Tuesday, September 30, 2025

 

வால்மீகியின் 

கிஷ்கிந்தா காண்டம்

 

சீதையைத் தேடுதல்  

 

பதிவு எண்: 328

 

முந்தைய பதிவின்  தொடர்ச்சி.................

 


வடவாக்னியைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமா? அது எவ்வாறு உண்டானது?

 


இதற்கு ஒரு நீண்ட கதை மகாபாராதம் ஆதி பர்வத்தில் உண்டு.

 


  "கிருதவீர்யன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் ஒருவன் இருந்தான். பூமியின் மன்னர்களில் காளையான அவன், வேதமறிந்த பிருகு வம்சத்தவரின் சீடனாக இருந்தான். , அந்த மன்னன் சோம வேள்வியை முடித்து, பிராமணர்களுக்கு அரிசி மற்றும் பெரும் செல்வங்களைப் பரிசுகளாகக் கொடுத்து அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான். அப்போது, அந்த ஏகாதிபதி சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனது வழித்தோன்றல்களுக்குச் செல்வம் தேவைப்பட்டது. பிருகு குலத்தவர் வளமையாக இருப்பதை அறிந்த அந்த இளவரசர்கள், அந்த பிராமணர்களில் சிறந்தவர்களிடம் பிச்சைக்காரர்கள் வடிவில் சென்றனர். பிருகு வம்சத்தவரில் சிலர், தங்கள் செல்வங்களை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்தனர், சிலர் க்ஷத்திரியர்கள் மீது கொண்ட அச்சத்தினால் (வேறு) பிராமணர்களுக்குக் கொடுத்தனர். பிருகு குலத்தவரில் சிலர் க்ஷத்திரியர்களுக்கு அவர்கள் வேண்டிய அளவுக்குக் கொடுத்தனர் இருப்பினும், சில க்ஷத்திரியர்கள், ஒரு குறிப்பிட்ட பார்கவரின் இல்லத்தில் நிலத்தைத் தோண்டிப் பெரும் செல்வப்புதையலை அடைந்தனர். அப்புதையல் அங்கிருந்த க்ஷத்திரியக் காளைகளால் கண்டெடுக்கப்பட்டது.

 


பிருகு குலத்தவரின் வஞ்சகமான இந்த நடத்தையால் கோபம் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள், அந்த பிராமணர்கள் தங்களிடம் கருணை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும் அவர்களை அவமதித்தனர். அந்தப் பெரும் வில்லாளிகள் பிருகு வம்சத்தவரைத் தங்கள் கூரியக் கணைகளால் கொல்லவும் தொடங்கினர். உலகத்தையே சுற்றி வந்த அந்த க்ஷத்திரியர்கள், பெண்களின் கருவறையில் இருக்கும் பிருகு வம்சத்தவரின் கருவைக் கூட கொன்றனர். பிருகு வம்சம் இப்படி அழிக்கப்பட்ட போது, அக்குலத்தின் பெண்கள் பயம் கொண்டு, யாரும் அணுக முடியாத இமயத்தின் மலைகளுக்குச் சென்றனர்..

 


அவர்களில் அழகான தொடைகளைக் கொண்ட ஒருத்தி, தனது கணவனின் குலத்தைத் தழைக்க வைக்க, தனது தொடைகளில் ஒன்றில் பெரும் சக்தி கொண்ட ஒரு கருவைத் தாங்கினாள்.. இதை அறிந்த ஒரு குறிப்பிட்ட பிராமண மங்கையொருத்தி, அச்சத்தினால் பீடிக்கப்பட்டு, க்ஷத்திரியர்களிடம் சென்று உண்மையைச் சொன்னாள்.  இதையறிந்த க்ஷத்திரியர்கள் அக்கருவைக் கொல்லச் சென்றனர். அப்பெண் இருந்த இடத்திற்கு வந்த க்ஷத்திரியர்கள், பிரகாசமாக இருந்த அந்தத் தாயாகப் போகிறவளைக் கண்டார்கள். இதன்பேரில், தொடையிலிருந்த அக்குழந்தை, அவளது தொடையைக் கிழித்துக் கொண்டு, நடுப்பகல் சூரியன் போல வெளியே வந்து,  அந்த க்ஷத்திரியர்களின் கண் பார்வையைப் பறித்துத் திகைப்பூட்டினான்.


தொடரும் 

No comments: