Tuesday, January 17, 2023

 

எனது அம்பைப் பயணம்

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில்

(ஆர்.சேஷாத்ரிநாதன்)

 

கடலை ஆடையாக உடுத்த இம்மண்ணுலகத்திலேயே முதன்மை பெற்று விளங்கும் மலைகள் இந்தியாவில் தான் உள்ளன. கங்கை, சிந்து முதலிய நதிகளின் பிறப்பிடமாக விளங்கும் இமய மலையை விட பெரிய மலை எது? ஆனால் பல பெருமைகளை உடைய மலையாக இருந்தாலும் இமயமலை அது சிறிது காலத்திற்கு முன்தான் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். உலகிலேயே மிக முதிய மலை என்று தமிழ் நாட்டில் உள்ள பொதிகை மலையைத்தான் குறிப்பிடுகின்றனர். 

 

பாவநாசம் உலகாம்பிகை உடனுறை பாவவிநாச சுவாமி திருக்கோவில்

திருநெல்வேலி மாவட்டம்., மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சந்தனச் சோலைகளும், மூலிகைகளும், நிறைந்து, தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதிகைமலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகி பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையப்பெற்றுள்ளது., பாபநாச உலகாம்பிகை சமேத நாதர் திருக்கோவில்.

 

மூலவர்    :      பாபநாசநாதர்

பாவநாசர், வைராசர், பழமறைநாயகர், முக்களாமூர்த்தி, பரஞ்சோதி எனப் பல பெயர்கள் சொல்லப்படுகின்றன.

தன்னையடைந்தாரது பாவங்களைப் போக்குபவர் - பாவநாசர்; விராட்புருடன் வழிபட்டதால் - வயிராசர்; மூன்று வேதங்களும் களாமரங்களாக நின்று வழிபட்டதால் - பழமறை நாதர், முக்களாமூர்த்தி; மேலான சோதி வடிவாக விளங்குபவர் - பரஞ்சோதி என்பன பெயர்க் காரணங்களாம்.

 

அம்மன்/தாயார்  :      உலகம்மை, விமலை, உலகநாயகி

புராண பெயர்    :      இந்திரகீழ க்ஷேத்திரம்

 ஊர் :      பாபநாசம்

(தஞ்சாவூருக்குப் பக்கத்தில் உள்ள பாபநாம் என்பது வேறு.)

 

 

தலப்பெருமை:  

             

பெயர்க்காரணம்: அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரைக் கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை "பாபநாசநாதர்' என்கின்றனர். இத்தலத்திற்கு "இந்திரகீழ க்ஷேத்திரம்' என்ற பெயரும் இருக்கிறது.

 

 

சூரியதலம்: அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. அவையாவன

 

பாவநாசம் - சூரியன்

சேரன்மாதேவி - சந்திரன்

கோடகநல்லூர் - செவ்வாய்

குன்னத்தூர் - இராகு

முறப்பநாடு - குரு

ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்

தென்திருப்பேரை - புதன்

இராஜபதி - கேது

சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்

 

 

பாபநாசம் கோவில் வரலாறு

 

பாபநாசர் திருக்கோவில் 1000-2000 ஆண்டுகளுக்கு முன்பாக பழமை வாய்ந்தது. முற்காலத்தில் (கிருத யுகத்தில்) பார்வதிக்கும்-பரமேஸ்வரனுக்கும் நடைபெற்ற திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் இமயமலை அமையப்பெற்றுள்ள வடபகுதிக்கு வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்து விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த பரமேஸ்வரன் அகத்தியரை அழைத்து தென் திசை நோக்கிச் செல்ல கட்டளையிட, அகத்தியரோ தங்கள் திருமண காட்சி காண முடியாதே என வருந்த, பரமேஸ்வரன் இங்கு நடைபெறும் திருமணக்கோலத்தில் பொதிய மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்திலே சித்திரை மாதப்பிறப்பு தினத்தன்று வந்து காட்சி கொடுப்போம் என்று உறுதியளிக்கிறார். அவ்வாறே அகத்தியரும் அங்கிருந்து விடைபெற்று வரும் போது தாமிரபரணி தீர்த்தத்தை இறைவனிடமிருந்து தமது கமண்டலத்தில் பெற்று வந்துள்ளார்.

 

பின்னர் அகத்தியர் தென்பகுதி அடைந்து பரமேஸ்வரன் கூறியதை நிறைவேற்றிட, சித்திரை திங்களன்று திருமணக்கோலத்தில் இடபவாகனத்தில் அமர்ந்தபடி வானில் பார்வதியும் பரமேஸ்வரனும் காட்சியளித்து, அகத்தியரை பொதியமலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை இம்மலையின் உச்சியிலிருந்து தாமிரபரணி நதியாக பாய விட்டு விட வேண்டும் என்று கட்டளையிட்டார்.

 

இன்றும் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த வைபவம் இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் தேதியன்று இரவு 12: 00 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆக அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த கோவிலை பொருத்தவரை சரியான வரலாற்று தகவல்கள் கண்டறிய முடியவில்லை. ஆனாலும் பாண்டிய மன்னன் சந்திரகுல பாண்டியனால் மதுரை பகுதியில் உள்ள கோவில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது கோவிலின் மையத்தில் அமைந்துள்ள சன்னதி மற்றும் விமானத்தையும் சந்திரகுல பாண்டியன் கட்டியுள்ளார்.  கிபி 1609-23 ஆம் ஆண்டு மதுரை நாயக்கர் வம்சத்தில் மன்னன் வீரப்ப நாயக்கர் ஆட்சியாளராக இருந்த போது யாகசாலை, மற்றும் நடராஜ மண்டபம் மற்றும் துவஜஸ்தம்பம் (கொடித்தண்டு) முதலியவற்றை கட்டினார்

 

முக்கிளா லிங்கம்: இத்தலத்து லிங்கத்திற்கு " முக்கிளா லிங்கம்' என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

 

கல்யாணசுந்தரர் சன்னதி:

 

இங்கு சுவாமி, அம்மையோடு இடபவானத்தில் அமர்ந்தபடி திருமணக்கோலம் காட்டியருள, முன்னே அதனை தரிசித்தபடி அகத்தியரும் அவர் மனைவி லோபாமுத்ரையும் காட்சிதருகிறார்கள். சுவாமிக்கு குடைபிடித்தபடி குண்டோதரனும் இங்கு உள்ளார். இதுபோன்று ஒரே சன்னதியில் கல்சிற்ப மேனியராய் சுவாமி-அம்மையோடு இடபவாகனராய் காட்சியளிப்பது அபூர்வம்

 

அம்பாள் உலகம்மை :

 

இங்கு சுவாமி சன்னதிக்கு வடக்கில் அம்பாள் உலகம்மை சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் அம்மை அழகே உருவாக, வலது கையில் மலர்ச் செண்டுடனும், இடது கையைத் தொங்க விட்டும், நின்ற கோலத்தில், திருவதனம் சிரித்த முகத்துடன் காட்சிதருகிறாள்

 

புடவையில் தாம்பூல எச்சில் காட்டி நமச்சிவாய கவிராயருக்கு அருள்புரிந்த வரலாறு:

 

முற்காலத்தில் விக்கிரமசிங்கபுரத்தில் நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் உலகம்மை மீது அளவு கடந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். இவர் தினந்தோறும் பாவநாசம் திருக்கோயிலுக்குச் சென்று அர்த்தசாம வழிபாட்டில் அம்பிகையை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

 

ஒருநாள் இவர் இங்கு தரிசனம் முடித்துவிட்டு அம்மையின் மீது பாடல்களைப் பாடிகொண்டு நடந்தபடியே வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், உலகம்மை கவிராயரின் பாடல்களைக் கேட்டவாறே அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து வருகிறாள்.

 

கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சிலை அவர் உமிழ்ந்து கொண்டே பாடி வர, அந்த உமிழ்ந்த எச்சில் பின் தொடர்ந்து வந்த அம்மையின் மீதும் பட்டுவிட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள்.

 

மறுநாள் காலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர், அம்மையின் வெண்ணிற ஆடை முழுவதும் படிந்திருந்த தாம்பூல எச்சில் திவலைகளைக் கண்டு மனம் பதறுகிறார். பின்னர் இவ்விஷயம் மன்னனிடம் முறையிடப்பட, மன்னனும் திருக்கோவில் வந்து பார்வையிட்டு, அதற்குரிய பிராயச்சித்த பூஜைகள் செய்ய உத்தரவிடுகிறார். இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகவும் உத்தரவு பிறப்பிக்கிறார்.

 

இதனால் தாம்பூலம் தரிக்கும் பழக்கமுடைய நமச்சிவக்கவிராயர் மீது சந்தேகம் கொண்டு, அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் அரண்மனை வீரர்கள். அன்றிரவு மன்னன் கனவில் அம்மை தோன்றி, நடந்த விவரங்களை கூறினாள். இதனால் திகைத்து விழித்தெழுந்த மன்னன் மறுநாள் காலை நமச்சிவாயக்கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை உலகறியச்செய்ய எண்ணி, அம்மையின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்து பொன் கம்பிகளால் கட்டிவைத்து, கவிராயரின் பக்தி உண்மையென்றால் அவர் பாடும் பாடல்களுக்கு இசைந்து அப்பூச்செண்டு கவிராயரின் கைகளுக்கு தானே வர வேண்டும் என கட்டளையிடுகிறான்.

 

உடனே நமச்சிவாய கவிராயரும் அம்மை மீது அந்தாதி பாடல்களை பாடினார். அப்படி அவர் பாடிய ஒவ்வொரு பாடலின் முடிவிலும், அம்மையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இறுதியாக கவிராயர்.,

 

"விண்டல நின்ற சரற்கால சந்த்ரசு வேதமுக

மண்டல மும்கை மலரோடுந் தோளின் வழிந்தரத்ன

குண்டல மும்பொலி வாலப் பிரயாக் குமாரத்தியாய்ச்

செண்டலர் செங்கை உலகாள்என் நாவில் சிறந்தனளே"

 

என்ற பாடலை பாடி முடிக்கவும் அம்மையின் கரங்களில் இருந்த பூச்செண்டு கவிராயர் கைக்கு தானாக வந்தது. இதனைக்கண்ட மன்னனும் கவிராயரின் பக்தியை மெச்சி, அவரை விடுதலை செய்து, அவரிடம் மன்னிப்பு கோரினான். இதன்மூலம் நமச்சுவாயக் கவிராயரின் புகழை அம்மை உலகறியச்செய்தாள்.

 

மஞ்சள் பிரசாத மகிமை:

 

உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரலி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இந்த மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது நம்பிக்கை. மேலும் இத்தீர்த்தம் சகல ரோக நிவாரணியாகவும் இருக்கிறது.

 

இங்கு தினமும் உச்சிக்கால பூஜையின் போது, சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களை தாமிரபரணி நதியில் மீன்களுக்கு படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.

 

புனுகு சபாபதி சிறப்பு:

 

இக்கோவிலில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் காட்சித்தரும் ஆடல்வல்லானின் திருநாமமே "புனுகு சபாபதி" ஆகும். இவருக்கு புனுகு காப்பு சாத்தப்பட்டே காட்சியளிப்பார். அருகில் சிவகாமசுந்தரி அம்மையும் அழகாக காட்சித்தருகிறாள்.

 

இங்கு வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மகரிஷி ஆகியோருக்கு தைப்பூசத்தன்று இறைவன் திருநடன காட்சியளித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த கோவில் சகல தோஷ பரிகார தலமாக விளங்குவதால், இங்குள்ள தாமிரபரணியில் நீராடி இறைவனை தரிசித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகி, பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.

 

அம்பாசமுத்திரம் அருகே உள்ள இந்த தலத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்து இறைவன் அருள் பெறுங்கள்.




Tuesday, January 10, 2023

 

எனது அம்பை பயணம்

 

திருவாலீஸ்வரம்

(ஆர்.சேஷாத்ரிநாதன்)

 

இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் தஞ்சாவூரில் வங்கிப் பணியில் இருந்தபோது முதன் முதலாக தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று இருந்தேன்.பணியில் இருந்ததால் ஈசன் அருகில் சென்று தரிசிக்கும் பேறு  எளிதாக கிடைத்தது. அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மிகப் பரவசமடைந்தேன். காரணம். நான் நின்ற பகுதியில் அன்று மா மன்னன் இராஜ இராஜ சோழன் நின்று தரிசனம் செய்திருக்கக் கூடும். அவன் கால் தடம் பதிந்த பகுதியில் நிற்பதால் நான் ஒரு பாக்கியசாலியாக என்னைக் கருதினேன். தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்காக இராஜ ராஜ சோழன் பெரிய கோவில் என்ற ஒரு பொக்கிஷத்தை அல்லவா அளித்துவிட்டுச் சென்றுள்ளான். அன்று அதை ஒரு கோவிலாக மட்டும் பார்த்து தரிசனம் செய்துவிட்டு வந்தேன். பின்னால் அவனைப் பற்றியும் தஞ்சைக் கோவிலைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டபிறகு மீண்டும் மீண்டும் அந்தக் கோவிலைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது.

 

சமீபத்தில் குல தெய்வ  வழிபாட்டிற்காக அம்பாசமுத்திரம் சென்றபோது என்னைக் கவர்ந்த இரண்டு கோவில்களைப் பற்றி சொல்லி இருந்தேன். ஒன்று பழைய பாபநாசக் கோவில். அதைப் பற்றி சென்ற பதிவில் எழுதிவிட்டேன். மற்றொன்று  அம்பை அருகே உள்ள திருவாலீஸ்வரம்.. அன்று பிரதோஷம். எனது மைத்துனர் என்னை மூன்று முக்கிய சிவாலயங்களுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி முதலில் நாங்கள் சென்ற கோவில் திருவாலீஸ்வரம்.  கடனா நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோவில் ஆள் அரவமற்ற பகுதியில் உள்ளது. கோவில் அருகே சென்றதும் அங்கிருந்த அறிவிப்பு பலகைகளைப் பார்த்து இந்தக் கோவில் தொல்பொருள் துறையின்  கீழே உள்ளது என்று நான் தெரிந்து கொண்டேன் கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர். உள்ளே நுழைந்ததும் ஒரே பிரமிப்பு. தொல் பொருள் துறையின் கீழ் இருந்தாலும் கோவில் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டு வருகிறது. வெளியே தோட்டங்கள் பசுமையாக உள்ளன.

 

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்தக் கோவில் இராஜ இராஜ சோழனால் பாண்டிய மண்டலத்தில் கட்டப்பட்ட கோவில். தஞ்சைப் பெரிய கோவிலுக்கு முன்னால் கட்டப்பட்டதாகும். தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்னோடி இந்தக் கோவில் என்று சொல்லப்படுகிறது. ஆக நெல்லை மண்ணைச் சேர்ந்தவர்களும் பாக்கியசாலிகள் தான் இராஜ இராஜ சோழனிடமிருந்து இந்த கோவிலைப் பரிசாகப் பெற்றதற்காக. ஆனால் வருத்தும் விஷயம் என்னவென்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உற்சவங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், அலைமோதிய மக்கள் என்று இருந்த கோவில் இன்று பக்தர்கள் வருகையை எதிர்பார்த்து நதிக் கரையில் காத்துக் கிடக்கிறது. பலருக்கு இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியவில்லை என்பதும் வருத்தத்தற்குரிய விஷயம்.

 

அம்பாசமுத்திரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவிலும்  மற்றும் பிரம்மதேசம் அருகே உள்ள கோவில் இது . கருவறையைச் சுற்றிலும் கல்வெட்டுகள். இக்கல்வெட்டில் இவ்வூர் இராஜராஜ சதுர்வேதி மங்கலம் எனப் பெயர்பெற்ற பிரம்மதேயம் என்றும் இது இராஜராஜ நாட்டின் உட்பிரிவாகிய முள்ளி நாட்டுள் அமைந்திருந்தது  என்பதையும் தெரிவிக்கிறது. கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் இராஜராஜன் காலத்து அரசியல் நிகழ்வுகளின் ஆவணங்களாக அமைந்து தன் ஆட்சியில் இராஜராஜன் செயல்படுத்திய நீர்மேலாண்மை, நில மேலாண்மை, வரிவசூலிப்பு, தானங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய தகவல் பெட்டகமாக அமைந்திருக்கின்றது.

 

கோவிலின் அடித்தளம் முதல் ஸ்தூபி வரை கல்லாலேயே கட்டப்பட்டுள்ளது. சோழச் சிற்பக் கலைக்கு இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டு. கோவில் விமானத்தின் உள்ள சிற்பங்கள் குறிப்பிட்டுச சொல்லவேண்டியவை, அவைகளாவன கங்காதரர், ரிஷபாந்தகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், காம தகன மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி . மூலவர் வாலீஸ்வரநாத சுவாமி, உடனுறை அன்னை சௌந்தர்யா நாயகி. கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரமுள்ள அன்னை பிரதோஷ அலங்காரத்தில் ஜொலிக்கிறாள்.

 

பலிபீடத்திற்கு அருகில் உள்ள தூணில் உள்ள மற்றொரு கல்வெட்டு மூன்று கை மகாசேனை என்னும் சிறப்பு படைப்பிரிவு பெற்ற வெற்றிகளை (இதில் காந்தளூர்ச் சாலை வெற்றியும் உண்டு) வரிசைப்படுத்துவதொடு இக்கோவிலும், இக்கோவிலில் உள்ள கருவூலமும் கோவில் பணியாளர்களும் இப்படைப்பிரிவின் பாதுகாப்பில் இருந்தனர் என்றும் இவர்கள் இவ்வூரில் அருகில் ஒரு நிலைப்படையாகத் தங்கியிருந்தனர் என்பதனையும் தெரிவிக்கிறது. கோவிலில் அருகில் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. இம்மண்டபம், கோவிலின் சுவர்கள் இவைகளைப் பார்க்கும்போது இவ்விடம் ஒரு ராணுவ முகாம் போலச் செயல்பட்டிருக்கக்கூடும் என்று தெரிகிறது. அருகில் உள்ள பிரம்மதேசத்திலும் நாலாயிரம் படைவீரர்கள் கொண்ட அமைப்பு  நிலைப்படையாகத் தங்கி இருந்தனர் என்றும் அவர்கள் அங்கிருந்த அம்மனை வழிபட்டனர் என்றும் தெரியவருகிறது. இன்றும் அந்த அம்மனுக்கு நாலாயிரத்தம்மன் என்ற பெயரிட்டே வழிபாடு செய்கின்றனர்.  பாண்டியர் மற்றும் சேரர்களைக்  கண்காணிக்கவே இந்தப் படைகள் இங்கு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

கோவிலின் அமைப்பு, சிற்பங்கள் இவை எல்லாமே எல்லோராலும் பார்க்கப்படவேண்டியவை  வணங்கப்படவேண்டியவை. ஆனால் பலராலும் அறியபடாமலேயே உள்ளது. எல்லோரும் உங்கள் குழந்தைகளை அழைத்து வாருங்கள் எதிர்காலத் தலைமுறைக்கு இறந்த காலத்தில் நிகழ்ந்த அற்புதங்களைக் காட்டுங்கள்..




















 

Tuesday, January 3, 2023

 

எனது அம்பை விஜயம்

 பழைய பாபநாசம் கோவில்

 (ஆர்.சேஷாத்ரிநாதன்)


 

எனது முந்தைய பதிவில் சொல்லி இருந்தேன். நெல்லை மாவட்டத்தில் இரண்டு கோவில்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதில் ஒன்று அம்பாசமுத்திரம் பிரம்மதேசம்  அருகே உள்ள திருவாலீச்வரம் மற்றொண்டு அம்பை அருகே சிவந்திபுரம் என்ற கிராமத்தில் உள்ள பழைய பாபநாசம் கோவில். பெயரில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் இது பொதிகை மலையின் அடிவாரத்தில் உள்ள பாபநாசம் கோவிலுக்கும் முந்தைய கோவில். நானும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் அம்பாசமுத்திரம் சென்று வருகிறேன். எனக்கும் இப்பொழுதான் இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்தது. திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், 38 கி.மீ., இங்கிருந்து பாபநாசம் சாலையில், 5 கி.மீ., சென்றால் சிவந்திபுரம் பேருந்து நிறுத்தம். மேலும், தெற்கே, 2 கி.மீ., சென்றால் கோவிலை அடையலாம்....

 

இது சம்பந்தமாக ஒரு கதை படித்தேன். தன்னை அறியாமல் சிலர், பாவம் செய்திருப்பர். பாவம் எதுவாயினும், அதற்கு தண்டனை உண்டு. காரணமே இல்லாமல் அவர்கள், தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பர். எதையெடுத்தாலும் தடங்கல், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்குதல்... கணவன், மனைவி ஒற்றுமையாக இருந்தாலும் பிரச்னை என, ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும்.... இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் கோவில் இது.

 

வட மாநிலத்தில் வசித்த ஒரு தம்பதி, தங்கள் ஊரில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக சொத்தை இழந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என, இரு குழந்தைகள்.... பஞ்சம் பிழைக்க, வெளியூர் புறப்பட்ட அவர்கள், பிள்ளைகள் தங்களுடன் வந்து கஷ்டப்பட வேண்டாம் என நினைத்து,இருவரையும் தத்துக் கொடுத்துவிட்டனர். அவர்கள் சென்ற பின், பஞ்சம் மேலும் அதிகரித்தது. தத்து பெற்ற குடும்பத்தினரும் வேறு ஊருக்கு சென்று விட்டனர். பல ஆண்டுகள் ஓடின. ஆண் குழந்தையை தத்தெடுத்த குடும்பத்தினர், தங்கள் மகனுக்கு பெண் பார்த்து திருமணமும் முடிந்து விட்டது. முதலிரவில் புதுமணத் தம்பதியர் பேசிக் கொண்டிருந்தனர்.தான் அந்த குடும்பத்தின் தத்துப்பெண் என்றும், வடமாநில கிராமம் ஒன்றில்இருந்து பஞ்சம் பிழைக்கச் சென்ற தன் பெற்றோர், அவர்களிடம் தன்னை ஒப்படைத்து சென்றதை கணவரிடம் தெரிவித்தாள்; மணமகன் அதிர்ச்சியடைந்தான்.'இவளது பெற்றோர் தானே எனக்கும் பெற்றோர். இவள் என் தங்கையல்லவா? தங்கை என தெரியாமல், அவளுக்கு தாலி கட்டி விட்டேனே... அடக்கொடுமையே, இதற்கு பரிகாரம் உண்டா?' என்று மனம் கலங்கினான். அவளுக்கும் அதே நிலை. இருப்பினும் அக்னி சாட்சியாக கட்டிய தாலியைக் கழற்றுவது, அக்காலத்தில் முடியாதது. முனிவரை சந்தித்து ஆலோசனை கேட்டனர்.

'நீங்கள் இருவரும் கருப்பு உடையணிந்து தீர்த்தங்களில் நீராடுங்கள். எங்கு நீராடும்போது, இந்த உடை வெண்மையாகிறதோ அன்று, உங்கள் பாவங்கள் நீங்கி விட்டதாகப் பொருள். அந்த நதியின் அருகிலுள்ள சிவாலயத்தில் வழிபாடு செய்யுங்கள். பாவம் முழுமையாக தொலையும்...' என்றார்.அவர்களும் பல தீர்த்தங்களில் நீராடினர். முதுமையும் அடைந்து விட்டனர். இதன் பிறகும் உடையின் நிறம் மாறவில்லை. கடைசி முயற்சியாக, தாமிரபரணியில் நீராடினர்; உடை வெள்ளையானது. பழைய பாபநாசநாதர் கோவிலுக்கு சென்றனர். அங்குள்ள உலகம்மனின் உக்ர பார்வையில், பாவம் முற்றிலும் நீங்கியது. அவள் மிக சக்தி மிக்கவளாக இருந்ததால், அம்பாளின் முன் நேராக நில்லாமல்,கல் ஜன்னல் அமைத்து, அதன் வழியாக தரிசிக்க வேண்டும் என, அவ்வூர் மக்களிடம் கூறினர். அதன்படி கல் ஜன்னல் அமைக்கப்பட்டது. அம்மனை இன்றும் அப்படித்தான் தரிசிக்கின்றனர் ஈசனின் பெயர் கைலாசநாதர். சுயம்புவானவர். சிறிய கோவில்.இன்னொரு விசேஷம். இந்தக் கோவிலில் நவக்ரகங்கள் கிடையாது. தற்போது, திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது,. எல்லோரும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஒருமுறை சென்று வாருங்கள்.