Saturday, September 27, 2025

 


வணக்கம்

 

பல ஆண்டுகளாக முகநூலில் எனது இராமாயணத் தொகுப்புகளைப் பதிவிட்டு வந்தேன். ஆனால் முகநூல் நிறுவனம் எனது கணக்கை முடக்கி விட்டது.  இதனால் எனது பதிவுகளை இந்த பிளாக்கில் பதிவிட முடிவு செய்துள்ளேன். முகநூலில் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன். தங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி..

 

 

வால்மீகியின் கிஷ்கிந்தா காண்டம்

 

இராமனின் கோபம்

 

பதிவு எண்: 326

(ஆர். சேஷாத்ரிநாதன்)


இரகுநாதன்‌ சுக்ரீவனின்‌ கெளரவமான மொழிகளைக்‌ கேட்டுச்‌ சந்தோஷம்‌ கொண்டு மெச்சி “சுக்ரிவ! உனது சுபாவமான எளிமை பூண்ட தொண்டின்‌ தன்மையைக்கண்டு உளங்களிக்கிறேன். இப்பொழுது இவர்கள் செய்ய வேண்டியது இதுதான். வைதேஹி உயிருடன் இருக்கிறாளா?  எங்கிருக்கிறாள்? இராவணன் எங்கிருக்கிறான்? இதைக் கண்டுபிடித்து வந்து சேரவேண்டும். இதையறிந்த பின் உன்னுடன் கலந்தாலோசித்து நடக்கவேண்டியதை முடிவு செய்வோம்”என்றான்.

 

மேலும்‌ சொன்னான்‌ “வானரேசா! இதுதான்‌ கண்டறியவேண்டிய விஷயம்‌. அவர்களுக்கு நீதான் கட்டளை இட வேண்டும் அது உனது உரிமை. நீ என்‌ நலனைக்‌ கோருபவன; நட்பை கெளரவிப்பவன்‌; பராக்கிரமசாலி; ஞானவான்‌; ஆகவே மைதிலியைத் தேடுவதிலும்‌, இராவணனின்‌ இருப்பிடத்தை அறிவதிலும்‌ எனது ஆத்திரம்  உனதே என்றறிவேன்‌ ”' என்றான்.

 

இவ்வாறு இராமன் சொன்னவுடன் சுக்ரீவன் தனது அருகில் உள்ள ‘வினதன்’ என்ற சேனாதிபதியை அழைத்தான். அவனிடன் “வீரனே! நீயும் உன்னுடைய வீரர்களும்  கிழக்கு திசையிலுள்ள  அனைத்து பகுதிகளிலும் புகுந்து சீதை மற்றும் இராவணனைக் கண்டு பிடிக்கவேண்டும். (இங்கு சுக்ரீவன் கிழக்கு என்றது, விந்த்ய மலைக்கும், இமய மலைக்கும் நடுவில் இருந்த ஆர்யாவர்த்தம் என்கிறார் உரையாசிரியர்) விரிவான பிரதேசம்‌ கிழக்கு திசையிலுள்ளது. நேரே மலைகள், நதிகள், வனங்கள், குகைகளைக் கடந்து சென்றால் அழகிய பாகீரதி,  யமுனை, ஸரஸ்வதி, சிந்து, சோணை ஆதிய இவ்வைந்து நதிகளும்‌ ஓவ்வொன்றாகத்‌ தோன்றும்‌.

 

இவைகளைக்‌ கடந்து, காலமகி, பிரும்மமாலம்‌, விதேகம்‌, மாலவம்‌, காசி, கோசலம்‌, மகதம்‌, புண்ட்ரம்‌, வங்கம்‌, கோசகம்‌ முதலிய இராஜ்யங்களைக்  கண்டு, பட்டணங்களிலும்‌, கிராமங்களிலும்‌, வனங்களிலும்‌ ஓடைகளிலும்‌ கவனித்துச்‌ சீதையைக்‌ தேடவேண்டும். ஒன்றையும் விடாது மிக்க ஊக்கத்துடனும், ஜாக்கிரதையுடனும் விரைந்து ஆழ்ந்து தேடவேண்டும். பின்பு ரஜதாகரம் என்ற கிழக்குப் பிராந்தியம் (ஜகர்தா) கிட்டும்.. இது உயர்ந்த உலோகங்கலுள்ள நாடு. மிகுந்த வளமுள்ளது. அங்கே கர்ணப்ராவணர்கள்‌, ஓஷ்டகர்‌, கோரலோமுகர்‌, ஜவனர் (யவனர்) ஏகபரதகர்‌, அ்ஷபர்‌ என்ற பலிஷ்டர்களும், புருஷாதகர்கள், கிராதர்,  கர்னசுடர்‌, ஹேமாங்கர்களும்‌ வசித்து வருவதைப்‌ பார்ப்பீர்கள்.

 

‌அங்கங்கே  கோடிக்கணக்கான அரக்க நரவியாகிரர்கள்‌ (மலைவாசிகள்‌), சிலர் தண்ணீருக்குள்ளேயே  வசிப்பவர்கள்‌;  இவர்கள்‌ இருப்பிடங்களையும்‌ துருவித் தேடவேண்டும். இதுதான் யுவத்வீபமென்பது. (ஜாவா, இந்தோனேஷியா, சயாம், மலேஷியா என்ற நாடுகள்) இந்த யுவத்வீபத்தை தேடி காணாதபோது இன்னும்‌ நேர்கிழக்கே  சிசிரமென்ற மிக உயர்ந்‌த மலை ஒன்று உண்டு. அதில் அநேக புக முடியாத குகைகள்.   அங்கே பறந்தோ, தண்ணீரில்  நீந்தியோ, மடுக்களுள்‌ மூழ்கியோ, மறைந்தோ எல்லாவிடத்தையும்‌ தேட வேண்டியது. அங்கே  மந்தேகர்கள்‌ என்று அரக்கர்களைப்‌ பல உருவங்களில்‌  காண்பீர்கள். சிறிதும் பின் வாங்காது, மனஞ்‌ சோராது, உங்கள்‌ ஆற்றலைக்‌ கொண்டு தைரியமாயும்‌, சாதுர்யமாயும்‌, மாயமாயும்‌ தேடவேண்டும்‌. சில அரக்கர்கள் மரக் கிளைகளில் தொங்குவர். (மந்தேஹர்கள் தினமும் சூரியனின் பாதையைத் தடுத்து, சூரிய உதயத்தின்போது அவனைக் கைப்பற்ற முயற்சிக்கும் உயிரினங்களாவர். அந்த நேரத்தில், காயத்ரி மந்திரமோதும் பக்தர்கள், காயத்ரிக்கு நீர்க்காணிக்கையை அளிக்கின்றனர். இந்த நீர்க்காணிக்கைகளும், காயத்ரி மந்திரத்தின் சக்தியும் சேர்ந்து மந்தேஹர்களைத் தாக்கி சூரியனின் பாதையிலுள்ள தடையை அகற்றுகின்றன. இவ்வாறு செல்லும் சூரியன் அவர்களை எரிக்கிறான். ஆனால் மந்தேஹர்கள் மீண்டும் தங்கள் உயிர்களை அடைந்து, அடுத்த நாள் காலையில் மலைச்சிகரங்களில் தொங்கி மீண்டும் சூரியனின் பாதையைத் தடுக்கத் தொடங்கி, மீண்டும் காயத்ரி மந்திரங்களாலும், நீர்க்காணிக்கைகளலும் கடலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது நாள்தோறும் தொடர்கிறது என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்))

 

இவர்களுள் புகுந்து தேடியபின்  மைதிலியைக் காணாவிடில்‌ இன்னும்‌ கிழக்கே சென்று, ஷீரோதமெனும்‌ கடலையடையுங்கள். ‌. அதன்‌ மத்தியில்‌ திவ்விய வாசனை நிரம்பிய வெள்ளிமயமான விருஷப மென்ற மலையொன்று உண்டு. பொன்மயமான சுதர்சனமெனும்‌ தடாகமூம்‌ காணப்படும். அதுதான் தேவர்களும்‌, சாரணர்களும்‌ யக்ஷர்களும்‌, கின்னரர்களும்‌, அப்ஸரஸ்‌களும்‌ உல்லாசமாய்க் காலங்கழிக்குமிடம்.. அதன் நேர்கிழக்கில்   சிறந்ததான ஜலோதமெனும்‌ கடல்‌ உண்டு. அங்குதான் கோபமே உருவாய்க் கொண்ட  தணலைக்‌ கக்கும்‌ வடவாக்கினி என்ற குதிரையைக்‌ காண்பீர்கள்‌. உலகையே இரையாய்க்‌ கொள்ளும்‌ காலாக்னி அது. அவ்விடத்திலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் அலறிக் கொண்டிருக்கும் மிக அற்புதமாகக் காட்சி யளிக்கும்‌ பிரதேசம்‌ இது,


தொடரும்

 

No comments: