Monday, August 3, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 173

 

 

மீண்டும் துளசிதாசரிடம் வருவோம்

 

இராமன் பதிலில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. அதாவது யுத்தம் செய்வது தண்டனை கொடுப்பது இரண்டும் வேறு வேறு விஷயங்கள் யுத்தம் எதிரியுடன் செய்வது தண்டனை குற்றம் செய்தவனுக்குக் கொடுப்பது.. யுத்தத்தின் முடிவு தண்டனை அல்ல. குற்றவாளி நீதிபதியிடம் “எனக்குத் தூக்கு தண்டனை கொடுத்து அதர்மம் செய்துவிட்டாய். எனது கையில் வாளைக் கொடு . நீயும் வாளெடுத்து வா. உன்னால் என்னைக் கொல்ல முடிந்தால் அது தர்மம்.”. பதிலுக்கு நீதிபதி நான் உன்னுடன் போரிட வரவில்லை. நீ தவறு செய்தாய் . அதற்குத் தண்டனை கொடுத்தேன். மற்றபடி உனக்கு நான் எதிரி அல்ல” என்பதாகும்.

 

இராமனும் இதைத்தான் வாலியிடம் சொல்கிறான். நான் உனக்கு எதிரி இல்லை..நமக்குள் விரோதம் இருந்து நான் உன்னிடம் போர் புரிய வந்திருந்தால் நீ சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. நான் உனக்குத் தண்டனை கொடுக்கவே வந்தேன்.. காரணம் நீ குற்றவாளி.. உறவையே தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவன் தண்டனைக்குரியவன். நீ அடுத்தவன் மனைவியையே அபஹரித்தவன் ஆதலால் பெரிய குற்றவாளி..உனது தண்டனையில் கடுமையைக் காட்டுவதற்காகவே வேடுவன் போல உன்னை மறைந்து நின்று கொல்ல வேண்டியதாயிற்று.. வாலி இராமன் சொன்ன பதிலில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டான். அதனால் பதில் ஏதும் பேசவில்லை. बन्धु बधूरत कह कियौ बचन निरुत्तर बालि

  

मूढ़ तोहि अतिसय अभिमाना। नारि सिखावन करसि न काना॥

मम भुज बल आश्रित तेहि जानी। मारा चहसि अधम अभिमानी॥5

 

இராமன் மேலும் பேசினான் “உன் மனைவி உனக்கு உபதேசித்தாளே, அதற்குச் செவி சாய்த்தாயா? சுக்ரீவனுக்கு  எனது புஜவலிமை  துணை நிற்கிறது என்பதை அறிந்த பிறகும் அவனைக் கொல்ல  விரும்பினாய். இது முறையா”? “.

 

तुलसी लोहा काठ संग, तरत किरत जल लाह ।

बड़ेन बृहन देव है, जाको पक्षरत बाह ॥

 

இரும்பும் மரமும் சேர்ந்து கப்பல் போலக் கடலைக் கடப்பதுபோல், எளியவன் இறைவன் मम भुज बल பக்கம் சேர்ந்தால், அவனும் வாழ்க்கைச் சிரமக் கடலை பாதுகாப்பாகத் தாண்டி விடுகிறான்என்ற நம்பிக்கையை இந்தச் சுருக்கமான வாக்கியம் எடுத்துக் காட்டுகிறது.


தொடரும்


Friday, July 31, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 172

 

நேற்றைய தொடர்ச்சி 

 

வாளாசிரியர் அங்கிருந்தோர் அனைவருக்கும் கேட்கும்படி உன் குருவின்மனைவியை விரும்பிய உள்ளத்தையும், தகாதவார்த்தை பேசிய நாவினையும், தொட்ட கைகளையும், கெட்ட எண்ணத்தோடு பார்த்த கண்களையும் காத்துக்கொள்என்று கூறினார்.பின்னர் சித்தனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் அவ்விடத்திலிருந்து மறைந்தார்.

 

தங்களுடைய ஆசிரியரைக் காணாது வாளாசிரியரின் மாணவர்கள் திகைத்தனர். தங்களுடைய ஆசிரியரைத் தேடி அவருடைய இல்லத்திற்கு சென்றனர்.வாளாசிரியருக்கும்,

 

மாணிக்க மாலைக்கும் கிடைத்த சிறப்பு

 

 வாளாசிரியரின் இல்லத்தில் இருந்த அவருடைய மனைவியிடம் வாளாசிரியர் எங்கே என்று கேட்டனர். மாணிக்க மாலை வாளாசிரியர் இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் சென்றதாகத் தெரிவித்தார். அப்போது வாளாசிரியர் தனது இல்லத்திற்கு வந்தார். அவரிடம் மாவணவர்கள் சித்தனைக் கொன்றபின் தாங்கள் எங்கே சென்றீர்கள்?” என்ற கேட்டனர். வாளாசிரியரும் சித்தனைத் தான் கொல்லவில்லை என்று தெரிவித்தார். அப்போது மாணிக்க மாலை வாளாசிரியரிடம் சித்தன் தன்னிடம் நடந்த முறையற்ற நடத்தைகளைக் கூறினார். வாளாசியரின் மாணவர்களும் போர்களத்தில் வாளாசிரியர் மாணிக்க மாலை கூறியவாறு கூறி அவனைக் கொன்றதாகத் தெரிவித்தனர்.

 

அப்போது வாளாசிரியர் மாணிக்க மாலையின் துயரினைப் போக்க சோமசுந்தரர் தனது உருவம் தாங்கி வந்து சித்தனைக் கொன்றாதக் கூறினார்.

 

இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட குலோத்துங்க பாண்டியன் இறைவனின் திருவருளைப் பெற்ற அத்தம்பதியினரை வணங்கி யானையின் மீது ஏற்றி ஊர்வலம் வரச் செய்து பொன்னும் பொருளும் வழங்கினான். இந்த நிகழ்வை கமலை வல்லியம்பலவாண முனிவர் தனது முதுமொழிமேல் வைப்பு என்ற நூலில் ஒரே பாடலில் சொல்லிவிட்டார்.

 

தையலார் கற்பழியச் சார்வானை மாமதுரைத்

தெய்வமே சென்றொறுக்குஞ் செய்தியால் - நொய்தின்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

 

தொடரும்

 


 


அரக்கர்களை அழிப்பதில் ராமனின் நிலைப்பாடு ஒரு அலசல்....

பதிவு இரண்டு

 

 

விஸ்வாமித்திரர், ராமர் லக்ஷ்மணனை அழைத்துக்கொண்டு தாடகை வனத்தில் நுழைகிறார். அங்கு தாடகையின் வரலாற்றை விளக்கிச் சொல்லிவிட்டு, அந்த வனத்திற்குள் நுழைந்த எல்லோரையும் அவள் எப்படி கொன்று தின்றுவிடுகுகிறாள் என்பதையும் விளக்கிச் சொல்கிறார். என் உத்திரவின்படி நீ  அவளை உன் சொந்த ஆற்றல் கொண்டு  கொல்லவேண்டும்” என்று சொன்னவுடன் ராமன் ‘குருவின் சொல்லே என் கடமை” என்று சொல்கிறான். ஆனால் தாடகையை நேரில் கண்டவுடன் அவள் பெண் என்பதால் சற்று பின் வாங்குகிறான். அவளது கைகளை துண்டித்தால போதும் என்று நினைத்து அவ்வாறு செய்கிறான்.

 

விஸ்வாமித்திரர் உடனே’ “ராமா அவளைப் பெண் என்று நினைக்காதே. அவள் ஒரு பேய். பெண்ணுக்குரிய அடையாளங்கள் இருந்தாலும் பெண்மைக்குரிய மென்மை இல்லாதவள்.” என்று சொல்லிவிட்டு அவளைக் கொல்லவேண்டியதின் நியாயத்தை எடுத்துச் சொல்லிவிட்டு, கடைசியாக சொல்கிறார்.

नृशंसमनृशंसं वा प्रजारक्षणकारणात्।
पातकं वा सदोषं वा कर्तव्यं रक्षता सता।।1.25.17।।

राज्यभारनियुक्तानामेष धर्मस्सनातन:
अधर्म्यां जहि काकुत्स्थ धर्मोह्यस्या विद्यते।।1.25.18।।

 

அன்புள்ள ராமச்சந்திரா

அவளுக்கு முடிவுகாலமும்

ஆருயிர்க்கெல்லாம்

விடிவுகாலமும்

உன்னால்தான்

உண்டாகவேண்டும்

கவிஞர் வாலி

 

நான்கு வர்ணத்தவர்களின் நலனுக்காக அரசர்கள் இத்தகைய காரியங்களை செய்யவேண்டியது வரும். மக்களையும், துறவிகளையும் காப்பதற்காகக் கொடிய செயல்களையும், பழி வரக்கூடியச் செயல்களையும், பாவங்களையும் செய்தே தீரவேண்டும். ஆளப்பிறந்தவர்கள் எப்போதும் இயற்றவேண்டிய  அறம்  இது, அறத்தை நிலைபெறுத்த மறத்தை விலக்குவதே முறை” என்று  முனிவர் சொல்ல  ராமனும் குழப்பம் தெளிந்து தாடகையைச் சம்ஹாரம் செய்கிறான்.

 

ஆக விஸ்வாமித்திரரின் இந்த அறிவுரையை மனதில் வைத்துத்தான் முனிவர்வளுக்கு ராமன் வாக்களித்தான். ஆனால் சீதை ராமனின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.

 

அப்போது சீதையின் கருத்துக்கு ராமன் பதிலுரைத்தான். “தேவி நீ சொன்ன வார்த்தைகள் முற்றிலும் உண்மையே. ஆனால் ஜனங்கள் வருந்தி ஐயோவென்று முறையிடுவதற்கு முன்  க்ஷத்ரியர்கள் வில்லைத் தரிக்கவேண்டும். மகரிஷிகள் அரக்கர்களுக்கு பயந்து என்னைச் சரணடையக்கூடது. அப்படி அவர்கள் செய்தால் அது வெட்கத்துக்குரிய விஷயம்  அதற்கு   முன்பாகவே அவர்களிடம் நான் சென்று “நீங்கள் என்னிடம் வரவேண்டிய தேவை இல்லை. நான் உங்களுக்கு பணி செய்யவேண்டியவன் உங்கள் எண்ணத்தை உணர்ந்து,  உங்களை துன்புறுத்தும் அரக்கர்களை மட்டும்  கொன்று உங்களைப் பாதுகாக்கிறேன் என்றுப் பிரதிக்ஞை செய்து, அதை நிறைவேற்ற வேண்டியவன். சீதே! நான் உயிரையும் விடுவேன். உன்னையும் லக்ஷ்மணனையும் கூட துறந்து விடுவேன். ஆனால் கொடுத்த வாக்கைத் தவறவிடமாட்டேன். ஆக நான் எந்த தர்மத்தை செய்ய மனதில் நினைப்பேனோ, அதையே நீயும் சங்கல்பிக்க வேண்டும்”

 

ஆக ராமனுக்கு விஸ்வாமித்திரர்  சொன்னதே வேத வாக்கு. ஆக “யாரோடும் பகை கொள்ளலன்” என்ற ராமனின் நிலைப்பாடு இதுதான்.

 

படித்தோருக்கு நன்றி.

 

மீண்டும் ஒரு பதிவுடன் சந்திக்கிறேன்.

 

 


Thursday, July 30, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 171

 

நேற்றைய தொடர்ச்சி

 

 

சித்தனின் துர்நடத்தை

 

குருவால் தன்னை ஒன்றும் செய்ய இயலாது என்ற மமதை தலைக்கு ஏறிய சித்தன் தனது குருவின் மனைவியை அடைய விரும்பினான். ஒருநாள் குரு வீட்டில் இல்லாதபோது அவரது வீட்டிற்குச் சென்று மாணிக்க மாலையிடம் தன்னுடைய விருப்பத்திற்கு உடன்படும்படி அவதூறாகப் பேசினான். பின் மாணிக்க மாலையின் கையைப் பிடித்து இழுத்தான். அவனிடம் இருந்து தப்பித்த மாணிக்க மாலை உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள்.. சிறிது நேரம் காத்திருந்த சித்தன் மற்றொரு நாள் மாணிக்க மாலையை கவனித்துக் கொள்வதாகக் கூறிச் சென்று விட்டான். மாணிக்க மாலை தனது நிலை குறித்து மிகவும் வருந்தினாள்.

 

மாணிக்க மாலை நடந்த விஷயங்களைத் தன் கணவனிடம் கூறினாள். சித்தனுக்கும் கணவனுக்கும் சண்டை ஏற்படக் கூடும். சண்டையில் வயதான தனது கணவனை சித்தன் தோற்கடித்தால் பின் தன்னுடைய நிலை?’ என்று பலவாறு மனதிற்குள் எண்ணினாள்.

 

இறுதியில் திக்கற்றவளாய் சோமசுந்தரரைச் சரண் அடைந்தாள். இறைவா, என்னையும் என் கணவனையும் இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுஎன்று கதறினாள்.மாணிக்க மாலையின் அழுகுரலைக் கேட்டு இறைவனார் அவளுக்கு உதவ அருளுள்ளம் கொண்டார்.

 

 

இறைவனார் சித்தனுடன் போர் புரிதல்

 

மறுநாள் இறைவனார் வாளாசிரியரின் உருவத்தில் சித்தனின் வாட்பயிற்சி கூடத்திற்குச் சென்றார். சித்தனிடம் சித்தா இளைஞனான நீயும், வயதான நானும் நாளை வாட்போர் புரிந்து நம்மில் வல்லவர் யார் என்பதைக் காண்போம். ஆதலால் நீ நகருக்கு வெளியே வந்து என்னுடன் வாட்போர் புரிஎன்று கூறினார்.

 

இதனை எதிர்பார்த்துக் காத்திருந்த சித்தன் அதற்குச் சம்மதித்தான். நாளை நடைபெறும் போரில் எளிதாக வெற்றி பெற்று வாளாசிரியனை ஊரைவிட்டு துரத்திவிட்டு மாணிக்க மாலையை அடைந்து விடவேண்டும்என்று மனதிற்குள் எண்ணினான்.. மறுநாள் மதுரைநகரின் வெளியிடத்தில் சித்தனுக்கும், வாளாசிரியன் உருவில் வந்த இறைவனாருக்கும் வாட்போர் தொடங்கியது. இருவரும் நீண்ட நேரம் போர் புரிந்தனர்.


தொடரும் 

 

 


Wednesday, July 29, 2026




அரக்கர்களை அழிப்பதில் ராமனின் நிலைப்பாடு ஒரு அலசல் .

.

..பதிவு ஒன்று



 

ராமனின் வனவாசத்தின்போது,  முனிவர்கள் ராகவனிடம், ராட்சதர்கள் தங்களுக்கு மிகுந்த இடையூறு செய்து, கொன்று குவிப்பதாகவும் அவர்களிடமிருந்து தங்களை ரட்சிக்க வேண்டும் என்று வேண்டினர்.  ராமனும் அவர்களை பாதுகாத்து அரக்கர்களை அழிப்பதாக  வாக்களித்தான்.

 

ஆனால் சீதை ராமனின் இந்த பதிலை விரும்பவில்லை. ராமனிடம் “முனிவர்களை காக்க அரக்கர்களை கொல்லவேண்டியது அரசர்களின் கடமை. ஒருவர் எந்த இடத்தில் உள்ளாரோ, அந்த இடத்து  தர்மத்தை அனுசரிக்கவேண்டும். தாங்கள் இப்போது இருப்பது காடு. இங்கு அஸ்திரங்களுக்கும் க்ஷத்ரிய தர்மத்திற்கும் வேலை இல்லை. தவ வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்”  என்று  சீதை சொல்லுவதை முந்தைய பதிவில் பார்த்தோம். ராமன் சீதைக்கு என்ன பதிலுரைத்தான் என்பதை கடைசியில் பார்க்கலாம்.

 

ராமன் முனிவர்களிடம் அரக்கர்களை அழிப்பேன் என்று எந்த அடிப்படையில் அப்படி ஒரு உறுதிமொழி கொடுக்கிறார் என்று யோசித்தேன். அதுவும் வனத்தில். காரணம் ராமன் யாருக்கும் தீங்கு நினைக்காதவன். பிறகு அவனால் எப்படி இந்த வாக்குறுதி கொடுக்கமுடிந்தது. ஆனால் இப்படித்தான் செய்யவேண்டும் என்று அறிவுரை சொன்னவர் விஸ்வாமித்திரர் தான்.

 

இங்கு இன்னொரு கேள்வியும் எழலாம். ராமனிடம் கோரிக்கை வைத்தவர்கள் எல்லோருமே முனிவர்கள். முனிவர்கள் எல்லோருமே தவ வலிமை மிக்கவர்கள். அவர்கள் நினைத்தால் தங்களுக்கு இன்னல் விளைவிக்கும் அரக்கர்களைப் பார்வையாலேயே பொசுக்கிவிடமுடியும். பிறகு  அவர்கள் ஏன் ராமனிடம் அப்படி ஒரு கோரிக்கை வைக்கவேண்டும்?

 

ஆனால் அவர்கள் செய்வதுதான் சரி என்று எனக்கு தோன்றியது. காரணம் சீதை என்ன சொல்கிறாள்? ஒருவர் எந்த இடத்தில் உள்ளாரோ அந்த இடத்து தர்மத்தைத்தான் அனுசரிக்கவேண்டும் என்று. முனிவர்கள் தவம் செய்ய வனம் வந்தவர்கள். அவர்கள் அதைவிட்டு மற்ற கிரியைகளில் எப்படி ஈடுபடமுடியும். மேலும் ஒருவரை அழிப்பது என்று அவர்கள் நினைத்தால் அவர்கள் தவ வலிமை குறையும். அதனால் தான் அவர்கள் ராமனை நாடினர்.

 

உங்களை இப்போது பால காண்டத்திற்கு அழைத்துச் செல்கிறேன். தனது வேள்விக்குச் சுபாகு, மாரீசன் என்ற அரக்கர்கள் இன்னல் விளைவிப்பதாகவும் அவர்களை அழித்து வேள்வியைக் காக்க ராமனைத் தன்னுடன் அனுப்பும்படி விஸ்வாமித்திரர், மன்னன் தசரதனை வேண்டிக்கொள்ள, முதலில் தசரதன் மறுத்து, வேண்டுமானால் நானே படையுடன் அங்கு வந்து அரக்கர்களை அழிக்கிறேன் என்று கூறுகிறான்.

 

 

முனிவர்களுக்கு கேடு விளைவிக்கும் அரக்கர்களை அழிக்கவேண்டியது அரசரின்  கடமை என்று  சீதை சொன்னதை இங்கு நினைவு கூறுகிறேன். தசரதனும் அதையேதான்  சொல்லி ராமரை அனுப்ப மறுத்தார்.  பிறகு குல குரு வசிஷ்டரின் தலையீட்டால் ராம லக்ஷ்மணர்களை விஸ்வாமித்திரருடன் அனுப்புகிறான்.

 

 

பிறகு என்ன நடந்தது?

 

நாளை பார்ப்போம். 

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 170

 

நேற்றைய தொடர்ச்சி

 

 

இங்கு வாசகர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லவிரும்புகிறேன். அதாவது தர்மத்திற்கு எதிரானவனைத் தண்டிப்பது. தாயையும், சகோதரியையும், சகோதர மனைவியையும், மகளையும். "இவர்களை அறிவுள்ளவர்கள்   தவறான பார்வையால் (காமக் கண்ணால்) எப்போதும் பார்க்கக் கூடாது." இவர்களோடு குருவின் மனைவியையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். அப்படி குருவின் மனைவியையிடம் தவறாக நடக்க முயற்சித்தவனின் அங்கங்களை சிவபெருமான் வெட்டிய நிகழ்வு திருவிளையாடல் புராணத்தில் அங்கம் வெட்டு படலத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 

திருவிளையாடல் புராணத்தின் கூடல்காண்டத்தில் இருபத்தி ஏழாவது படலமாக அமைந்துள்ளது இந்தப் படலம்.  திக்கற்ற தனது அடியவர்களை இறைவனார் காப்பாற்றுவார் என்பதை இப்படலம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

வாளாசிரியனும், சித்தனும்

 

குலோத்துங்கப் பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். அப்போது மதுரையில் வெளியூரினைச் சேர்ந்த வயதான வாளாசிரியன் ஒருவன் வசித்து வந்தான்.

 

அவனது மனைவியின் பெயர் மாணிக்க மாலை என்பதாகும். அவ்விருவரும் இறைவனான சோமசுந்தரரிடம் பேரன்பு கொண்டிருந்தனர்.

 

வாளாசிரியன் மதுரை நகரின் வெளிப்புறத்தில் வாட்பயிற்சி கூடம் ஒன்றினை அமைத்து வாட்பயிற்சியினைக் கற்பித்து வந்தான். அவனிடம் சித்தன் என்பவன் வாட்பயிற்சி பெற்றான்.

 

நாளடைவில் அவன் வாட்பயிற்சியில் குருவினை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினான். திறமைசாலியாக விளங்கிய சித்தன் கெட்ட எண்ணங்கள் மற்றும் துர்நடத்தைகள் கொண்டவனாக விளங்கினான்.

 

சிறிது காலம் கழித்து தனது குருவுக்கு போட்டியாக வாட்பயிற்சி கூடம் ஒன்றைத் தொடங்கினான். வாட்பயிற்சி கற்பிக்க அதிக ஊதியம் பெற்றான்.

 

தனது குருவினை மதுரையை விட்டு விரட்ட தீர்மானித்த சித்தன், தனது குருவிடம் பயின்று வரும் மாணவர்களை தன்னிடம் பயிற்சி பெற கட்டாயப்படுத்தினான். ஆனால் அவனது குருவோ சித்தனின் இத்தகைய செயல்களால் அவனிடம் வெறுப்பு கொள்ளவில்லை.

தொடரும்