சோம்நாத்
(ஆர்.சேஷாத்ரிநாதன்)
பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் முதன்மையானது. இமயமலை தோன்றும்
முன்பே தோன்றியது. சிந்து சமவெளி நாகரீகத்தின் போது சிவனை பசுபதி என்று பெயரிட்டு வணங்கப்பட்ட
இடம்தான் குஜராத்தில் உள்ள சோம்நாத் என்ற கோவிலைத் தரிசனம் செய்ய பரோடாவில் இருந்து
இரவு வந்து சேர்ந்தோம். மறுநாள் காலை ஆறு மணி அளவில் கோவிலுக்கு கிளம்பினோம்.
கடும் பனி. கோவில் வாயிலை அடைந்த போது அலைமோதிய மக்கள் கூட்டம். கோவிலுக்கு உயிர்
கொடுத்து புனர் நிர்மாணம் செய்த வல்லபாய் படேல் வாயிலில் கற்சிலையாக காத்து நிற்கிறார்.
இனி இந்தக் கோவிலுக்கு எவனும் எந்தக் கெடுதலும் செய்து விட முடியாது.
மக்கள் எல்லோரும் அமைதியாக வரிசையில் சென்றனர். கடும் சோதனைக்குப்
பிறகே அனுமதி. ஆண்கள் பெண்கள் என்று இரு
வரிசை. எல்லோர் முகத்திலும் தோடுடைய செவியன், அந்த உள்ளம் கவர் கள்வனைக் காணப்
போகிறோம் என்ற ஆவல். தனி வரிசை இல்லை. சிறப்பு தரிசனம் இல்லை. அவன் முன் அவைவரும்
சமம் என்று எல்லோரும் கைகளைத் தூக்கி ஹர ஹர மகாதேவா என்று கோஷமிட்டுக் கொண்டே சென்றனர்.
வட இந்தியர்களின் முரட்டுப் பக்தியைப் பார்க்க முடிந்தது. வரிசையாக வண்ண வண்ண
ஆடைகளில் சிறுமியர், பெண்கள். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையை இறைவனுக்கு
அறிமுகப்படுத்த வேண்டி அணைத்து எடுத்து வந்த அந்த இளம் தந்தை. வெளியில் இருந்தே
அவனைக் காண பெரிய பெரிய ஒளித் திரைகள். ஒருவரை ஒருவர் தள்ளாமல் ஒருவரை ஒருவர்
மதித்து வரிசையில் செல்கின்றனர்.
சிவனைக் கண்டதும் செய்வதறியாமல் அப்படியே பார்த்தக் கொண்டிருந்த போது
பின்னால் வருபவர்களும் தரிசிக்க வேண்டி வரிசையில் இருந்து வெளி வந்து மீண்டும்
வரிசையில் சேர்ந்து மீண்டும் மீண்டும் அவனைத் தரிசித்துக் கொண்டிருந்தனர்.
உண்டியல்கள் உள்ளன. அர்ச்சர்கர்கள் தட்டுகளை நீட்டுவதே இல்லை. காலை மணி 7.30க்கு
ஆரத்தி. அதற்காககே காத்துக் கொண்டிருப்போர். அதற்காக இறைவனை மறைத்து திரை
போடுவதில்லை. நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்பலத்தில் ஆடுபவனுக்கு
அலங்காரம் நடந்து கொண்டிருந்தது
.
ஆரத்திக்கான நேரம் வந்ததும்
அர்ச்சகர் தீப ஆராதனைத் தட்டை அப்பசுபதியின் முன் நீட்ட. பிரமாண்ட ஆலயமணியின்
ஒலி ஒருபுறம்; மேள ஒலி ஒருபுறம்; கைகளைத் தூக்கி ஹர ஹர மகாதேவா என்று கதறும்
மக்கள் குரல் ஒருபுறம்; அதிர்வலைகளின் நடுவே
மிதந்த அந்த இடத்தைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
தன்னிடமிருந்த சங்கை எடுத்து ஊதுகிறார் ஒருவர். ஒருவர் உடுக்கை அடிக்கிறார்.
பலரின் கண்களில் தாரைதாரையாக் கண்ணீர். எல்லோரும் உணர்ச்சிப் பிழம்பாய் நின்றனர்.
ஆராதனை முடிந்ததும் எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்பினர். அங்கிருந்து
வெளிப்பக்கம் வந்ததும், குளிர்நிறைந்த இதமான காற்று; மனதில் உள்ளவற்றை எல்லாம்
அவனிடம் இறக்கி வைத்தது போன்ற ஒரு உணர்வு.எதிரே பிரமாண்டமான கடல். கடல் கடந்து
வந்து பலமுறை நடந்த கொள்ளைகளுக்கு சாட்சியாய். நெற்றியில் சாம்பலைப் பூசி ஒரு
கையில் உடுக்கையுடனும் மறுகையில் நெருப்புடனும் இடுகாட்டில் நடன மாடிக்
கொண்டிருந்தவனிடம் அப்படி என்னதான் திரும்பத் திரும்ப கொள்ளையடித்தனர். ஆதியும்
அந்தமும் இல்லாமல் அழிவே இல்லாத அந்த ஆலஹாலம் உண்டவனின் திருமேனியை எத்தனை முறை சிதைத்தனர்
அற்பர்கள். அனைத்திற்கும் அந்த கடலே சாட்சி.
எனக்குக் கிடைத்த இந்த ஆனந்தம் நீங்கள் பெற வேண்டாமா.? அலைகள் சென்று மீண்டும் வருவது போல பிரச்னைகள் என்றும் ஓயப்போவதில்லை. குடும்பம், சொந்தம், பந்தம், குழப்பங்கள், என்ற மாய விலங்குகள் எல்லோர் மனத்திலும் கைகளிலும் தொங்குகின்றன. யாரும் வற்புறுத்தி இந்த விலங்குகளை நாம் சுமக்கவில்லை. வழிவழியாய் நாமே விரும்பி ஏற்றுக்கொண்டவை. அதற்கு நாமே பொறுப்பு என்ற பெயர் சூட்டி வைத்துள்ளோம். இந்த விலங்குகளிடமிருந்து எப்படி விலகுவது. மகாபெரியவர் சொன்னது போல் பழுத்த வெள்ளரிப் பழம் கொடியை விட்டு தானே விலகுவது போல, நாம் எந்தப் பந்தங்களிருந்தும் விலகப் போவதில்லை. ஆனால் நமது மனத்திற்கும் சற்று ஒய்வு, ஆறுதல் வேண்டுமே. சிறுது காலம் இந்த விலங்குகளைக் கழற்றி வைத்துவிட்டு வாழ்க்கையில் ஒரு நாளாவது அவனைச் சரணடைந்து அவன் தாழ் பணிவோம். அவனுக்குத் தெரியும் இவனுக்கு என்ன செய்ய வேண்மென்று.
மீண்டு வந்து மீண்டும் அந்த விலங்குகளை மாட்டிக் கொள்வோம்.
ஓம் சிவாய நமஹ