எனது அம்பை பயணம்
திருவாலீஸ்வரம்
(ஆர்.சேஷாத்ரிநாதன்)
இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்
நான் தஞ்சாவூரில் வங்கிப் பணியில் இருந்தபோது முதன் முதலாக தஞ்சை பிரஹதீஸ்வரர்
ஆலயத்திற்குச் சென்று இருந்தேன்.பணியில் இருந்ததால் ஈசன் அருகில் சென்று
தரிசிக்கும் பேறு எளிதாக கிடைத்தது. அன்று
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மிகப் பரவசமடைந்தேன். காரணம். நான்
நின்ற பகுதியில் அன்று மா மன்னன் இராஜ இராஜ சோழன் நின்று தரிசனம் செய்திருக்கக்
கூடும். அவன் கால் தடம் பதிந்த பகுதியில் நிற்பதால் நான் ஒரு பாக்கியசாலியாக
என்னைக் கருதினேன். தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அவர்களுக்காக இராஜ ராஜ சோழன் பெரிய கோவில் என்ற ஒரு பொக்கிஷத்தை அல்லவா
அளித்துவிட்டுச் சென்றுள்ளான். அன்று அதை ஒரு கோவிலாக மட்டும் பார்த்து தரிசனம்
செய்துவிட்டு வந்தேன். பின்னால் அவனைப் பற்றியும் தஞ்சைக் கோவிலைப் பற்றியும்
நன்கு தெரிந்து கொண்டபிறகு மீண்டும் மீண்டும் அந்தக் கோவிலைப் பார்க்கவேண்டும்
என்ற எண்ணம் வந்தது.
சமீபத்தில் குல தெய்வ வழிபாட்டிற்காக அம்பாசமுத்திரம் சென்றபோது
என்னைக் கவர்ந்த இரண்டு கோவில்களைப் பற்றி சொல்லி இருந்தேன். ஒன்று பழைய பாபநாசக்
கோவில். அதைப் பற்றி சென்ற பதிவில் எழுதிவிட்டேன். மற்றொன்று அம்பை அருகே உள்ள திருவாலீஸ்வரம்.. அன்று
பிரதோஷம். எனது மைத்துனர் என்னை மூன்று முக்கிய சிவாலயங்களுக்கு அழைத்துச்
செல்வதாகச் சொல்லி முதலில் நாங்கள் சென்ற கோவில் திருவாலீஸ்வரம். கடனா நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோவில்
ஆள் அரவமற்ற பகுதியில் உள்ளது. கோவில் அருகே சென்றதும் அங்கிருந்த அறிவிப்பு
பலகைகளைப் பார்த்து இந்தக் கோவில் தொல்பொருள் துறையின் கீழே உள்ளது என்று நான் தெரிந்து கொண்டேன்
கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர். உள்ளே நுழைந்ததும் ஒரே பிரமிப்பு. தொல் பொருள்
துறையின் கீழ் இருந்தாலும் கோவில் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டு வருகிறது. வெளியே
தோட்டங்கள் பசுமையாக உள்ளன.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்
இந்தக் கோவில் இராஜ இராஜ சோழனால் பாண்டிய மண்டலத்தில் கட்டப்பட்ட கோவில். தஞ்சைப்
பெரிய கோவிலுக்கு முன்னால் கட்டப்பட்டதாகும். தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்னோடி
இந்தக் கோவில் என்று சொல்லப்படுகிறது. ஆக நெல்லை மண்ணைச் சேர்ந்தவர்களும்
பாக்கியசாலிகள் தான் இராஜ இராஜ சோழனிடமிருந்து இந்த கோவிலைப் பரிசாகப்
பெற்றதற்காக. ஆனால் வருத்தும் விஷயம் என்னவென்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
உற்சவங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், அலைமோதிய மக்கள் என்று இருந்த கோவில் இன்று
பக்தர்கள் வருகையை எதிர்பார்த்து நதிக் கரையில் காத்துக் கிடக்கிறது. பலருக்கு இப்படி ஒரு
கோவில் இருப்பதே தெரியவில்லை என்பதும் வருத்தத்தற்குரிய விஷயம்.
அம்பாசமுத்திரத்திலிருந்து எட்டு கிலோ
மீட்டர் தொலைவிலும் மற்றும் பிரம்மதேசம்
அருகே உள்ள கோவில் இது . கருவறையைச் சுற்றிலும் கல்வெட்டுகள். இக்கல்வெட்டில் இவ்வூர்
இராஜராஜ சதுர்வேதி மங்கலம் எனப் பெயர்பெற்ற பிரம்மதேயம் என்றும் இது இராஜராஜ
நாட்டின் உட்பிரிவாகிய முள்ளி நாட்டுள் அமைந்திருந்தது என்பதையும் தெரிவிக்கிறது. கல்வெட்டுக்கள்
ஒவ்வொன்றும் இராஜராஜன் காலத்து அரசியல் நிகழ்வுகளின் ஆவணங்களாக அமைந்து தன்
ஆட்சியில் இராஜராஜன் செயல்படுத்திய நீர்மேலாண்மை, நில மேலாண்மை,
வரிவசூலிப்பு, தானங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய தகவல் பெட்டகமாக
அமைந்திருக்கின்றது.
கோவிலின் அடித்தளம் முதல் ஸ்தூபி வரை
கல்லாலேயே கட்டப்பட்டுள்ளது. சோழச் சிற்பக் கலைக்கு இக்கோவில் ஒரு
எடுத்துக்காட்டு. கோவில் விமானத்தின் உள்ள சிற்பங்கள் குறிப்பிட்டுச
சொல்லவேண்டியவை, அவைகளாவன கங்காதரர், ரிஷபாந்தகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர்,
காம தகன மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி . மூலவர் வாலீஸ்வரநாத சுவாமி, உடனுறை அன்னை
சௌந்தர்யா நாயகி. கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரமுள்ள அன்னை பிரதோஷ அலங்காரத்தில்
ஜொலிக்கிறாள்.
பலிபீடத்திற்கு அருகில் உள்ள தூணில்
உள்ள மற்றொரு கல்வெட்டு மூன்று கை மகாசேனை என்னும் சிறப்பு படைப்பிரிவு பெற்ற
வெற்றிகளை (இதில் காந்தளூர்ச் சாலை வெற்றியும் உண்டு) வரிசைப்படுத்துவதொடு
இக்கோவிலும், இக்கோவிலில் உள்ள கருவூலமும் கோவில் பணியாளர்களும் இப்படைப்பிரிவின்
பாதுகாப்பில் இருந்தனர் என்றும் இவர்கள் இவ்வூரில் அருகில் ஒரு நிலைப்படையாகத்
தங்கியிருந்தனர் என்பதனையும் தெரிவிக்கிறது. கோவிலில் அருகில் ஒரு பெரிய மண்டபம்
உள்ளது. இம்மண்டபம், கோவிலின் சுவர்கள் இவைகளைப் பார்க்கும்போது இவ்விடம் ஒரு ராணுவ
முகாம் போலச் செயல்பட்டிருக்கக்கூடும் என்று தெரிகிறது. அருகில் உள்ள
பிரம்மதேசத்திலும் நாலாயிரம் படைவீரர்கள் கொண்ட அமைப்பு நிலைப்படையாகத் தங்கி
இருந்தனர் என்றும் அவர்கள் அங்கிருந்த அம்மனை வழிபட்டனர் என்றும் தெரியவருகிறது.
இன்றும் அந்த அம்மனுக்கு நாலாயிரத்தம்மன் என்ற பெயரிட்டே வழிபாடு
செய்கின்றனர். பாண்டியர் மற்றும் சேரர்களைக்
கண்காணிக்கவே இந்தப் படைகள் இங்கு இருந்ததாகவும்
சொல்லப்படுகிறது.
கோவிலின் அமைப்பு, சிற்பங்கள் இவை எல்லாமே எல்லோராலும் பார்க்கப்படவேண்டியவை வணங்கப்படவேண்டியவை. ஆனால் பலராலும் அறியபடாமலேயே உள்ளது. எல்லோரும் உங்கள் குழந்தைகளை அழைத்து வாருங்கள் எதிர்காலத் தலைமுறைக்கு இறந்த காலத்தில் நிகழ்ந்த அற்புதங்களைக் காட்டுங்கள்..
No comments:
Post a Comment