Thursday, February 16, 2023

 

விதி என்ன

 செய்துவிடும்

(ஆர்.சேஷாத்ரிநாதன்)



 

இப்படிகேட்ட இருவர் விதியிடம் சரண்டர் ஆன கதை இங்கு சொல்லப்போவது.  உங்களுக்கும் தெரிந்து இருக்கும். ஒரு நினைவூட்டல்...

 

அது ஜனமேஜயன் அரசவை

 

ஜனமேஜயன் யார் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். அர்ஜுனனின் புதல்வன் அபிமன்யு. அபிமன்யுவின் புதல்வன் பரிக்ஷித். அவனது புதலவன்தான் ஜனமேஜயன். ஹஸ்தினாபுரத்து அரசன்.

 

ஒரு நாள் ஜனமேஜயன் தனது  மந்திரிகள், பிரதானிகளுடன் அரசவையில் அளவளாவிக் கொண்டிருந்தான்.

 

அப்போது திடீரென்று வேதவியாசர் அவையில் நுழைந்தார். வியாசர் முதலில் ஜனமேஜயனுக்கு பாட்டன் முறை. அவரைக் கண்டதும் குல முதல்வர் என்ற முறையிலும் தவ வலிமை கொண்டவர் என்ற காரணத்தினாலும் மகிழ்வுடன்  வணங்கி, வரவேற்று, அவருக்கு பாத பூஜைகள் செய்து ஆசனத்தில் அமர வைத்தான்.

 

பிறகு அவரிடம் பேச ஆரம்பித்தான்.

 

“முனிவரே, எனக்கு ஒரு சந்தேகம்  தங்களுக்கு முக்காலமும் அறிந்து கொள்ளும் சக்தி உள்ளது என்பது உண்மைதானே? என்று வினவினான்.

 

வியாசரும் சிரித்துக்கொண்டே ‘ஆமாம் அது உண்மைதான். எனது தவ வலிமையால் எனக்கு அது கிடைத்தது” என்று பதிலுரைத்தார்.

 

ஜனமேஜயன் தொடர்ந்தான் ‘முனிவரே இவ்வளவு பெரிய யுத்தம் மூண்டு லட்சக்கணக்கான பேர் மாண்டு போனார்களே? பீஷ்மர், துரோணர் போன்ற பல முக்கியாமனவர்கள் அழிந்து போனார்களே? இரண்டு தரப்பிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லோரும் அழிந்து போனார்களே? முக்காலமும் உணர்ந்த உங்களுக்கு தெரியும் இப்படி ஒரு யுத்தம் வரப்போகிறதென்று.  இத்தனை அழிவை நீங்கள் நினைத்தால் ஏதாவது செய்து  தடுத்து இருக்கமுடியுமே. நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?” என்று ஒரு பெரிய கேள்வியைச் சுலபமாக  எழுப்பினான்.

 

வியாசரோ “எவ்வளவு பெரிய விஷயத்தை மிகச் சுலபமாக இவன் இப்படிச் சபையில் சான்றோகள் முன் கேட்டுவிட்டானே. இவனுக்கு பதில் சொல்ல வேண்டுமா இல்லை வேண்டாமா?” என்று நினைத்துச் சிரித்துக்கொண்டே மௌனமாக இருந்துவிட்டார்.

 

ஜனமேஜயன் விடவில்லை. அவரிடம் மீண்டும் ‘சுவாமி நான் சபையில் கேள்வி கேட்கிறேன் . நீங்கள் பேசாமல் உள்ளீர்கள். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் ஏன் மகாபாரதப் போரை தடுத்து இருக்கக்கூடாது?” என்று மீண்டும் கேட்டான்.

 

 

மீண்டும் வியாசர் சிரித்துவிட்டு மௌனமாக இருந்தார்.

 

ஜனமேஜயன் விடவில்லை ‘சுவாமி நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? என்றான்.

 

வியாசர் ‘ஜனமேஜயா... நீ கேட்பதெல்லாம் சரி. எனக்கு முக்காலம் அறியும் சக்தி உண்டு. போர் வருவது எனக்கு நன்றாக தெரியும், ஆனால் நான் நினைத்து இருந்தாலும் இந்தப் போரைத் தடுத்திருக்கமுடியாது “ என்றார்

 

ஜனமேஜயன் மீண்டும் அவரை விடவில்லை. ‘ஏன் உங்களால் அந்தப் போரைத் தடுத்து இருக்கமுடியாது காரணம் சொல்லுங்கள்? என்று வினவினான்.

 

ஜனமேஜயன் இளைஞன். அவனால் வியாசர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

 

வியாசர் ‘ஜனமேஜயா நான் நினைத்து இருந்தாலும் தடுத்திருக்க முடியாது?” என்றார்

 

இளமை வேகம். ஜனமேஜயன் அவரை விடவில்லை ‘சுவாமி குல முன்னவர் என்ற முறையில்,  நீங்கள் இன்ன இன்ன ஆபத்து வரப்போகிறது என்று சொல்லி இருந்தால் எல்லோரும் கேட்டு இருப்பார்களே” என்று சொல்ல

 

வியாசரோ ‘கேட்டிருக்க மாட்டார்கள்” என்றார்.

 

சுவாமி நீங்கள் சொல்வதை துரியோதனனும் அவனது சகோதரர்களும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் என் பாட்டன்  தர்மர் நீங்கள் சொல்வதைக் கேட்டிருப்பார் அல்லவா”

 

‘கேட்டு இருக்கமாட்டார்”

 

‘ஐயனே  சூதாட்டம் ஆரம்பிக்கும் போதே நீங்கள் தருமரிடம் இதில் நீ தோற்றுப்போவாய். திரௌபதி துகிலுரியப்படுவாள். நீங்கள் நாட்டை இழப்பீர்கள். போர் மூழும். பலர் மாண்டு போவார்கள் என்று தெளிவாக எச்சரித்து இருந்தால் தர்மர் விளையாடி இருக்க மாட்டாரே”

 

‘கண்டிப்பாக விளையாடி இருப்பார்”

 

 

ஜனமேஜயன் வியாசரிடம் தொடர்ந்து மகாபாரத யுத்தத்தை ஏன் தடுத்திருக்கமுடியாது என்று வாதம் செய்து  கொண்டே இருந்தான்.

 

வியாசர் அவனிடம் ‘நீ விடுவதாக இல்லையா” என்று கேட்டார்

 

‘இல்லை” அவன் பதில்

 

 ‘ஜனமேஜயா இப்போது உன்னுடைய அபிப்ராயம் என்ன? பின்னல் நடக்கப்போவது தெரிந்தால் அதைத் தடுத்துவிடலாம் என்பதுதானே”

 

“ஆமாம் முனிவரே”

 

‘அப்படியானால் உனக்கு நடக்கப்போவதை இப்போது சொல்கிறேன். முடிந்தால் தடுத்துக்கொள்”

 

‘சொல்லுங்கள்”

 

‘இன்றிலிருந்து பத்தாம் நாள் உனக்கு பிரம்மஹத்தி தோஷம்(பிராமணனைக் கொன்ற தோஷம்) வரப்போகிறது. முடிந்தால் நீ அதைத் தடுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு வியாசர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

திகைத்துப் போனான் ஜனமேஜயன். இப்படி வாயைக்கொடுத்து மாட்டிக்கொண்டோமே என்று ஒரு கணம் நினைத்தான்.

 

ஆனாலும் ஜனமேஜயன் க்ஷத்ரிய அரசன் அல்லவா? ராஜஸ குணம் பொருந்தியவன். உடனே வியாசரின் வாக்கை எப்படி எதிர்கொள்வது என்று யோசனை செய்தான். தேசத்தில் உள்ள பண்டிதர்கள் எல்லோரையும் வரவழைத்து  இந்த பிரச்னையிலிருந்து எப்படி வெளிவருவது என்று ஆலோசனை சொல்லுமாறு பணித்தான்.

 

அந்த பண்டிதர்கள் எல்லோரும் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து மன்னனுக்கு ஒரு யோசனை சொன்னார்கள்.

 

‘மன்னரே நீங்கள் ஒரு யாகம் செய்வதே இந்த பிரச்னை நேராமல் தடுக்க முடியும்” என்றனர்.

 

மன்னன் உடனே யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய உத்திரவிட்டதுடன் வேத விற்பனர்களை வரச்சொன்னார்.

 

 

மூட்டை மூட்டையாக சமித்துகளும், குடம் குடங்களாக நெய்யும் வந்தன. வேள்விக்காக பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன.

 

வேள்வியைத் தலைமை ஏற்று யார் நடத்தப்போகிரார்கள்? பல அந்தண  வேத விற்பன்னர்கள் வியாசர் சொன்னதை மனதில் கொண்டு யாகத்தை நடத்த முன்வரவில்லை. இறுதியாக ஒரு வேதவித்து, ஏழை அந்தணர் முன்வந்தார். இதைச்செய்தால் நிறைய பொருள் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு தலைமை ஏற்று யாகம் நடத்த ஒப்புக்கொண்டார்.

 

வேள்வி நடக்கும் இடத்தைச் சுற்றி வீரர்கள் நிறுத்தப்பட்டனர். வேறு யாரும் உள்ளே வரவிடக்கூடாது என்று அவர்களுக்கு உத்திரவு இடப்பட்டது.

 

வேள்வி ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நிறைய நெய்யும் சமித்துகளும் அக்னியில் இடப்பட்டதால்  நெருப்பின் ஜ்வாலைகள் மேலெழும்பின.அந்த இடமே ரம்மியமாக காட்சி அளித்தது.

 

ஜனமேஜயனுக்கு மிக்க மகிழ்ச்சி. வியாசர் சொன்னது தவறு என நிரூபித்து விடலாம் என்ற நம்பிக்கை அவன் மனதில் துளிர்விட்டது.

 

வேள்வி துவங்கி ஒன்பது நாட்கள் கழிந்துவிட்டன.

 

பத்தாம் நாளிலும் பாதி கடந்துவிட்டது.

 

ஜனமேஜயன் இரண்டு வீரர்களை தனக்கு அருகில் நிற்க உத்திரவிட்டான். ஒரு வேளை கோபத்தில், தான் அங்கிருந்த அந்தணர்களைத் தாக்க முற்பட்டால் தன்னை உடனே தடுத்துவிடும்படி அவர்களுக்கு கட்டளையிட்டான்.

 

வேள்வி முடிய இன்னும் ஒரு மணி நேரம்...................

 

அரை மணி நேரம்...................

 

கால் மணி நேரம்..........................

 

இன்னும் ஐந்தே வினாடிகள்...........................

 

 

இன்னும் இரண்டே நொடிகள்....

 

ஜனமேஜயனுக்கு மிக்க மகிழ்ச்சி. கடைசி வினாடியில் தவறு நடந்துவிடக்கூடாது என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு நிமிடம் திகைத்துவிட்டான். ஒன்பது நாட்களாக விடாமல் யாகத்தை நடத்தி வைத்துக்கொண்டிருந்த அந்த ஏழை அந்தணன் தூங்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் வாய் மந்திரங்களைத் தெளிவாகச் சொல்லிகொண்டிருந்தது. கை நெய்யை யாககுண்டத்தில் வார்த்துக்கொண்டிருந்தது.

 

கடைசி நொடியில் முதியவர் ஏதும் தவறு செய்துவிடக்கூடதே என்று நினைத்தான். அவரைத் தொட்டு எழுப்ப நினைத்தவன் சற்று யோசித்தான். வேள்வி செய்வதற்காக அவர் காப்புக் கட்டியிருந்தார்.

 

என்ன செய்வது என்று யோசித்த மன்னன் அருகிலிருந்த தர்ப்பையை எடுத்து அவர் முதுகில் மெதுவாகத் தட்டினான்.திடுக்கிட்டு விழித்தெழுந்த அந்த அந்தணர் பதற்றத்தில் அப்படியே யாககுண்டத்தில் விழுந்து மாண்டார்.  திகைத்துபோனான் ஜனமேஜயன்.

 

வியாசரைப் பிரார்த்தித்தான். அங்கு எழுந்தருளிய வியாசரிடம் ‘முதற்கண் என்னை மன்னியுங்கள். தாங்கள் சொன்னது சரி என்று ஆகிவிட்டது. ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை. நான் தர்ப்பையால் தொட்டதற்கு அந்தணர் ஏன் பதறித் தீயில் விழுந்தார்” எனக்கேட்டான்.

 

வியாசரோ ‘ஒன்பது நாட்கள் தொடர்ந்து அந்த அந்தணர் வேள்வி நடத்திய களைப்பில் உறங்கிவிட்டார். அப்போது அவருக்கு ஒரு கனவு வந்துள்ளது. கனவில் அவர் காட்டுக்குள் செல்கிறார். அவரை ஒரு சிங்கம் துரத்தி வருகிறது. சிங்கம் அவர் முதுகில் காலால் அடிக்கும் நேரத்தில் நீ தர்ப்பையால் அவர் முதுகைத் தொட, கனவு நிஜமாகிறதோ என்ற பதட்டத்தில் அவர் தப்பிப்பதற்காக முயற்சி செய்து தீக்குள் விழுந்துவிட்டார்”

 

“அரசனே இதைத்தான் விதி என்பர். உனக்கு வரப்போகும் பாதகம் என்ன என்று தெரியும். அதைத் தடுக்கும் சக்தியும் இருக்கும். ஆனால் தடுக்கமுடியாது. இதுதான் மகாபாரதப் போருக்குக் காரணம்” என்று சொல்லி ‘இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற நீ மகாபாரதக் கதையைக் கேட்கவும். வைசம்பாயனர் உனக்கு அதைச் சொல்லுவார்” என்று சொல்லி வியாசர் மறைந்தார்.

 

 

விதி என்ன செய்துவிடும் என்று விதிக்கே சவால் விட்ட இரண்டு  இதிகாச பாத்திரங்களில் ஜனமேஜயனைப் பற்றி இதுவரை பார்த்தோம்.

 

இதில் அடுத்த கதாபாத்திரம் இராமாயணத்து லக்ஷ்மணன் .

 

இராமர், சீதை திருமணம் முடிந்து அயோத்திக்கு திரும்பினர். நாட்கள் இனிதாக கழிந்தன. ஒருநாள் அதிகாலை தசரதர் தனது முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் திடுக்கிட்டார். காதோரம் நரை முடிகள் தெரிந்தன.

 

அவைகள் ‘தசரதா நீ அரச பொறுப்புகளிலிருந்து விடுபட்டுத் தவத்தில் ஈடுபடவேண்டிய  நேரம் வந்துவிட்டது. ஆதலால் பொறுப்புக்களை ராமனிடம் ஒப்படைத்துவிட்டு நீ கானகம் செல்” என்று அறிவுறுத்துவது போல இருந்தது.

 

தசரதரும் உடனே குல குரு வசிஷ்டர், அமைச்சர் சுமந்திரர்  மற்றும் ஜோதிடர்களை உடனடியாக அவைக்கு வரும்படி உத்தரவிட்டு, அவர்களிடம் தனக்கு வயதாவதால்  தான் அரச பதவியைத் துறக்க விரும்புவதாகவும், மற்றும் ராமனுக்கு முடிசூட்ட விரும்புவதாகவும் அதற்கு நல்ல நாள் பார்க்கும்படி சொன்னார்.

 

பட்டபிஷேகத்திற்க்கான நாளும் குறிக்கப்பட்டது. இந்த விவரத்தை இராமனுக்குத் தெரிவிக்கும்படி வசிஷ்டரை கேட்டுக்கொள்கிறான் தசரதன். பட்டாபிஷேக விவரங்களை  நகர மக்களுக்கு அறிவிக்கும்படியும் உத்திரவிடுகிறான். இந்த நல்ல செய்தியைத் தனது பிரிய மனைவியான கைகேயிடம் தெரிவிக்க அவளது அரண்மனைக்கு புறப்படுகிறான்..

 

தசரதனின் அறிவிப்பைத் தொடர்ந்து அயோத்தி நகர மக்களுக்கு பறை அறைந்து அந்த செய்தி தெரிவிக்கப்படுகிறது.

 

‘பூமகள் கொழுநனாய் புனையும் மௌலி; இக்

கோநகர் அணிக” என் கொட்டும் பேரியம்.”

 

செய்தியைக் கேள்விப்பட்ட அயோத்தி நகர மக்கள் ‘ஆர்த்தனர்; களித்தனர் ஆடிப்பாடினார்;வேர்த்தனர்; தடித்தனர்; சிலிர்த்து மெய்ம்மயிர் போர்த்தனர்; மன்னனைப்புகழ்ந்து வாழ்த்தினர்’. உடனே  நகரை அலங்கரித்துப் பெரிதாகக் கொண்டாடத் தொண்டங்கினர்.

 

இப்படி எல்லோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்த போது , ஒரே ஒரு ஜீவன் நச்சு நிறைந்த எண்ணத்துடன் பொறமை கொண்டிருந்தது.

அது யார? வேறு யார்? மந்தரை என்ற கூனிதான்.

 

ராமருக்கு முடிசூட்டு விழா என்றதும் அயோத்தியே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தபோது, கைகேயின் தோழியான மந்தரை மிகுந்த சோகம் அடைந்தாள். ராமன் சிறுவயதில் வில்கொண்டு களிமண் உருண்டைகளை தன் மீது அடித்தது நினைவுக்கு வந்தது.

 

உடனே கைகேயிடம் சென்றாள். உறங்கிக் கொண்டிருந்த கைகேயியை எழுப்பி விஷயத்தை சொன்னதும், கைகேயி மகிழ்வடைந்து தனது கழுத்திலிருந்த மாலையை மந்தரைக்கு அணிவித்தாள். ஆனால் கோபத்தின் உச்சத்தில் இருந்த மந்தரை அதை வீசி எறிந்தாள்.

 

திகைத்து நின்ற கைகேயின் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும் விதமாக பேச்சுக்கொடுத்தாள். ‘சீதையோடு இராமன் உயர்ந்த சிம்மாசனத்தில் உவகையோடு  அமர்ந்திருக்க நின் மகன் பரதன் அரியாசனத்திற்குச் சரியாசனம் பெறாமல் வெறும் நிலத்தில் நிற்க நேரும் அந்த இழிநிலையை நீ எவ்வாறு ஏற்றுக்கொள்கிறாய். அதன்பின் உனக்கு என்ன நன்மை ஏற்படும்’ என்று பேசி கைகேயி மனதை முழுமையாகக் கலைத்தாள். இப்போது கைகேயிக்கு தனது மகன் பரதன் அரசாளவேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது.

 

தசரதன் கைகேயின் அந்தப்புரத்திற்குள் நுழைகிறான். அங்கு கைகேயி அலங்கோலமாகத் தரையில் விழுந்து கிடக்கிறாள். திகைத்துப் போன தசரதன் அவளைத் தூக்கி அணைத்து ‘ஏன் இந்த நிலைமை. உனக்கு என்ன வேண்டும். கேள். தவறாமல் செய்கிறேன்” என்றான்.

 

கைகேயி வேண்டிய பாசாங்குகள் செய்து, மன்னனிடம் ‘தாங்கள் அந்தக்காலத்தில் எனக்கு தருவதாகச் சொன்ன இரண்டு வரங்களை இப்போது தரவேண்டும்’ என்று சொல்ல மன்னும் சம்மத்தித்தான்.

 

கைகேயி உடனே ‘ முதலாவது, நாளை இராமனுக்குக் குறித்த பட்டாபிஷேக நேரத்தில் எனது மகன் பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்யவேண்டும். இரண்டாவது, இராமன் வனவாசம் செல்லவேண்டும்” என்று கூறினாள். அதைக்கேட்ட மன்னன் மயக்கமடைந்தான்.

 

நினைவு வந்ததும் தசரதன் பலவிதமாக சமாதானம் செய்ய கைகேயி எதற்கும் உடன்படாமல்,  தனது நிலையில் பிடிவாதமாக இருந்ததுடன், இராமனை வரவழைத்து அந்த விஷயத்தைத் தெரிவித்து உடனே வனவாசம் செல்லுமாறு சொல்லுகிறாள். இராமனும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் கைகேயி சொன்னதைக்கேட்டு தந்தையிடம் விடை பெற்றுக் கிளம்புகிறான். இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவ அயோத்தி மக்கள் கொதித்தனர். அப்போது, விடிந்தால் தனது அண்ணனுக்கு பட்டாபிஷேகம் என்ற மகிழ்ச்சியுடன் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்த இலக்ஷ்மணன் காதில் இந்த செய்தி விழுந்தது.

 

இந்த விவரங்கள் லக்ஷ்மணன் செவிகளில் விழுந்தன. அவனுள் இருந்த எரிமலை வெடித்தது. அவன் கொதித்தெழுந்தான்

 

சிங்கக் குருளைக்கு  இடுதீம் சுவை ஊனை நாயின்

வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே

நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா

கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான்

 

“சிங்கத்திற்கு சேர வேண்டிய உணவு நாய்க்குச் சென்று சேர்கிறதே இதுதான் கைகேயின் திறமா!! நன்று நன்று” என்று இலக்ஷ்மணன் எக்காளமாகச் சிரிக்கிறான். அத்தோடு நிற்காமல் “இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன். இந்த இழிசெயலுக்கு எதிராக நான் நிற்கிறேன்.எதிர்ப்பவர் எல்லோரையும் வென்று அந்த வெற்றியையும் இன்றே என் மன்னன் இராமனின் காலடியில்  சமர்ப்பித்து அவனுக்கு முடிசூடுவேன்.. இதற்கு காரணம், பெற்ற தாயே என்றாலும் அவளும் எனக்குப் பெரும்பகையே. இதை எதிர்ப்பவர்கள் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் “என்று கர்ஜித்து வில்லின் நாணை பெரும் ஓசையுடன் இழுத்து விடுகிறான். அந்த ஓசையில் அயோத்தியே ஆடிப்போனது.

 

அந்த நாணின் ஒலி இராமனின் காதுகளிலும் விழுகிறது. இது கண்டிப்பாக இலக்ஷ்மணனின்  நாணின்  ஒலியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு, இலக்ஷ்மணன் இருக்குமிடதிற்கு வருகிறான் ராமன்.

 

இலக்ஷ்மணனைப் பார்த்து “அழியாத அறம் அழிந்துபோகும்படி முறை தவறிப்போன அந்தக்கோபம் உனக்கு எப்படி வந்தது’ என்று இராமன் வினவினான்.

 

அதற்க்கு இலக்ஷ்மணன் “இந்த நாடு உனக்கு என்று தந்தை சொல்ல அதை நீ ஏற்றுக்கொண்டாய். பிறகு,  பகையினால் அதை இழந்து காட்டுக்குப் போகின்றாய் என்றால் உன் அடியவனான எனக்கு இப்போது தோன்றாத கோபம் வேறு எப்போது தோன்றுவது” என்று கேட்டான்.

 

இது கம்பனின் இராமன்.

 

இலக்ஷ்மணன் சினத்துடன் உரைத்தப் பதிலைக் கேட்ட இராமன் ‘தம்பி தசரத சக்கரவர்த்தி முன்பு ‘முடி சூட்டிக்கொள்’ என்றார். ‘அரசாட்சி என்பது பின்பு பல குற்றங்களைத் தரவல்லது’ என்பதை எண்ணிப்பார்க்காமல் அதனை ஏற்றுக்கொள்ள முயன்றது நான் செய்த குற்றமல்லவா?

 

நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே

பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த

விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டது  என்றான்

 

‘இளையவனே! நல்ல நீர் இல்லாமல் வற்றிப்போதல் அந்த  நதியின் தவறு அன்று! அதைப் போலவே எனக்கு இப்போது நேர்ந்துள்ள நிலைக்குக் காரணம், தந்தையின் தவறு அன்று! நம்மை பெற்றவள் போல பேணி வளர்த்த அன்னை கைகேயி பெற்றுள்ள அறிவின் தவறும் அன்று. அவளுடைய மகனான பரதன் செய்த தவறும் அன்று. பின்பு யாருடைய தவறு எனக்கேட்பின், இது ஊழ்வினை செய்த தவறாகும். இதற்காக நீ கோபம் கொண்டது ஏன்? என்று கேட்டான் இராமன். (இங்கு “நதி வெள்ளம் காய்ந்து விட்டால் அது நதி செய்த குற்றம் இல்லை, விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா” என்று கம்பனின் கரும்பைச்  சாறாக்கிக் கொடுத்த கண்ணதாசனை நினைவு கூறலாம்)

 

இதே கருத்தை வால்மீகியின் இராமன் எவ்வாறு கூறுகிறான் என்று பார்க்கலாம்: ‘லக்ஷ்மணா நான் காட்டுக்குப் போவதற்கும், பெற்ற ராஜ்ஜியத்தை இழப்பதற்கும் காரணம் ஈஸ்வரனே, கைகேயி அல்ல. வீணாக  அவள் மீது குற்றம் சுமத்துவதில் எந்த பயனும் இல்லை. கைகேயிக்கு இந்தவிதமான  எண்ணம் உண்டானதற்குக் காரணம் ஈஸ்வரனே. இல்லாவிட்டால் நீ எண்ணுகிறபடி என்னை இம்சிக்கவேண்டும் என்ற புத்தி ஏன் உண்டாகவேண்டும். எனக்கு என் அன்னையர்மீது பேதம் காணும் எண்ணமே இருந்ததில்லை. அதேபோல கைகேயிக்கும் என்னிடத்திலும் பரதனிடத்திலும் பேதம் பார்க்கும் எண்ணமே கிடையாது. அப்படி இருக்க என் முடிசூட்டு விழாவை நிறுத்தி என்னைக் காட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியதற்குக் காரணம் என்ன என்று யோசித்தால், ஈஸ்வரனால் அவள் புத்தி மாற்றப்பட்டிருக்கிறது என்ற காரணத்தைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அதுவும் கைகேயி என்னை நேரடியாக் கூப்பிட்டு  இந்த விஷயத்தைச் சொன்னதைப் பார்க்கும்போது அது ஈஸ்வரனின் செயல் என்றே தோன்றுகிறது. ஈஸ்வர சங்கல்பத்தை யாராலும் தடுக்க முடியாது என்பது உனக்குத் தெரியாதா?  நாம் ஒரு காரியத்தை ஆரம்பித்திருக்கும்போழுது அதைத் தடுத்து நாம் எண்ணாத  வேறொரு காரியத்தை நடத்தி வைப்பது தெய்வச்செயலே.” என்று கூறினான்.

 

 

 

இது கம்பனின் இலக்ஷ்மணன்:

 

விதி என்று இராமன் சொன்னதும், இலக்ஷ்மணனுக்கு அந்த விதியின் மேல் அடங்காத கோபமும், வெறுப்பும் உண்டாகிறது.

 

கொதிக்கும் மனது எங்ஙனம் ஆற்றுவென் கோள் இழைத்தாள்

மதிக்கும் மதியாய்   முதல் வானவர்க்கும் வலீ இது ஆம்

விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி  என்றான்

 

“அண்ணா விதியாவது வேறோன்றாவது!  என் மனம் கொதிக்கிறதே எப்படிப் பொறுப்பேன். இந்த கொடுமையைச் செய்த அந்தக் கைகேயின் சூழ்ச்சிகளுக்கெல்லாம் மேலான சூழ்ச்சியானதும்,  தேவர்களாலும் தடுக்க முடியாத வலிமையுள்ளதென்று நீ நினைக்கிற விதிக்கெல்லாம் விதியானதுமான என் வில் வேலையை இதோ காட்டுகிறேன் பார்” என்று கர்ஜித்தான்.

 

வால்மீகியின் லக்ஷ்மணன் என்ன சொல்லுகிறான்?:

 

“அண்ணா வீரியமில்லாதவர்களும், சித்தப்பிரமையுள்ளவர்களும், க்ஷத்ரியர்களில் கீழ்பட்டவர்களுமே உண்மையில் சக்தியற்ற விதியை அனுசரித்து அதற்குக் கட்டுப்படுவார்கள். தாங்கள் க்ஷத்ரிய ஸ்ரேஷ்டர். விதியை விலக்கும் சக்தியை இயற்கையாகவே உடையவர், இப்படியிருக்க விதியை வெல்ல முடியாது என்று அந்த கையாலாகாத பதார்த்தத்தை மெச்சுவது நியாயமல்ல. மனோபலமில்லாதவர்களுக்கு விதி என்பது பிழைப்புக்கு வழியென்று ப்ரஹஸ்பதி சொல்லி இருக்கிறார். ஆகையால் கையாலாகதவர்களே விதியை அனுசரிக்கவேண்டும்”

 

“அவர்களுக்கு இப்படிப்பட்ட புத்தி தோன்றியது விதியால் நேர்ந்தது. கைகேயின் குற்றமல்ல”. என்று தாங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பயந்தவர்களும், வீரியமில்லாதவர்களுமே தெய்வத்தைப் பின்பற்றுவார்கள். வீரர்களும் மன உறுதி உள்ளவர்களும் அதை லட்சியம் செய்ய மாட்டார்கள்.  தனது பலத்தால் விதியை வெல்லக் கூடியவனிடத்தில் அதன் ஆட்டம் கொஞ்சமேனும் பலிக்காது. விதியைக் காட்டிலும் புருஷப் பிரயத்னம் பலமுள்ளதென்பதைக்காட்ட இன்று பிரத்யட்சமாக ஒரு உதாரணத்தைப் பாருங்கள் விதியே தங்களுடையப் பட்டாபிஷேகத்தை தடுத்தது என்று தாங்களும், மக்களும் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தத் தெய்வம் என் பலத்தால் ஜெயிக்கப்பட்டு என்ன பாடுபடுமென்பதை எல்லோரும் பார்ப்பீர்கள்.” இவ்வாறு இலக்ஷ்மணன் பொரிந்து தள்ளினான். பின்னால் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

 

இங்கே இலக்ஷ்மணன் விதியை அலட்சியமாகப் பேசுகிறான். அரண்மனையில் எந்தவித கஷ்டங்களையும் சந்திக்காத இலக்ஷ்மணன் தான் நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிக்க வேண்டும்/முடியும் என்ற நிலையிலேயே இருந்தவன்.

 

இப்படி விதி மறுத்துப் பேசிய அதே இலக்ஷ்மணன் பின்னல் விதியை ஆதரித்து  என்ன சொல்லுகிறான்?

 

 

வனவாசத்தின் போது இராவணனால் ஏவப்பட்ட மாரீசன், மாய மான் வேடம் பூண்டு சீதையின் முன் உலவுகிறான். மானைக்கண்டு மயங்கிய சீதை அதைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் கேட்க, குறுக்கிட்ட இலக்ஷ்மணன் “அதைப் பிடிக்கச் செல்லவேண்டாம். இயற்கைக்கு ஒவ்வாததான அந்த  விசித்திரமான மான், ஏதோ வஞ்சனை செய்ய வந்தது போல உள்ளது” என்று சொல்கிறான்.

 

சீதையோ இலக்ஷ்மணனின் கூற்றுக்குச் செவி சாய்க்காமல் ‘மான் ஓடி மறைந்துவிடும் விரைந்து சென்று பிடியுங்கள்” என்று இராமனை அவசரப்படுத்த இராமன் கிளம்புகிறான். இலக்ஷ்மணன், உடனே தான் அதை பிடிக்கச் செல்வதாகச் சொல்ல’ சீதைக்கு லக்ஷ்மணன் மீது ஐயம் வந்துவிட்டது. ஏற்கனவே ஆட்சேபணை  கிளப்பிய அவன் மானை பிடிக்காமல் விட்டுவிடுவானோ என்று நினைத்து ‘நீங்கள் செல்லுங்கள்” என்று இராமனை மீண்டும் கேட்டுக்கொள்ள ராமனும் விரைகிறான்.

 

ஒரு கட்டத்தில், துரத்திச்சென்ற  இராமன் அந்த மான் மீது அம்பை எய்ய அந்த மாயமானோ ‘சீதா இலக்ஷ்மணா’ என்று சொல்லி உயிர்விட்டது. அது இராமனின் குரல் போல இருந்ததால், சீதை அதைக்கேட்டு இலக்ஷ்மணனை விரைந்து சென்று பார்க்கும்படி சொல்ல இலட்சுமணனோ ‘தாங்கள் கவலைப்படவேண்டாம். இது அந்த மாயமானின் வேலையாகத்தான் இருக்கும். அண்ணனை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. அந்தச் சிவதனுசே எம்பிரான் ராமனுடைய தோளுக்கு நிகரில்லாமல் ஒடிந்து விழுந்தது. அண்ணனுக்கு அழிவு வந்தால் இந்த உலகிற்கே அழிவு வந்திருக்கும்’ என்று சொன்னான்.

 

சீதை லக்ஷ்மணனைக் கடிந்து பேச ஆரம்பித்தாள். ‘அண்ணனுக்கு அபாயம் வந்துள்ளதை அறிந்தும், அணுவளவேனும் அச்சப்படாமலும், அசையாமலும் நின்று கொண்டிருக்கிறீர்களே என்னால் அப்படி இருக்க முடியாது. நான் அங்கு எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயில் விழுந்து என் உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்”  என்று சொல்லி எழுந்து ஓட முயற்சிக்கும் சமயம், அவளுக்கு காவலாக இருந்த  இலக்ஷ்மணன் தனது அண்ணியைத் தடுத்து  அவளுடைய பாதத்தில் விழுந்து சொல்கிறான்:

 

துஞ்சுவது என்னை நீர் சொற்ற சொல்லை யான்

அஞ்சுவேன் மறுக்கிலன் அவலம் தீர்ந்து இனி

இஞ்சு இரும் அடியனேன் ஏகுகின்றனென் 

வெஞ்சின விதியின வெல்ல வல்லமோ!

எதற்காக நீங்கள் இறக்கவேண்டும்? நீங்கள் சொன்ன வார்த்தைக்குப் பயப்படுகின்றேன். இனி உங்கள் உத்திரவை மறுக்க மாட்டேன். தாங்கள் வருத்தப்படவேண்டாம். தாங்கள் இங்கேயே இருங்கள். இதோ நான் போகிறேன். விதியை வெல்ல நம்மால் ஆகுமோ?(நடக்கவேண்டியது நடக்கட்டும்)என்றான்.

 

முன்பு விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி என்று வீர வசனம் பேசிய இலக்ஷ்மணன் இப்போது தன்னால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை என்று கண்டபின், வெஞ்சின விதியை விலக்க வல்லமோ என்று தன்னையும் அறியாமல் விதி என்பதை ஒத்துக்கொள்கிறான். காட்டு வாழக்கை அவனைப் பக்குவப்படுத்தி விட்டது.

 

ஆக விதிக்கு சவால் விட்ட ஜனமேஜயனும், லக்ஷ்மணனும் விதியிடமே சரணடைந்தனர்.

 

படித்தோருக்கு நன்றி

மீண்டும் சந்திப்போம்


Tuesday, January 17, 2023

 

எனது அம்பைப் பயணம்

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில்

(ஆர்.சேஷாத்ரிநாதன்)

 

கடலை ஆடையாக உடுத்த இம்மண்ணுலகத்திலேயே முதன்மை பெற்று விளங்கும் மலைகள் இந்தியாவில் தான் உள்ளன. கங்கை, சிந்து முதலிய நதிகளின் பிறப்பிடமாக விளங்கும் இமய மலையை விட பெரிய மலை எது? ஆனால் பல பெருமைகளை உடைய மலையாக இருந்தாலும் இமயமலை அது சிறிது காலத்திற்கு முன்தான் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். உலகிலேயே மிக முதிய மலை என்று தமிழ் நாட்டில் உள்ள பொதிகை மலையைத்தான் குறிப்பிடுகின்றனர். 

 

பாவநாசம் உலகாம்பிகை உடனுறை பாவவிநாச சுவாமி திருக்கோவில்

திருநெல்வேலி மாவட்டம்., மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சந்தனச் சோலைகளும், மூலிகைகளும், நிறைந்து, தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதிகைமலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகி பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையப்பெற்றுள்ளது., பாபநாச உலகாம்பிகை சமேத நாதர் திருக்கோவில்.

 

மூலவர்    :      பாபநாசநாதர்

பாவநாசர், வைராசர், பழமறைநாயகர், முக்களாமூர்த்தி, பரஞ்சோதி எனப் பல பெயர்கள் சொல்லப்படுகின்றன.

தன்னையடைந்தாரது பாவங்களைப் போக்குபவர் - பாவநாசர்; விராட்புருடன் வழிபட்டதால் - வயிராசர்; மூன்று வேதங்களும் களாமரங்களாக நின்று வழிபட்டதால் - பழமறை நாதர், முக்களாமூர்த்தி; மேலான சோதி வடிவாக விளங்குபவர் - பரஞ்சோதி என்பன பெயர்க் காரணங்களாம்.

 

அம்மன்/தாயார்  :      உலகம்மை, விமலை, உலகநாயகி

புராண பெயர்    :      இந்திரகீழ க்ஷேத்திரம்

 ஊர் :      பாபநாசம்

(தஞ்சாவூருக்குப் பக்கத்தில் உள்ள பாபநாம் என்பது வேறு.)

 

 

தலப்பெருமை:  

             

பெயர்க்காரணம்: அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரைக் கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை "பாபநாசநாதர்' என்கின்றனர். இத்தலத்திற்கு "இந்திரகீழ க்ஷேத்திரம்' என்ற பெயரும் இருக்கிறது.

 

 

சூரியதலம்: அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. அவையாவன

 

பாவநாசம் - சூரியன்

சேரன்மாதேவி - சந்திரன்

கோடகநல்லூர் - செவ்வாய்

குன்னத்தூர் - இராகு

முறப்பநாடு - குரு

ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்

தென்திருப்பேரை - புதன்

இராஜபதி - கேது

சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்

 

 

பாபநாசம் கோவில் வரலாறு

 

பாபநாசர் திருக்கோவில் 1000-2000 ஆண்டுகளுக்கு முன்பாக பழமை வாய்ந்தது. முற்காலத்தில் (கிருத யுகத்தில்) பார்வதிக்கும்-பரமேஸ்வரனுக்கும் நடைபெற்ற திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் இமயமலை அமையப்பெற்றுள்ள வடபகுதிக்கு வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்து விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த பரமேஸ்வரன் அகத்தியரை அழைத்து தென் திசை நோக்கிச் செல்ல கட்டளையிட, அகத்தியரோ தங்கள் திருமண காட்சி காண முடியாதே என வருந்த, பரமேஸ்வரன் இங்கு நடைபெறும் திருமணக்கோலத்தில் பொதிய மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்திலே சித்திரை மாதப்பிறப்பு தினத்தன்று வந்து காட்சி கொடுப்போம் என்று உறுதியளிக்கிறார். அவ்வாறே அகத்தியரும் அங்கிருந்து விடைபெற்று வரும் போது தாமிரபரணி தீர்த்தத்தை இறைவனிடமிருந்து தமது கமண்டலத்தில் பெற்று வந்துள்ளார்.

 

பின்னர் அகத்தியர் தென்பகுதி அடைந்து பரமேஸ்வரன் கூறியதை நிறைவேற்றிட, சித்திரை திங்களன்று திருமணக்கோலத்தில் இடபவாகனத்தில் அமர்ந்தபடி வானில் பார்வதியும் பரமேஸ்வரனும் காட்சியளித்து, அகத்தியரை பொதியமலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை இம்மலையின் உச்சியிலிருந்து தாமிரபரணி நதியாக பாய விட்டு விட வேண்டும் என்று கட்டளையிட்டார்.

 

இன்றும் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த வைபவம் இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் தேதியன்று இரவு 12: 00 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆக அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த கோவிலை பொருத்தவரை சரியான வரலாற்று தகவல்கள் கண்டறிய முடியவில்லை. ஆனாலும் பாண்டிய மன்னன் சந்திரகுல பாண்டியனால் மதுரை பகுதியில் உள்ள கோவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது கோவிலின் மையத்தில் அமைந்துள்ள சன்னதி மற்றும் விமானத்தையும் சந்திரகுல பாண்டியன் கட்டியுள்ளார்.  கிபி 1609-23 ஆம் ஆண்டு மதுரை நாயக்கர் வம்சத்தில் மன்னன் வீரப்ப நாயக்கர் ஆட்சியாளராக இருந்த போது யாகசாலை, மற்றும் நடராஜ மண்டபம் மற்றும் துவஜஸ்தம்பம் (கொடித்தண்டு) முதலியவற்றை கட்டினார்

 

முக்கிளா லிங்கம்: இத்தலத்து லிங்கத்திற்கு " முக்கிளா லிங்கம்' என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

 

கல்யாணசுந்தரர் சன்னதி:

 

இங்கு சுவாமி, அம்மையோடு இடபவானத்தில் அமர்ந்தபடி திருமணக்கோலம் காட்டியருள, முன்னே அதனை தரிசித்தபடி அகத்தியரும் அவர் மனைவி லோபாமுத்ரையும் காட்சிதருகிறார்கள். சுவாமிக்கு குடைபிடித்தபடி குண்டோதரனும் இங்கு உள்ளார். இதுபோன்று ஒரே சன்னதியில் கல்சிற்ப மேனியராய் சுவாமி-அம்மையோடு இடபவாகனராய் காட்சியளிப்பது அபூர்வம்

 

அம்பாள் உலகம்மை :

 

இங்கு சுவாமி சன்னதிக்கு வடக்கில் அம்பாள் உலகம்மை சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் அம்மை அழகே உருவாக, வலது கையில் மலர்ச் செண்டுடனும், இடது கையைத் தொங்க விட்டும், நின்ற கோலத்தில், திருவதனம் சிரித்த முகத்துடன் காட்சிதருகிறாள்

 

புடவையில் தாம்பூல எச்சில் காட்டி நமச்சிவாய கவிராயருக்கு அருள்புரிந்த வரலாறு:

 

முற்காலத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் உலகம்மை மீது அளவு கடந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். இவர் தினந்தோறும் பாவநாசம் திருக்கோயிலுக்குச் சென்று அர்த்தசாம வழிபாட்டில் அம்பிகையை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

 

ஒருநாள் இவர் இங்கு தரிசனம் முடித்துவிட்டு அம்மையின் மீது பாடல்களைப் பாடிகொண்டு நடந்தபடியே வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், உலகம்மை கவிராயரின் பாடல்களைக் கேட்டவாறே அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து வருகிறாள்.

 

கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சிலை அவர் உமிழ்ந்து கொண்டே பாடி வர, அந்த உமிழ்ந்த எச்சில் பின் தொடர்ந்து வந்த அம்மையின் மீதும் பட்டுவிட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள்.

 

மறுநாள் காலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர், அம்மையின் வெண்ணிற ஆடை முழுவதும் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் பதறுகிறார். பின்னர் இவ்விஷயம் மன்னனிடம் முறையிடப்பட, மன்னனும் திருக்கோவில் வந்து பார்வையிட்டு, அதற்குரிய பிராயச்சித்த பூஜைகள் செய்ய உத்தரவிடுகிறார். இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகவும் உத்தரவு பிறப்பிக்கிறார்.

 

இதனால் தாம்பூலம் தரிக்கும் பழக்கமுடைய நமச்சிவக்கவிராயர் மீது சந்தேகம் கொண்டு, அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் அரண்மனை வீரர்கள். அன்றிரவு மன்னன் கனவில் அம்மை தோன்றி, நடந்த விவரங்களை கூறினாள். இதனால் திகைத்து விழித்தெழுந்த மன்னன் மறுநாள் காலை நமச்சிவாயக்கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை உலகறியச்செய்ய எண்ணி, அம்மையின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்து பொன் கம்பிகளால் கட்டிவைத்து, கவிராயரின் பக்தி உண்மையென்றால் அவர் பாடும் பாடல்களுக்கு இசைந்து அப்பூச்செண்டு கவிராயரின் கைகளுக்கு தானே வர வேண்டும் என கட்டளையிடுகிறான்.

 

உடனே நமச்சிவாய கவிராயரும் அம்மை மீது அந்தாதி பாடல்களை பாடினார். அப்படி அவர் பாடிய ஒவ்வொரு பாடலின் முடிவிலும், அம்மையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இறுதியாக கவிராயர்.,

 

"விண்டல நின்ற சரற்கால சந்த்ரசு வேதமுக

மண்டல மும்கை மலரோடுந் தோளின் வழிந்தரத்ன

குண்டல மும்பொலி வாலப் பிரயாக் குமாரத்தியாய்ச்

செண்டலர் செங்கை உலகாள்என் நாவில் சிறந்தனளே"

 

என்ற பாடலை பாடி முடிக்கவும் அம்மையின் கரங்களில் இருந்த பூச்செண்டு கவிராயர் கைக்கு தானாக வந்தது. இதனைக்கண்ட மன்னனும் கவிராயரின் பக்தியை மெச்சி, அவரை விடுதலை செய்து, அவரிடம் மன்னிப்பு கோரினான். இதன்மூலம் நமச்சுவாயக் கவிராயரின் புகழை அம்மை உலகறியச்செய்தாள்.

 

மஞ்சள் பிரசாத மகிமை:

 

உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரலி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இந்த மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது நம்பிக்கை. மேலும் இத்தீர்த்தம் சகல ரோக நிவாரணியாகவும் இருக்கிறது.

 

இங்கு தினமும் உச்சிக்கால பூஜையின் போது, சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களை தாமிரபரணி நதியில் மீன்களுக்கு படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.

 

புனுகு சபாபதி சிறப்பு:

 

இக்கோவிலில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் காட்சித்தரும் ஆடல்வல்லானின் திருநாமமே "புனுகு சபாபதி" ஆகும். இவருக்கு புனுகு காப்பு சாத்தப்பட்டே காட்சியளிப்பார். அருகில் சிவகாமசுந்தரி அம்மையும் அழகாக காட்சித்தருகிறாள்.

 

இங்கு வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மகரிஷி ஆகியோருக்கு தைப்பூசத்தன்று இறைவன் திருநடன காட்சியளித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த கோவில் சகல தோஷ பரிகார தலமாக விளங்குவதால், இங்குள்ள தாமிரபரணியில் நீராடி இறைவனை தரிசித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகி, பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.

 

அம்பாசமுத்திரம் அருகே உள்ள இந்த தலத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்து இறைவன் அருள் பெறுங்கள்.