Sunday, September 28, 2025

 

வால்மீகியின் 

கிஷ்கிந்தா காண்டம்

 

இராமனின் கோபம்

 

பதிவு எண்: 327

 

நேற்றைய தொடர்ச்சி.................

 

 

இங்கு சொல்லப்படும் வடவாக்னி என்றால் என்ன?

 


கடலின் நடுவில் வடவாக்னி உள்ளது என்று புராணங்களில் கூறப்படுகின்றது. நீரும் நெருப்பும் வேறு வேறு தன்மை கொண்டவை. நீர் நெருப்பினை அணைக்கும். நெருப்பு நீரினை வற்றச் செய்யும். ஆனால் வடவாக்னியை கடல்நீர் அணைப்பதுமில்லை: வடவாக்கினியும் கடல்நீரினை முற்றும் ஆவியாக மாற்றுவதில்லை. இறைவனே வடவாக்கினியாக இருப்பதால், நீரும் நெருப்பும் ஒரே இடத்தில் இருக்க முடிகின்றது. கடல்நீர் குறிப்பிட்ட அளவினைத் தாண்டாமல் செயல்படுகின்றது என்பது இந்து மத நம்பிக்கைகளில் ஒன்று. நீரகத்தே அழலானான் என்று வடவாக்னியாக இறைவன் இருக்கும் தன்மையும் இங்கே உணர்த்தப்படுகின்றது.

 


வெற்புறுத்திய திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி

மின்னின் ஒளி முத்தின் சோதி

ஒப்புறுத்த திருவுருவத்து ஒருவன் தன்னை ஓதாதே வேதம்

உணர்ந்தான் தன்னை

அப்புறுத்த கடல் நஞ்சம் உண்டான் தன்னை அமுது உண்டார்

உலந்தாலும் உலவாதானை

அப்புறுத்த நீரகத்தே அழலானானை ஆரூரில் கண்டு அடியேன்

அயர்த்தவாறே

 


தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகத்திலும் இதைப் பற்றிய குறிப்பு உள்ளது

 


ஆலேபவந்தம் மதநாங்கபூத்யா

சார்தூலக்ருத்யா பரிதானவந்தம் |

ஆலோகயே கஞ்சன தேசிகேந்தர:

மக்ஞானவாராகர பாடபாக்னிம் || 10 ||

 


மன்மதனை எரித்த சாம்பலைப் பூசிக் கொண்ட வரும், புலித்தோலைப் போர்த்திக் கொண்டவரும், அக்ஞானமாகிற ஸமுத்திரத்திற்கு வடவாக்னி போல் இருப்பவருமான ஓர் சிறந்த ஆசார்யனை தரிசிக்கிறேன்.

 


ஆதி சங்கரரின் வேதாந்த முரசிலும் வடவாக்னி பற்றிய குறிப்பு உள்ளது.

 

ஆனந்தமும், அறிவும், ஆத்மானுபவமும் நிறைந்தவன் நான்.

காணப்படும் பிரகிருதியைப் பற்றிய எண்ணத்திலிருந்து நான் வெகுதூரம் விலகியவன்.

எது அப்ராகிருதமோ அதனால் நான் என் உள்ளத்தில் மகிழ்கிறேன்.

நான் தான் உலகங்களின் ஆதி.

உபநிஷத உத்யானத்தில் விளையாடுபவன் நான்.

பொங்கி வழியும் துக்கக் கடலை வற்றச் செய்யும் வடவாக்னி நான்.

மேலும் கீழும் நாற்புறங்களிலும் என்னுடைய அதிசயமான பெருமைகளால்

நான் அனைத்தையும் வியாபித்து நிற்கிறேன்.

வாதத்தாலும் பிரதிவாதத்தாலும், ஆராய்ச்சியாலும்,

நிர்ணயிக்கப்பட்தாய் காணும் பரம புருஷன் நானே.

 

 


வடவாக்னியைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமா?  நாளை பார்க்கலாம்

 

No comments: