்டேன். அவள் இராமா!இராமா! என்று கூக்குரல் எழுப்பினாள் என்றும் தனது சில ஆபரணங்களை நிலத்தில் போட்டதாகவும் கேள்விப்பட்டேன். அந்தப் பெண் தான் சீதையாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.  இந்த இராவணன்  அரக்கர்களுக்கு அரசன்.

======================================

पुत्रो विश्रवसः साक्षात् भ्राता वैश्रवणस्य च |

अध्यास्ते नगरीम् लंकाम् रावणो नाम राक्षसः || ४-५८-१९

========================================

அவன் விஸ்ரவசுவின் புதல்வன். குபேரனின் சகோதரன்.அவனுடைய ராஜ்ஜியம் இலங்கை ஒரு தீவு. தென் கடற்கரையிலிருந்து நூறு யோசனை தூரத்தில் உள்ளது.. இங்கு ஆரண்ய காண்டம் அறுபத்து எட்டாவது சர்கத்தில் மரணப் படுக்கையில் உலா ஜடாயு இராவணனை पुत्रो विश्रावासः साक्षात् भ्राता वैश्रवाणस्य च | इति उक्त्वा दुर्लभान प्राणान मुमोचा पतागेश्वरा ப்பற்றிச் சொல்லும்போது அவன் விஸ்ரவசுவின் புதல்வின் குபேரனின் சகோதரன் என்று மட்டும் மேலே சம்பாதி சொல்வது போல ஆரம்பித்து  அவன் இலங்கையின் அரசன் என்று இரண்டாவது வரியைச் சொல்லும் முன் இறந்து விடுகிறான். ஜடாயு அந்த இரண்டாவது வரியைச் சொல்லி இருந்தால் கிஷ்கிந்தா கண்டம், சுந்தர காண்டம் ஆகியவை இருந்திருக்காது. இராமன் சுக்ரீவனைச் சந்தித்திருக்க மாட்டான். வாலி வதம் நடந்து இருக்காது. நேராக இராமன் இலங்கைக்குச் சென்று யுத்த காண்டத்தை நடத்திச் சீதையை மீட்டுச் சென்றிருப்பான்.


 தொடரும்

Friday, December 12, 2025

 




 

வால்மீகியின்

கிஷ்கிந்தா காண்டம்

சம்பாதியின் வருகை


பதிவு எண் 385

நேற்றைய தொடர்ச்சி

இச்சமயம் ஜடாயுவின் மூத்த சகோதரனாகிய ‘சம்பாதி’ தனது குகையிலிருந்து வெளியே வந்து அமர்ந்தது. வானரர்களைப் பார்த்ததும் சம்பாதிக்கு மகிழ்ச்சி. “வெகு நாளாக தேடிய உணவு தற்பொழுது எனது அதிர்ஷ்டத்தினால் அருகிலேயே எனக்கு கிட்டியுள்ளது. உண்ணாவிரதம் இருந்து வானரங்கள் மடிந்தால் நான் அவைகளை ஒன்றன்பின் ஒன்றாகப் புசிப்பேன்.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டது.

அங்கதன் துயரத்தால் சஞ்சலமடைந்து ஹனுமனை நோக்கி “இப்பொழுது நாம் எவ்வளவு கோரமான விதியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் அந்தக் கொடூர உள்ளம் படைத்த கைகேயினால் வந்ததல்லவோ?

===========================================

राम लक्ष्मणयोः वासाम् अरण्ये सह सीतया |

राघवस्य च बाणेन वालिनः च तथा वधः || ४-५६-१५

राम कोपात् अशेषाणाम् राक्षसाम् च तथा वधम् |

कैकेय्या वर दानेन इदम् च विकृतम् कृतम् || ४-५६-१६

=========================================

அவள் தசரத மன்னர், ஜடாயு, வாலி ஆகியோரின் மரணங்களுக்கு காரணமானவள் அல்லவா? இப்பொழுது நம்முடைய மரணத்திற்கும் அவளே காரணம்” என்று கூறினான்..( கைகேயி இராமனை வனத்திற்கு அனுப்பாமல் இருந்தால் தசரதன் இறந்திருக்க மாட்டான். இராமன் வனம் வைத்திருக்க மாட்டான். சூர்ப்பனகைக்கு அவமானம் நிகழ்ந்திருக்காது, ஜனஸ்தானத்தில் கரன் முதலிய அரக்கர்கள் அழிந்திருக்க மாட்டார்கள். சீதை இராவணனால் கடத்தப் பட்டிருக்க மாட்டாள். ஜடாயு மரணம்/ நிகழ்ந்திருக்காது,. ஆக எல்லா பிரச்னைகளுக்கும் மூல காரணம் கைகேயி என்று சொல்கிறான் அங்கதன்)

ஜடாயுவின் மரணத்தைக் கேட்ட சம்பாதி ஆவலுடன் “வானரர்களே! தயவு செய்து எனது இளைய சகோதரனுக்கு என்ன நடந்தது சொல்லுங்கள்? சற்று முன் நீங்கள் ஜடாயுவைப் புகழ்ந்து பேசுவதைக் கேட்டு நான் மகிழ்ந்தேன். அதே சமயம் அவனை இழந்ததிற்கு வருத்தமும் அடைகிறேன். வானர ஸ்ரேஷ்டர்களே! வெகு காலத்திற்கு முன்பு எனது இறகுகள் சூரியனால் எரிக்கப்பட்டன. அதனால் நான் பறக்க இயலாமல் மலை உச்சியிலிருந்து கீழே இறங்க உதவி செய்வீர்களா? என்று கேட்டது.

வானரங்களுக்கு ‘சம்பாதி’ தங்களை உண்ண விரும்புமோ என்பதால் அதன்மேல் நம்பிக்கை ஏற்படவில்லை.”நாம் இறக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம். இப்பெரிய கழுகிற்கு நாம் உணவாகத்தான் போனால் என்ன? நம் துயரமும் விரைவில் தீரும்” என்று நினைத்தனர்.

உடனே வானரங்கள் சிகரத்தை அடைந்து சம்பாதியை மலை அடிவாரத்திற்கு கொண்டுவந்தனர். அவ்வாறு செய்யும்பொழுது அங்கதன் இராமனுடைய கதையை நாடு கடத்தப் பட்டதிலிருந்து ஜடாயுவின் வீர மரணம் வரை எடுத்துக் கூறினான், பிறகு தனது தந்தை வாலி மற்றும் சுக்ரீவன் பற்றிய கதையையும் எடுத்துரைத்தான்.

இதற்குப் பதிலாக சம்பாதி தனது வரலாற்றைக் கூறியது.


தொடரும்..................